மஹாபாரதத்தில் இருந்தே போலிச் செய்திகள் உள்ளன: மத்திய தகவல் ஆணையர் மாடபூஷி ஸ்ரீதர் #BeyondFakeNews

Image caption மாடபூஷி ஸ்ரீதர்

ஹைதராபாதில் நடந்த போலிச் செய்தி குறித்த #BeyondFakeNews பிபிசி கருத்தரங்கில் பேசிய மத்திய தகவல் ஆணையர் மாடபூஷி ஸ்ரீதர் மஹாபாரதத்தில் இருந்தே போலிச் செய்திகள் இருப்பதாக கூறினார்.

தேர்தலோ, போரோ, எதிர்த் தரப்பின் பலவீனத்தை தெரிந்துகொண்டால் ஒருவர் வெற்றி பெறலாம். பயனுள்ள உண்மைச் செய்திகளைப் பயன்படுத்தினாலும், போரிலோ, தேர்தலிலோ வெற்றி பெறலாம்.

அதைப்போலவே தேர்தலிலும், போரிலும் வெற்றி பெறுவதற்காக போலிச் செய்திகளும் கருவியாகப் பயன்படுத்தப்படுகின்றன.

உண்மைச் செய்திகளைவிட போலிச் செய்திகள் எளிதில் சென்று சேர்கின்றன.

பிபிசி ஆய்வின் முழு அறிக்கை

போலிச் செய்திகளை பரப்புவது யார், அவர்கள் எப்படி பரப்படுகிறார்கள் போன்ற விவரங்களை உள்ளடக்கி பிபிசி மேற்கொண்ட ஆய்வின் முழு அறிக்கை இது.

போலி செய்திகளை யார், எப்படி பரப்புகிறார்கள்? பிபிசி நடத்திய ஆய்வின் முழு அறிக்கை

போலிச் செய்திகளை உருவாக்கும் நபர் அது போலிச் செய்தி என்று தெரிந்தே அதை உருவாக்குகிறார். இப்போது போலிச் செய்தியை எப்படி அடையாளம் காண்பது என்பதே விஷயம்?

ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் பல சமூக ஊடகக் கணக்குகளோடு கூடிய சமூக ஊடக வலைப்பின்னல் இருக்கிறது.

அவர்கள் செய்திகளை உருவாக்கி, மக்கள் மனங்களை இலக்காகவைத்து தகவல் போரை நடத்துகிறார்கள். அவர்கள் புரளிகளை, உருமாற்றம் செய்யப்பட்ட புகைப்படங்களை உருவாக்குகிறார்கள். அதன் மூலம் மக்களை சாதி, வகுப்பு மற்றும் குழு போன்ற அடையாளங்களின் அடிப்படையில் பிரிக்கிறார்கள்.

போலிச் செய்திகளைக் கட்டுப்படுத்த அரசு சட்டம் கொண்டுவந்தால், அது பேச்சுரிமையை, தகவல் பரிமாற்றத்தை கட்டுப்படுத்தும்.

இலக்கியக் கற்பனையை பொய் என்று வகைப்படுத்த முடியாது. அங்கதமும், கேலியும் உண்மையல்ல.

பின்விளைவுகளை ஏற்படுத்தும் பொய்களைச் சொல்ல உங்களுக்கு உரிமையில்லை. ஆனால், கேலி, இலக்கியக் கற்பனை, நகைச்சுவை ஆகியவற்றுக்காக பொய் சொல்லும் உரிமை உங்களுக்கு உண்டு.

உங்களிடம் வரும் தகவல் உண்மையா, அல்லது போலியா என்பதை புரிந்துகொள்வது உங்கள் பொறுப்பு.

மஹாபாரதத்தில் துரோணரின் மகன் அஸ்வத்தாமன் இறந்துவிட்டதாக கிருஷ்ணன் பரப்பிய பொய்யால் துயருற்ற துரோணரை பாண்டவர்கள் கொன்றனர். இது மஹாபாரதப் போரின் போக்கை மாற்றிய முக்கிய நிகழ்வு என்று குறிப்பிட்டார் மாடபூஷி.

நடவடிக்கை தேவை - மஹாராஷ்டிர முன்னாள் முதல்வர்

Image caption மும்பையில் நடந்த போலிச் செய்தி குறித்த பிபிசி கருத்தரங்கம்.

மும்பையில் நடந்த பிபிசி போலிச் செய்தி கருத்தரங்கில் பேசிய மகாராஷ்டிர முன்னாள் முதலமைச்சர் பிரித்விராஜ் சௌஹான், "தற்போது இந்தியாவில் நடைபெறும் அனைத்தும் ஒழுங்கற்ற முறையிலேயே நடக்கின்றன. சில வலதுசாரி இணையதளங்கள், போலிச் செய்திகளை பரப்பி வருகின்றன. அவர்களுக்கு யாரோ பண உதவி வழங்குகிறார்கள். தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்பு சட்டத்தின் படி, இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது காவல்துறையினரின் கடமை. ஆனால், போலீஸார் நடவடிக்கை எடுப்பதில்லை. யார் பிரதமர், யார் முதலமைச்சர் என்பதெல்லாம் விஷயமல்ல" என்றார்.

மும்பை கருத்தரங்கில் பேசிய சமூக செயற்பாட்டாளரான விஷ்வாம்பர் சவுத்திரி பேசுகையில், ''இந்தியாவில் உள்ள 125 கோடி மக்களும் பத்திரிக்கையாளர்களாக மாற வேண்டும். ஊடகத்தில் செய்திகள் சட்டவிதிகள் இருப்பதுபோல சமூக ஊடகத்திலும் செய்திகளை பகிரும் போதும் அவற்றை கண்காணிக்க விதிகள் உருவாக்கப்பட வேண்டும்'' என்றார்.

அரசியலில் மட்டுமல்ல மற்ற இடங்களிலும் போலிச் செய்திகள் உள்ளன

அமிர்தசரஸில் நடைபெற்ற #BeyondFakeNews பிபிசி கருத்தரங்கில் கலந்து கொண்ட பேராசிரியர் அமன் தீப், ''சமூக ஊடகங்களில் தனிப்பட்ட முறையில் செய்யப்படும் கேலி அல்லது கிண்டல்கள் குறித்து உடனிடியாக புகாரளிக்க வேண்டும். சில சமயம் சமூக ஊடகங்களில் வேண்டுமென்றே அவ்வாறு நம்மை சில நபர்கள் கேலி செய்கிறார்கள். சில நாட்களுக்கு துபாயில் வசிக்கும் ஒரு நபர் வேண்டுமென்றே அமன்! நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்; உங்ககளுக்கு திருமணம் ஆகவில்லையென்றால் நான் உங்களை மணந்து கொள்ள விரும்புகிறேன் என செய்தி அனுப்பினார்'' என்று கூறினார்.

இந்த கருத்தரங்கில் பேசிய பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் மாணவர் தலைவரான ஹசன் ப்ரீத், ''அரசியலில் போலிச் செய்திகள் குறிப்பிட்ட அளவில் வினையாற்றுவது போல பல்கலைக்கழகங்களிலும் அவற்றின் பங்கு உள்ளது. தற்போது போலிச் செய்திகள் பகிரப்படுவது திட்டமிட்ட ஒரு செயலாக நடைபெறுகிறது'' என்று தெரிவித்தார்.

சட்டம் கொண்டுவந்தால், ஊடக சுதந்திரம் கேள்விக்குறியாகும்

Image caption உத்தரப்பிரதேச துணை முதல்வர் தினேஷ் ஷர்மாவுடன் (வலது) உரையாடும் பிபிசி இந்தி சேவை ஆசிரியர் முகேஷ் ஷர்மா.

லக்னோவில் நடைபெற்ற #BeyondFakeNews கருத்தரங்கில் பேசிய உத்தர பிரதேச துணை முதலமைச்சர் தினேஷ் ஷர்மா பேசுகையில், "பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது மற்றும் உரிய சட்டத்தை கொண்டு வருவதன் மூலம், போலிச் செய்திகளை தடுக்க முடியும். ஆனால் சட்டம் கொண்டு வருவதில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. போலிச் செய்திகளை சரிபார்க்க சட்டம் கொண்டுவரப்பட்டால், ஊடக சுதந்திரம் குறித்த கேள்வி எழும்" என்றார்.

போலிச் செய்திகள் உருவாக்கம் திட்டமிடப்பட்டு நடத்தப்படுகிறது

டெல்லியில் நடந்த #BeyondFakeNews பிபிசி கருத்தரங்கில் பேசிய நடிகை ஸ்வரா பாஸ்கர், ''தற்போது மிகவும் திட்டமிடப்பட்டு போலிச் செய்திகள் உருவாக்கம் மற்றும் பரவுவது ஆகியவை நடத்தப்படுகிறது. இதன் பின்னணியில் நோக்கங்கள் உள்ளன. இவ்வாறான சூழல் முன்பு இல்லை'' என்று பேசினார்.

டெல்லி #BeyondFakeNews நிகழ்வில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும். அக்கட்சியின் சமூக ஊடக விவகாரங்களில் பொறுப்பாளருமான திவ்யா ஸ்பந்தனா, ''காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை போலிச் செய்திகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் மிகவும் ஒருங்கிணைந்த செயல்பாடு உள்ளதாக நான் கூறமாட்டேன். உண்மையை விட வேகமாக போலிச் செய்திகள் பரவுகிறது. பாஜகவை பொறுத்தவரை அவர்களிடம் அதிக அளவில் பணம் உள்ளதால், எஸ் சி ஓ பணிகளில் அவர்களால் வேகமாக இயங்க முடிகிறது'' என்று பேசினார்.

'சமுக ரீதியாக சிக்கல் ஏற்படுத்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது'

குஜராத்தின் துணை முதல்வரான நிதின் பட்டேல் அகமதாபாத்தில் நடந்த பிபிசி போலிச் செய்தி கருத்தரங்கில் பேசுகையில், ''பல நல்ல விஷயங்களுக்கு தொழில்நுட்பம் உதவிகரமாக இருந்த போதிலும், சிலர் இதனை தவறாக பயன்படுத்துகின்றனர். சமூகத்தில் தொந்தரவு உண்டாக்கவோ அல்லது அரசியல், சமூக ரீதியாக யாருக்கேனும் தீங்கு விளைவுக்கும் நோக்கிலோ இதனை பயன்படுத்துகின்றனர்.இதனை சமாளிக்க ஒரு சட்டத்தை உருவாக்க திட்டமிடப்படுகிறது. கடந்த மூன்று அல்லது நான்கு மாதங்களாக இந்த சட்டத்தை உருவாக்குவது தொடர்பாக விவாதித்து கொண்டிருக்கிறோம்'' என்று குறிப்பிட்டார்.

இந்த கருத்தரங்கில் பேசிய ஆல்ட் நியூஸ் இணையதளத்தை சேர்ந்த அர்ஜுன் சித்தார்த், ''ட்ரோலிங் எனப்படும் சமூக ஊடக தொந்தரவு ஒரு பிரச்சனையாக உள்ளது. நீங்கள் உங்கள் கருத்தை பதிவிட்டால் அதற்கு எதிராக மக்கள் எதிர்வினையாற்றத் தொடங்கி விடுகின்றனர். சமூகவலைத்தளங்களில் பாஜக ஆதரவாளர்கள் காங்கிரஸ் ஆதரவாளர்களை விட அதிகமாக கடுஞ்சொற்களை பயன்படுத்துகின்றனர்'' என்று கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்