வரைவு பிரெக்ஸிட் ஒப்பந்தம்: எதிர்ப்புத் தெரிவித்து பிரிட்டன் அமைச்சர்கள் பதவி விலகல்

British Prime Minister, Theresa May delivers a Brexit statement on Downing Street on November 14, 2018 in London, England - Brexit படத்தின் காப்புரிமை Getty Images

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்காக எட்டப்பட்டுள்ள வரைவு ஒப்பந்தத்துக்கு மனசாட்சியோடு ஆதரிக்க முடியாது என்று கூறி பிரெக்ஸிட் செயலாளர் டொமினிக் ராப் பதவி விலகியுள்ளார்.

அதைப்போலவே வேலை மற்றும் ஓய்வூதியச் செயலாளர் எஸ்தர் மெக்வே-வும் பதவி விலகியுள்ளார்.

ஜூனியர் பிரெக்ஸிட் அமைச்சர் சூயெல்லா பிரேவர்மேனும் பதவி விலகியுள்ளார்.

இதனிடையே, ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரிட்டனுக்கும் இடையே வரைவு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ள நிலையிலும் இறுதித் தீர்வுக்கு இன்னும் நீண்ட தூரம் செல்லவேண்டும் என்று கூறியுள்ளார் ஐரோப்பிய ஒன்றியத்தின் முதன்மைப் பேச்சுவார்த்தையாளர் மைக்கேல் பார்னியர்.

பிரெக்ஸிட் வரைவு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ள சூழலில் பிரிட்டன் பிரதமர் தெரீசா மே நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து கடுமையான கேள்விகளை எதிர்கொண்டுள்ளார்.

பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த வரைவறிக்கைக்கு எதிராக பேசியதாக தெரிகிறது. இருந்த போதிலும் ஐந்து மணி நேர விவாதத்திற்கு பிறகு இந்த வரைவறிக்கையை உறுதிப்படுத்தினார் தெரீசா மே.

நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு நகர்வுக்கு மத்தியில், தெரீசா மே சார்ந்துள்ள ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சி ஆதரவாளர்கள், பழமைவாத கட்சியை சேர்ந்த பிரெக்ஸிட் ஆதரவாளர்களும் இந்த வரைவறிக்கைக்கு எதிராக உள்ளனர்.

லேபர் கட்சி இந்த வரைவை ஆதரிக்கிறதா, இல்லையா என பின்னர் அறிவிக்கும்.

தேச நலனில்லை

அதேநேரம், இந்த 585 பக்க வரைவறிக்கை தேச நலனை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டதாக தெரியவில்லை என தொழிலாளர் கட்சியின் தலைவர் கோபின் கூறி உள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஹவுஸ் ஆஃப் காமன்ஸிற்கு வியாழக்கிழமை காலை தனது தரப்பை தெரீசா மே விளக்க வேண்டும்.

ஐக்கிய ராஜ்ஜியம் முன்புள்ள வாய்ப்புகள் குறித்து புதன்கிழமை மாலை பேசினார் தெரீசா.

நம் வேலை வாய்ப்புகளை பாதுகாக்கும், நம் பாதுகாப்பை உறுதிப்படுத்தும், நம் பணத்தின் மீதான, சட்டம் மற்றும் எல்லை மீதான அதிகாரத்தை அளிக்கும் இந்த ஒப்பந்தமானது வாக்கெடுப்பிற்கு பின்பே முடிவானது. இந்த ஒப்பந்ததை ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது பிரெக்ஸிட் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற தொனியில் தெரீசா மே பேசி உள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம்

அதே வேளையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பாக பிரக்ஸிட் தொடர்பான பேச்சுவார்த்தையில் தலைமை வகிக்கும் மிக்கேல் பார்னியர் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான வரைவு ஒப்பந்தம் உறுதியான முன்னேற்றம் கண்டுள்ளதாக கூறுகிறார்.

ஏன் இந்த எதிர்ப்பு?

பிரக்ஸிட் வேண்டுமென்று கேட்டவர்கள் இந்த வரைவறிக்கையை தீர்க்கமாக எதிர்க்க காரணம் என்ன?

படத்தின் காப்புரிமை Getty Images

தற்காலிகமாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கும், ஐக்கிய ராஜ்ஜியத்திற்குமான ஒற்றை சுங்கப் பகுதியை இந்த வரைவறிக்கை முன் வைக்கிறது.

இந்த காரணமாக ஐரோப்பிய சட்டத்திலிருந்து ஐக்கிய ராஜ்ஜியம் விடுபட பல ஆண்டுகளாகும் என அஞ்சுகிறார்கள்.

இதன் காரணமாகவே எதிர்க்கிறார்கள்.

தலைமைக்கு சவால்

கேபினட் ராஜிநாமா செய்யும் என்ற அச்சுறுத்தல் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதால் , வியாழக்கிழமை தெரீசா மே சவாலை சந்திப்பார் என பிபிசி அரசியல் பிரிவின் ஆசிரியர் காஃப்ரா கூறுகிறார்.

லேபர் கட்சியின் தலைவர் கோபின், ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சியின் தலைவர் ஆலின், ஸ்காட்லாண்ட் முதலமைச்சர் நிகோலா ஆகியோருடன் புதன்கிழமை மாலை பேச்சுவார்த்தை நடத்தினார்.

பிரெக்ஸிட் என்றால் என்ன?

பிரிட்டனில் நடக்கும் விஷயங்களை புரிந்து கொள்ள வேண்டுமென்றால், பிரெக்ஸிட்டை புரிந்து கொள்ள வேண்டும்.

இங்கு பிரெக்ஸிட் குறித்து அடிப்படையான சில தகவல்களை தெரிந்து கொள்ளவோம்.

விரிவாக படிக்க:பிரெக்ஸிட்டை புரிந்து கொள்ள 5 எளிய கேள்வி பதில்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :