'வடகொரியா அதிநவீன ஆயுதத்தை சோதித்தது'

கிம் ஜோங் உன். படத்தின் காப்புரிமை Getty Images

அதிநவீன ஆயுதம் ஒன்றை வடகொரியா சோதித்துள்ளது என்றும் அதை அந்நாட்டுத் தலைவர் கிம் ஜோங் மேற்பார்வையிட்டதாகவும் வடகொரியாவின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

அது எந்த மாதிரி ஆயுதம் என்பதைப் பற்றி எந்த விளக்கத்தையும் தராத அரசு ஊடகம், நீண்ட காலமாக இது உருவாக்கப்பட்டு வந்ததாகத் தெரிவித்துள்ளது.

இந்த ஓராண்டு காலத்தில் வடகொரியா ஆயுத சோதனை செய்ததாக அதிகாரபூர்வமாக வெளியாகும் முதல் செய்தி இது.

கடந்த ஜூன் மாதம் சிங்கப்பூரில் நடந்த உச்சி மாநாட்டில் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் சந்தித்துப் பேசி கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத நீக்கம் செய்யவேண்டும் என்று முடிவு செய்தனர். ஆனால் விளக்கமான திட்டம் எதுவும் எட்டப்படவில்லை.

தற்போது பரிசோதிக்கப்பட்டுள்ளது என்ன ஆயுதம் என்பது குறித்து வடகொரிய அரசு ஊடகம் தகவல் ஏதும் தரவில்லை. ஆனால், செயற்கைக் கோள் பிம்பத்தைப் பயன்படுத்தி, வடகொரியாவிடம் உள்ள சிக்கலான ஏவுகணைக் கட்டமைப்பு குறித்த விளக்கம் அளிக்கும் ஓர் அறிக்கை வெளியான பிறகே அரசின் இந்த அறிவிப்பு வெளியானது.

அது எந்த மாதிரியான ஆயுதம் என்பது குறித்து தாம் பகுப்பாய்வு செய்துவருவதாக தென்கொரியா கூறியுள்ளது. ஆனால், ஆயுத உருவாக்கத்தை கைவிடுவதாகவோ, ஏவுகணை தளங்களை மூடிவிடுவதாகவோ வடகொரியா இதுவரை ஒப்பந்தம் எதுவும் போடவில்லை. வாக்குறுதி எதையும் தரவில்லை.

இது தொடர்பாக எதிர்வினையாற்றிய அமெரிக்க வெளியுறவுத் துறை, அதிபர் டிரம்பும், தலைவர் கிம்மும் அளித்த உறுதி மொழிகள் நிறைவேற்றப்படும் என்று நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்துள்ளது.

வடகொரிய ஊடகம் என்ன சொல்கிறது?

படத்தின் காப்புரிமை AFP
Image caption தேசிய பாதுகாப்பு அறிவியல் கல்விக் கழகத்தில் ஆயுதப் பரிசோதனைத் தளத்தைப் பார்வையிடும் கிம் ஜோங் உன். இதில் ஆயுதத்தை பார்க்க முடியவில்லை.

புதிதாக உருவாக்கப்பட்ட, உபாயம் நிறைந்த உயர் தொழில்நுட்ப ஆயுதத்தை, தேசிய பாதுகாப்பு அறிவியல் கல்விக் கழகத்தில் (அகாடமி ஆஃப் நேஷனல் டிஃபன்ஸ் சயின்ஸ்) பரிசோதிப்பதை கிம் மேற்பார்வையிட்டதாக அரசு ஊடகம் கே.சி.என்.ஏ. தெரிவித்துள்ளது. அது வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டுள்ளது என்றும் அது கூறியது.

ஆயுதப் பரிசோதனை குறித்து கிம் திருப்தி தெரிவித்ததாகவும், அது ஊடுருவ முடியாத அளவுக்கு நாட்டுக்கு பாதுகாப்பு வழங்குவதாகவும், மக்கள் ராணுவத்தின் (வடகொரிய ராணுவம்) போரிடும் வலிமையை அதிகரிப்பதாகவும் அது கூறியது.

நவம்பர் 2017ல் ஹ்வாசாங்-15 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையில் பங்கேற்ற பிறகு இப்போதுதான் முதல்முறையாக அவர் ஒரு ஆயுத சோதனையை அவர் மேற்பார்வை செய்வதாக தென்கொரியாவின் ஐக்கியமாக்கல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்