தன் குழந்தையை 2 ஆண்டுகள் காரில் மறைத்து வைத்திருந்த தாய்க்கு சிறை

கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம்.

தன் குழந்தையைமறைத்து வைத்திருந்த தாய்க்கு சிறை

படத்தின் காப்புரிமை AFP/Getty Images
Image caption சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரோசா மரியா டி க்ரூஸ்

புழுக்கள் நிறைந்த காரின் பின் பெட்டியினுள் தன் குழந்தையை 23 மாதங்கள் மறைத்து வைத்திருந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண்ணுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ரோசா மரியா டி க்ரூஸ் என்ற பெண், தன் மகள் செரினாவை, ஒரு பயன்படுத்தப்படாத அறையில் போசோ 307 காரில் இரண்டு ஆண்டுகள் வைத்திருந்துள்ளார்.

அவர் தன் கணவர் மற்றும் 3 குழந்தைகளிடம் இருந்து செரினாவை மறைக்க இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது.

தற்போது 7 வயதாகும் செரினா உணர்ச்சி இழந்ததினால், பலவீணத்தோடும், ஆட்டிஸத்துக்கான குணங்களோடும் காணப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மோசமான நிலையில் கலிஃபோர்னியா

படத்தின் காப்புரிமை Getty Images

காட்டுத்தீயினால் போராடிக் கொண்டிருக்கும் வட கலிஃபோர்னியாவில் காற்றின் தரம் உலகளவில் மிக மோசமான நிலையில் உள்ளதாக கண்காணிப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்தியா மற்றும் சீன நகரங்களை விட காற்றின் தரம் மோசமாக இருக்கிறது என காற்றுத் தரத்தை கணக்கிடும் பர்புல் ஏர் நிறுவனம் கூறியுள்ளது.

அங்கு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. இந்த காட்டுத்தீயினால் குறைந்தது 63 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்:

செய்தியாளர்கள் நல்லொழுக்கத்துடன் நடக்க வேண்டும் - அதிபர் டிரம்ப்

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சி என் என் செய்தியாளர் ஜிம் அகொஸ்டா

செய்தியாளர்கள் "நல்லொழுக்கத்துடன்" நடந்து கொள்ளவில்லை என்றால், செய்தியாளர்கள் சந்திப்பில் இருந்து வெளிநடப்பு செய்துவிடுவேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டியுள்ளார்.

இந்த மாத தொடக்கத்தில் அதிபர் டிரம்புடன் மோதல் ஏற்பட்டதையடுத்து சி என் என் செய்தியாளர் ஜிம் அகொஸ்டாவின் செய்தியாளர் அனுமதி அட்டை பறிக்கப்பட்டது.

தற்போது வாஷிங்டன் டிசி நீதிமன்றம் அகொஸ்டாவின் அனுமதி அட்டையை அவரிடம் திரும்பி கொடுக்குமாறு வெள்ளை மாளிகைக்கு உத்தரிவிட்டதை தொடர்ந்து பேசிய அதிபர் டிரம்ப், "ஊடகங்கள் தங்களுக்கான விதிமுறைகளை பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும். எழுந்து நின்று தொடர்ந்து கேள்வி கேட்டுக் கொண்டே இருக்க முடியாது. நல்லொழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.

அதிபர் டிரம்புடன் வாக்குவாதம்: சிஎன்என் செய்தியாளருக்கு தற்காலிக தடை

தீப்பிடித்து எரிந்த பேருந்து - 42 பேர் பலி

படத்தின் காப்புரிமை Reuters

ஜிம்பாப்வேயில் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் அதில் இருந்த குறைந்தது 42 பேர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்க எல்லையை ஒட்டி பிட்பிரிட்ஜ் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, அது திடீரென தீப்பிடித்தது.

பேருந்தில் இருந்த ஒரு பயணி எரிவாயு குப்பி ஒன்று வைத்திருந்ததாகவும், அதனால் இந்த விபத்து நேர்ந்துள்ளது என்று நம்புவதாக பேருந்தின் உரிமை நிறுவனம் தெரிவித்துள்ளது.

அடையாளம் காண முடியாத அளவிற்கு சில உடல்கள் எரிந்துள்ள நிலையில், இதில் தப்பித்த 20 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: