அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு: "விசாரணையில் எளிய கேள்விகள்" - டிரம்ப்

டிரம்ப் படத்தின் காப்புரிமை Pool

2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு குறித்த விசாரணையில் தனது பதில்களை அளித்து முடித்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அனைத்து கேள்விகளுக்கும் எளிமையாக பதில் அளித்துவிட்டதாக தெரிவித்த டிரம்ப், அவை ராபர்ட் முல்லர் குழுவிடம் சமர்பிக்கப்படவேண்டும் என்று தெரிவித்தார்.

2016ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் டிரம்பின் தேர்தல் பிரசாரம் குழுவுடன் ரஷ்யாவுக்கு தொடர்பு இருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து முல்லர் விசாரித்து வருகிறார்.

ஆனால் ரஷ்ய தலையீட்டை டிரம்ப் மறுப்பதோடு, இதனை ஒரு "சூனிய வேட்டை" என்றும் தெரிவித்து வருகிறார்.

ட்விட்டரில் முல்லர் ஒரு "குழப்பவாதி" என்றும், இந்த விசாரணை "முழுக்க கேளியானது" என்றும் இந்த நீண்டகால "விசாரணையில் ஈடுபட்டிருப்பவர்கள் தேசத்துக்கு ஒரு அவமானம்" என்றும் அவர் தெரிவித்தார்.

அட்டர்ணி ஜெனிரல் ஜெஃப் ஷென்ஸை வலுக்கட்டாயமாக பதவி விலக வைத்து, அவருக்கு பதில் மாத்யூ விடாகரை பணியமர்த்திய ஒரு வாரத்துக்கு பிறகு இந்த ட்வீட்டை பதவிட்டார் டிரம்ப். தற்போது விடாகருக்கு முல்லரின் விசாரணையை முடிக்கச் சொல்லும் அதிகாரமும் அவரை பணியிலிருந்து நீக்கும் அதிகாரமும் உள்ளது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு குறித்து மல்லர் விசாரித்து வருகிறார்

வெள்ளியன்று பத்திரிகையாளர்களிடம் பேசிய டிரம்ப் இந்த விசாரணை நடைபெற்றிருக்கவே கூடாது என்றும், அதனால் மில்லியன் கணக்கான பணம் வீணாகிவிட்டது என்றும் தெரிவித்தார்.

தான் பதில் அளிக்க ஒப்புக் கொண்ட கேள்விகளை எழுதியவர்கள் தவறான நோக்கத்துடன் கேள்விகளை எழுதியதாகவும் அவர் கூறியுள்ளார்.

"என் வழக்கறிஞர்கள் எனது பதில்களை எழுதவில்லை, நானே எழுதினேன். என்னிடம் அடுக்கடுக்கான கேள்விகள் கேட்கப்பட்டன. ஆனால் அனைத்துக்கும் நான் எளிதாக பதிலளித்துவிட்டேன்" என்று அவர் தெரிவித்தார்.

என்ன கேள்விகள் கேட்பட்டது என்று இதுவரை தெரியவில்லை. இருப்பினும் டிரம்ப் அதிபராக பதிவியேற்ற பிறகான காலங்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு டிரம்ப் பதிலளிக்கவில்லை எனவும், சில கேள்விகள் அவரை சிக்க வைப்பது போலான கேள்விகள், சில தேவையற்றது, சில தொடர்பற்றது என்றும் டிரம்பின் வழக்குரைஞர் ரூடி கிலானி வாஷிங்டன் போஸ்டில் தெரிவித்துள்ளார்.

அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு?

2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஹிலரிக்கு எதிராக, அரசால் அங்கீகரிக்கப்பட்ட சைபர் தாக்குதல்கள், சமூக வலைதளங்களில் போலி செய்திகளை ரஷ்யா வெளியிட்டது என அமெரிக்க உளவுத்துறை முகமைகள் தெரிவித்திருந்தது.

இந்த நடவடிக்கையில் டிரம்பின் அணியை சேர்ந்தவர்கள் இருந்தனரா என்பதை முல்லரின் சிறப்பு விசாரணைக் குழு விசாரித்து வருகிறது.

டிரம்ப் தேர்தல் குழுவின் மூத்த அதிகாரிகள், ரஷ்ய அதிகாரிகளை சந்தித்தனர் என தெரியவந்துள்ளது. ஆனால் முதலில் அது வெளிப்படையாக கூறப்படவில்லை.

தேர்தல் பிரசாரத்தின் போது டிரம்பின் மகன் ரஷ்ய வழக்கறிஞர் ஒருவரை சந்தித்தார். முன்னாள் ஆலோசகரான ஜார்ஜ் பாப்புடோபுலஸ் தனது ரஷ்ய போக்குவரத்து குறித்து எஃப் பி ஐ யிடம் பொய் கூறியதாக ஒப்புக் கொண்டார்.

இதுவரை டிரம்பின் தேர்தல் பிரச்சாரம் மற்றும் டிரம்பின் பதவியுடன் தொடர்புடைய நான்கு பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் இதுகுறித்து டிரம்ப் தொடர்ந்து மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் அவர் மீது குற்றம்சுமத்த வலுவான ஆதாரங்கள் ஏதும் இல்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: