‘துயரம் மற்றும் கொடூரம்’: கஷோக்ஜி கொலை தொடர்பான ஆடியோவை ஏன் கேட்கவில்லை? - விளக்கும் டிரம்ப்

டிரம்ப் படத்தின் காப்புரிமை Getty Images

செளதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை தொடர்பான ஆடியோ பதிவு குறித்து தனக்கு விவரிக்கப்பட்டதாகவும் ஆனால் தான் அதை கேட்கப்போவதில்லை என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

"அது ஒருத்தரின் துயரை சொல்லும் டேப், கொடூரமான ஒன்று" என ஃபாக்ஸ் நியூஸில் தெரிவித்தார் அவர்.

அக்டோபர் 2ஆம் தேதி, இஸ்தான்புல்லில் உள்ள செளதி தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்டார்.

ஜமால் கஷோக்ஜியின் கொலை செளதியின் பட்டத்து இளவரசரால் ஆணையிடப்பட்டது என்று சிஐஏ தெரிவித்தது. ஆனால் வெள்ளை மாளிகை அதனை இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆனால் இந்த குற்றச்சாட்டை செளதி மறுத்துள்ளது இதில் பட்டத்து இளவரசருக்கு எந்தவித தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளது.

அமெரிக்க காங்கிரஸில் கஷோக்ஜி கொலை குறித்து அழுத்தம் தரவேண்டும் என டிரம்பின் ஆதரவாளர்களும் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் கூட்டாளியாக செளதி அரேபியா இருப்பதால், டிரம்ப் கடுமையான நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டலாம்.

டிரம்ப் ஏன் ஆடியோ பதிவை கேட்கவில்லை?

தனக்கு அந்த டேப் குறித்து முழுவதும் விளக்கப்பட்டுவிட்டதால் தான் அது குறித்து முழுவதுமாக கேட்கப்போவதில்லை என்று டிரம்ப் தெரிவித்தார்.

"அதனை கேட்காமலே அந்த டேப்பில் என்ன இருந்தது என்று எனக்கு தெரியும்" என ஃபாக்ஸ் நியூஸிடம் தெரிவித்த டிரம்ப், அந்த டேப் மிக "வன்முறையானது, மோசமானது, கொடூரமானது" என்றும் கூறினார்.

மிகவும் அதிர்ச்சியான அந்த ஆடியோ பதிவை துருக்கி, அமெரிக்கா மற்றும் அதன் மேற்கத்திய கூட்டணி நாடுகளிடம் கொடுத்தது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption தனக்கு இந்த கொலையில் தொடர்பு இல்லை என சல்மான் டிரம்பிடம் தெரிவித்தார்

தனக்கு இந்த கொலை பற்றி எதுவும் தெரியாது என பட்டத்து இளவரசர் சல்மான் தெரிவித்ததாகவும் தெரிவித்தார் டிரம்ப்.

இந்த கொலையை செய்தது யார் என யாரும் கண்டுபிடிக்காமல் கூட போகலாம் என்று கூறிய டிரம்ப், கொலையில் தொடர்புடையதாக கூறப்படும் நபர்கள் மீது அமெரிக்காவால் விதிக்கப்பட்ட தடை குறித்து கூறினார்.

"ஆனால் அதே சமயம் நமக்கு கூட்டணி ஒன்று உள்ளது. அந்த கூட்டணியுடன் ஒத்துப் போக வேண்டும். அது பல வகைகளில் நமக்கு நன்மை அளிக்கும்" என அவர் தெரிவித்தார்.

இந்த கொலையில் அமெரிக்காவில் நிலை என்ன?

படத்தின் காப்புரிமை AFP

இந்த கொலையில் பட்டத்து இளவரசர் சல்மானுக்கு நேரடி தொடர்பு இருக்கும்படியான ஆதாரங்கள் எதையும் சிஐஏ வழங்கவில்லை எனினும் சல்மானின் ஒப்புதல் இல்லாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை என அதிகாரிகள் நம்புகின்றனர்.

ஆனால் சனிக்கிழமையன்று ஜமால் கஷோக்ஜி கொலை தொடர்பாக விடை தெரியாத பல கேள்விகள் உள்ளதால் இதில் இறுதி முடிவை அமெரிக்கா எட்டவில்லை என அந்நாட்டின் உள்துறை அமைச்சக்கம் தெரிவித்துள்ளது.

சிஐஏவின் விசாரணை குறித்து டிரம்ப் அதனிடம் பேசியுள்ளார். ஃபாக்ஸ் நியூஸின் நேர்காணல் சிஐஏவின் கண்டுபிடிப்புகள் வெளியான செய்திக்கு முன்னதாக எடுக்கப்பட்டது.

டிரம்பின் கூட்டாளியான குடியரசுக் கட்சியை சேர்ந்த செனட்டர் லிண்ட்சி கிராஹாம், டிரம்ப் சல்மானின் மறுப்பை நம்பவில்லை என தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்