ஊட்டச்சத்து குறைபாடு: ஏமனில் மூன்று ஆண்டுகளில் 85,000 குழந்தைகள் பலி

ஊட்டச்சத்து குறைபாடு: யேமனில் மூன்று வருடங்களில் 85,000 குழந்தைகள் பலி படத்தின் காப்புரிமை MOHAMMED AWADH/SAVE THE CHILDREN

கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம்.

ஊட்டச்சத்து குறைபாடு: ஏமனில் மூன்று வருடங்களில் 85,000 குழந்தைகள் பலி

ஏமனில் கடந்த மூன்றாண்டுகளாக நடந்து வரும் போரின்போது மட்டும், கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டின் காரணமாக ஐந்து வயதிற்குட்பட்ட சுமார் 85,000 குழந்தைகள் உயிரிழந்திருக்கலாம் என்று மதிப்பீடுகள் தெரிவிப்பதாக முன்னணி தொண்டு நிறுவனமொன்று தெரிவித்துள்ளது.

ஏமனில் உயிரிழந்துள்ள குழந்தைகளின் எண்ணிக்கை, பிரிட்டனின் இரண்டாவது மிகப் பெரிய நகரமான பர்மிங்ஹாமிலுள்ள ஒட்டுமொத்த ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கைக்கு சமம் என்று 'சேவ் தி சில்ரன்' என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

ஏமனில் அதிகபட்சம் 14 மில்லியன் மக்கள் பஞ்சத்தின் பிடியில் சிக்கியுள்ளதாக கடந்த மாதம் ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்திருந்தது.

உலகிலேயே மோசமான மனிதாபினாம நெருக்கடியாக கருதப்படும் மூன்றாண்டுகளாக நடந்து வரும் ஏமன் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு ஐநா சபை முயற்சித்து வருகிறது.

அமெரிக்கா, கனடாவை அச்சுறுத்தும் இ கோலி

படத்தின் காப்புரிமை Getty Images

அமெரிக்கா, கனடாவில் பரவிவரும் இ கோலி பாக்டீரியாவுக்கும் ரோமெய்ன் கீரைக்கும் தொடர்புள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இ கோலை பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட அமெரிக்காவை சேர்ந்த 32 பேரில் 13 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், கனடாவில் 18 பாதிக்கப்பட்டுள்ளனர்.

நுகர்வோர்கள், சில்லறை வியாபாரிகள், உணவகங்கள் உள்ளிட்டவை தங்களிடமுள்ள ரோமெய்ன் கீரையை தூக்கியெறிய வேண்டுமென அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் கடந்த கோடைகாலத்தின்போது இந்த பாக்டீரியாவால் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்த சம்பவத்துக்கும் ரோமெய்ன் கீரைக்கும் தொடர்பு உள்ளதாக தெரியவந்ததை அடுத்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

செயற்பாட்டாளர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்

படத்தின் காப்புரிமை EPA

சௌதி அரேபியா மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சில பெண்கள் உள்ளிட்டோரை சித்திரவதை, பாலியல் துன்புறுத்தல் செய்ததாக மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

சௌதி அரேபியாவின் தஹபன் சிறையிலுள்ள கைதிகள் மின்சாரம் செலுத்தப்பட்டு, அடித்தும் துன்புறுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த வருடத்தின் தொடக்கத்தில் சௌதி அரேபியாவில் பல பெண்ணுரிமை செயற்பாட்டாளர்கள், மத போதகர்கள் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.

"சௌதியுடனான அமெரிக்காவின் உறவு தொடரும்" - டொனால்டு டிரம்ப் உறுதி

படத்தின் காப்புரிமை Getty Images

சௌதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொல்லப்பட்ட விவகாரத்தில் உலக நாடுகளிடமிருந்து கடும் கண்டனங்களை சௌதி அரேபியா பெற்று வரும் சூழலில், அந்நாட்டிற்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் 'வரலாறு காணாத அளவு முதலீடு செய்வதற்கு ஒப்புக்கொண்டுள்ள'சௌதி அரேபியா தங்களது 'திடமான கூட்டாளி' என்று டிரம்ப் வெளியிட்ட அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கஷோக்ஜி கொல்லப்பட்டது குறித்து சௌதியின் பட்டத்து இளவரசர் முகம்மது சல்மானுக்கு 'நன்றாக தெரிந்திருக்கும்' என்றும் டிரம்ப் அதில் குறிப்பிட்டுள்ளார்.

"அந்நிலையிலும், சௌதி அரேபியாவுடனான அமெரிக்காவின் உறவு தொடரும்."

சௌதி அரேபியா சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி துருக்கியில் உள்ள சௌதி தூதரகத்தில் கடந்த அக்டோபர் 2ஆம் தேதி கொல்லப்பட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :