சீனாவைவிட இந்தியாவுக்கு முக்கியத்துவம் தரும் மாலத்தீவு: ஓர் அலசல்

  • ஸ்டூவர்ட் லா
  • பிபிசி மானிட்டரிங்
படக்குறிப்பு,

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியுடன் புதிய அதிபர் இப்ராஹிம் முகமது சோலி (வலது)

மாலத்தீவுகளின் புதிய அதிபர் இப்ராஹிம் முகமது சோலி, சீனாவை சந்தேகக் கண்ணுடன் பார்க்கிறார். சீனாவை விட இந்தியாவுடன் அதிக நெருக்கம் காட்டும் புதிய அதிபர் இப்ரஹிம் முகமது சோலி தலைமையிலான மாலத்தீவுகளின் புதிய அரசு, தனது வெளியுறவுக் கொள்கையை மாற்றுவதற்குத் தயாராகி வருகிறது.

சீனாவுடன் நிதித் தொடர்புகள் மற்றும் தூதரக உறவுகளில் மாலத்தீவுகள் சற்று தள்ளியே இருக்கும் என்று சோலி தேர்தல் வாக்குறுதி கொடுத்திருந்தார். இப்போது அதற்கான செயல்பாடுகளைக் காண முடிகிறது.

நவம்பர் 17ஆம் தேதி நடைபெற்ற சோலியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்றவர்களில் மிகவும் அதிக மதிப்புக்குரிய விருந்தினராக இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி இருந்தார். இருவரும் ஆரத் தழுவிக் கொண்டதை எல்லோரும் பார்த்தார்கள்.

இதற்கு மாறாக, சீனாவின் சார்பாக அதன் கலாசார மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் லுயோ ஷுகாங் கலந்து கொண்டார். சீனாவில் இருந்து குறைந்த அரசியல் தகுதியுள்ள பதவியில் இருந்து ஒருவர் பங்கேற்றதாக இது பார்க்கப்பட்டது.

படக்குறிப்பு,

அதிபர் இப்ராஹிம் முகமது சோலி

புவியியல் ரீதியாக இந்தியாவும் சீனாவும் ஆளுமையை நிலைநிறுத்துவதற்குப் போட்டியிட்டுக் கொண்டிருக்கும் நிலையில், சீனாவுடனான நட்பை மறு ஆய்வு செய்யும் சிறிய ஆசிய நாடுகளில், தற்போது மாலத்தீவுகளும் சேர்ந்திருக்கிறது.

மீண்டும் இந்தியாவுடன் கைகோர்ப்பு

நீண்ட காலமாகவே இந்தியாவின் பாரம்பரிய தோழமை நாடாக மாலத்தீவுகள் இருந்து வந்தது. ஆனால் 2013ல் இருந்து, இந்த ஆண்டின் தொடக்கம் வரையில் அதிபராக இருந்த, சீன ஆதரவாளரான அப்துல்லா யாமீன் ஆட்சிக் காலத்தில் இந்த சமன்பாடு மாறியதது.

சீனாவுக்குக் குறைந்தபட்சம் 1.5 பில்லியன் டாலர் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய அளவுக்கு, யாமீன் ஆட்சிக் காலத்தில் நாடு சீனாவின் வலுவான ஆதிக்கத்தின் கீழ் வந்தது.

முன்பிருந்தவரின் கொள்கைகளில் இருந்து விலகி இருப்பது என்று மாலத்தீவு புதிய அதிபர் உறுதி தெரிவித்திருக்கிறார்.

மாலத்தீவுகளின் புதிய அதிபர் வெளிநாட்டுக் கொள்கைகள் குறித்து விவாதிக்கிறார்.

படக்குறிப்பு,

முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன் சீனாவுக்கு நெருக்கமாக இருந்தார்

``அதிபர் பொறுப்பை நான் ஏற்கும் தருணத்தில், அரசின் நிதி நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அரசியல் காரணங்களுக்காக மட்டும், இழப்புடன் நிறைவேற்றப்பட்ட திட்டங்களால் அதிக சேதம் ஏற்பட்டுள்ளது,'' என்று பதவி ஏற்பு முடிந்தவுடன் ஆற்றிய உரையில் அவர் கூறியதாக மாலத்தீவுகளின் செய்தி இணையதளம் அவாஸ் (Avas) கூறியுள்ளது.

``இந்தியா உள்பட இப்பகுதியில் உள்ள மற்ற நாடுகளுடன் தற்போது நமக்கு உள்ள உறவுகளை பலப்படுத்துவதற்கு நாம் பெரும் முயற்சிகள் எடுப்போம். இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைதியும் நல்லிணக்கமும் நீடித்திருப்பதற்கு தனது பங்களிப்பை மாலத்தீவுகள் இனி அதிகரிக்கும்'' என்றும் அவர் கூறியுள்ளார்.

தேர்தல் முடிவுகளுக்கு சீன செய்தித்தாள் குறைந்த முக்கியத்துவம்

`இந்தியாவே முதன்மை' என்று எங்களுக்கு இருந்த [2008 முதல் 2012 வரையில்] கொள்கை தொடரும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று இந்தியா டுடே வார இதழுக்கு அளித்த பேட்டியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் மரியா அஹமது தீடி கூறியுள்ளார்.

சீன பத்திரிகைகள் முக்கியத்துவம் தராதது இந்த தாக்கத்துக்கு காரணமாக இருக்கலாம். அதிபரின் பதவி ஏற்பு விழாவில் சீனாவின் சுற்றுலாத் துறை அமைச்சர் பங்கேற்றிருப்பது இரு தரப்புக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

சோலி சீன தூதர் ஜஹாங் லிஜ்ஹோங்-கை அக்டோபர் 7ம் தேதி சந்தித்தார்.

தமது நாட்டின் முதலீடுகள் தொடர வேண்டும் என்பதில் சீனத் தூதர் அக்கறை காட்டினார். "மாலத்தீவுகளின் வளர்ச்சியில், குறிப்பாக வீட்டு வசதி, தண்ணீர் மற்றும் கழிவுநீர் அகற்றல் மற்றும் சுற்றுலா போன்ற துறைகளில் எந்த வகையில் சீனா தொடர்ந்து உதவி செய்ய முடியும் என்பதுதான், அந்தக் கூட்டத்தில் பிரதானமாகப் பேசப்பட்டது" என்று மாலத்தீவுகளின் தனியார்செய்தி இணையதளம் தெரிவித்துள்ளது.

'மாலத்தீவுகளுக்கு சீனாவின் உதவி அரசியல் நிபந்தனைகளற்றது'

அதே சமயத்தில், அதிபராக தாம் செய்யப் போவது என்ன என்பதை சந்தேகத்துக்கு இடமில்லாமல் லிஜ்ஹோங்கிடம் சோலி கூறியுள்ளார். ``தன்னுடைய வெளிநாட்டுக் கொள்கையில் ஜனநாயகம், மனித உரிமைகள், பருவநிலை மாற்றம் ஆகியவைதான் முதன்மையாக இடம் பெறும் என்று, அதிபராகத் தேர்வு செய்யப்பட்டிருந்த அவர், தூதரிடம் கூறினார்,'' என்றும் அதே செய்தி தெரிவிக்கிறது.

ஜனநாயகம் என்பதோ, மனித உரிமைகள் என்பதோ சீனாவின் காதுகளுக்கு இனிமையானவையாக இருக்கவில்லை. சோலி தலைமையின் கீழ் எந்த மாதிரி விளைவுகள் ஏற்படும் என்பதற்கு சீன ஊடகங்கள் முக்கியத்துவம் அளிக்கவில்லை.

சோலி 'மிதவாதியாக' இருப்பார் என்றும், மாலத்தீவுகள் - சீனா இடையிலான உறவுகளில் இடையூறு செய்ய மாட்டார் என்றும், யாமீன் நிர்வாகத்தில் இடம் பெற்றிருந்த ஒருவரைக் குறிப்பிட்டு சீனாவின் குளோபல் டைமைஸ் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.

படக்குறிப்பு,

சீன நிதியுதவியுடன் மாலத்தீவில் பல உள்கட்டமைப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

புதிய அரசாங்கம், சீனாவின் முதலீடுகளில் அதே உறுதியுடன் செயல்படும் என்று, மாலே-வில் உள்ள சீன மாலத்தீவுகள் கலாசார சங்கம் என்ற தொண்டு நிறுவனத்தை மேற்கோள் காட்டி அந்த செய்தி கூறியுள்ளது.

ஆசியாவில் பொருளாதாரத் தலைமை இடத்துக்கு சீனாவின் முயற்சி

சீனாவின் ஆதிக்கத்தை மாலத்தீவு மக்கள் ஏற்கவில்லை என்பதன் அடையாளமாகவும் சோலி-யின் தேர்தல் வெற்றியை சிலர் பார்க்கிறார்கள்.

இந்தியாவின் 'தி இந்து' பத்திரிகைக்கு சோலியின் கூட்டணியில் உள்ள முன்னாள் அதிபர் முகமது நஷீத் அளித்துள்ள பேட்டியில், ``கடந்த ஆட்சிக்காலத்தில் சீனாவால் முன்னெடுத்து அமல்படுத்தப்பட்ட பரவலான கட்டமைப்புத் திட்டங்கள், தங்களுடைய வாழ்வை உண்மையில் மேம்படுத்துவதாக மாலத்தீவு மக்கள் நம்பவில்லை'' என்று கூறியுள்ளார்.

சீன நிதியுதவியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை விரிவாக தணிக்கை செய்ய வேண்டும் என்றும் முன்னாள் அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.

படக்குறிப்பு,

முகமது நஷீத்

``புதிய மாலத்தீவுகளில் ஏற்படவுள்ள ஒட்டுமொத்த மாறுதல்களின் முக்கிய அம்சமாக, சீன உதவியுடன் செயல்படுத்தப்படும் பல உள் கட்டமைப்புத் திட்டங்கள் மறு ஆய்வு செய்யப்படும். குறிப்பாக சீனாவுக்கு பல நூறாயிரம் கோடி டாலர்கள் அளவுக்கு மாலத்தீவு கடன் செலுத்த வேண்டியிருப்பதாகச் சொல்லப்படுவது குறித்து ஆய்வு செய்யப்படும்'' என்று அவர் கூறியுள்ளார்.

"சிக்கலான இந்த விஷயத்தைக் கையாள்வதற்கு, முதலில் திட்டங்களை நாம் தணிக்கை செய்ய வேண்டும். நாம் எவ்வளவு வாங்கினோமோ அதை திருப்பிச் செலுத்த வேண்டும், அதைவிட அதிகமாக எதுவும் கிடையாது,'' என்று நஷீத் கூறியதாக அந்தச் செய்தி தெரிவிக்கிறது.

பிராந்திய அதிகாரப் போட்டி தொடர்கிறது

மாலத்தீவுகள் போன்ற சிறிய நாடுகள் இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையிலான வட்டார அதிகாரப் போட்டிக்கான பொருளாக உள்ளன.

மலேசியாவில் மே மாதம் நடைபெற்ற தேர்தலில் பிரதமர் மகாதிர் முகமது வெற்றி பெற்றதை அடுத்து சீனா முன்னெடுத்துச் செய்த பல திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சீனாவின் பொருளாதார மற்றும் தூதரக உறவுத் திட்டங்களுக்கு மற்றொரு பெரிய பின்னடைவை சோலி தலைமையிலான மாலத்தீவு அரசு தரும் என்று தெரிகிறது.

முக்கியத்துவம் வாய்ந்த இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்த சுற்றில் சீனா இழந்து நிற்கும்போது, புதிய அரசின் அடுத்த ஐந்து ஆண்டுகளில் மாலத்தீவுகள் - இந்தியா இடையிலான தொடர்பு மேம்படும் என்று தெரிகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :