பாகிஸ்தானில் கராச்சி சீனத் தூதரகத்தின் மீது ஆயுதத் தாக்குதல் - 4 பேர் பலி

  • 23 நவம்பர் 2018
இருவர் பலி படத்தின் காப்புரிமை Reuters

பாகிஸ்தான் கராச்சி நகரில் உள்ள சீனத் துணைத் தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட ஆயுதத் தாக்குதலில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

க்ளிஃப்டன் பகுதியில் உள்ள துணைத் தூதரகத்தில் குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூடு நடந்ததை நேரில் பார்த்தவர்கள் உறுதிப்படுத்தினர்.

உள்ளூர் நேரப்படி காலை 9:30 மணிக்கு தூதரகத்திற்கு வெளியே துப்பாக்கிச்சூடு சப்தம் கேட்டது.

தூதரகத்தினுள் நுழைய முயன்ற 4 துப்பாக்கிதாரிகள், பாதுகாப்பு படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.

அப்பகுதியினை சுற்றி பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

பலூசிஸ்தான் பிரிவினைவாத அமைப்பு ஒன்று இத்தாக்குதலை நடத்தியுள்ளதாகத் தெரிகிறது.

முதலில் வெடிகுண்டு, பிறகு துப்பாக்கிச் சூடு

தாக்குதலில் ஈடுபட்டவர்கள் வெள்ளிக்கிழமை காலை காரில் வந்து துணைத் தூதரகத்துக்குள் நுழைய முயன்றதாக கராச்சி கூடுதல் ஐ.ஜி. அமீர் ஷேக் தெரிவித்தார்.

வந்தவர்கள் முதலில் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர். பிறகு அவர்களுக்கும் அங்கிருந்த பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை மூண்டது.

தாக்குதலாளிகளால் வெற்றிகரமாக துணைத் தூதரக வளாகத்தில் நுழைய முடிந்தது என்றும் ஆனால் கட்டடத்துக்குள் நுழைய முடியவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர். அதற்கு முன்பாகவே அவர்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தார்.

சீனத் துணைத் தூதரகத்தின் தலைமைத் தூதர் உள்ளிட்ட ஊழியர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், தாக்குதலில் ஈடுபட்ட இருவர் தற்கொலை வெடிகுண்டுக்கான ஆடைகளை அணிந்திருந்ததாகவும் அமீர் ஷேக் கூறினார்.

தாக்குதலுக்கு உள்ளான துணைத் தூதரகத்துக்கு செல்லும் வழிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பெருமளவில் பாதுகாப்புப் படையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

அண்டை நாடான சீனா பாகிஸ்தானின் நட்பு நாடாகும். பாகிஸ்தானுக்கு ஏராளமான உதவிகளையும், அந்நாட்டின் அடிப்படைக் கட்டுமானத் துறைகளில் ஏராளமான முதலீடுகளையும் செய்து வருகிறது சீனா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்