வீட்டை சுத்தம் செய்யும்போது கிடைத்த லாட்டரி சீட்டுக்கு பரிசாக 12.7 கோடி ரூபாய்

கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம்.

படத்தின் காப்புரிமை COURTESY LOUISIANA LOTTERY

சுத்தம் செய்தபோது கிடைத்த லாட்டரி

அமெரிக்காவில் தற்போது கொண்டாடப்பட்டு வரும் 'நன்றி தெரிவிக்கும்' நாளை முன்னிட்டு, வீட்டை சுத்தம் செய்துகொண்டிருந்தபோது கிடைத்த லாட்டரி சீட்டின் மூலம் தம்பதியருக்கு இந்திய மதிப்பில் சுமார் 12.7 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் முக்கிய விடுமுறை நாட்களில் ஒன்றான நன்றி தெரிவிக்கும் நாளை கொண்டாடுவதற்கு விருந்தினர்கள் வருவதற்கு முன்னர் வீட்டை சுத்தம் செய்துகொண்டிருந்தபோது எதேச்சையாக சில லாட்டரி சீட்டுகள் கிடைத்தன என்கிறார் டினா எரென்பெர்க்.

கிடைத்த லாட்டரி சீட்டுகளை ஆராய்ந்து பார்த்தபோது, அதில் இருந்த சீட்டு ஒன்றுக்கு 1.8 மில்லியன் டாலர்கள் (12.7 கோடி ரூபாய்) பரிசு விழுந்துள்ளது தெரியவந்ததாக அந்த தம்பதியினர் தெரிவிக்கின்றனர்.

இந்த லாட்டரி சீட்டுகள் காலாவதியாவதற்கு இரண்டு வாரங்களே உள்ள நிலையில் இவை கண்டெடுக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

பாலியல் உறவு கொண்டால்தான் வேலை நிரந்தரமாகும் - அதிர்ச்சியில் ஆப்பிரிக்க அமைப்பு

படத்தின் காப்புரிமை Getty Images

ஆப்பிரிக்கன் யூனியன் அமைப்பில் பணிபுரியும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவுகள் பெரும் பிரச்சனையாக இருப்பது அங்கு மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

ஐரோப்பிய யூனியனை போன்று செயல்படும் இந்த அமைப்பில் பணிபுரியும் பெரும்பாலானோர் தற்காலிக, இளவயது ஊழியர்கள் ஆவர்.

நிரந்தர வேலையை எதிர்நோக்கி இங்கு பணிகளில் சேரும் இளம் பெண்களிடம் நடத்தப்பட்ட பாலியல் தொந்தரவு தொடர்பான 44 புகார்கள் மீதான விசாரணையில், "வேலையை உறுதிசெய்வதற்கு பாலியல் உறவு வைத்துக்கொள்வதற்கு" இளம்பெண்கள் வற்புறுத்தப்படுவதாக தெரியவந்துள்ளது.

தன்பாலின திருமணம் அங்கீகரிக்கப்படுமா?

படத்தின் காப்புரிமை AFP

தன்பாலின உறவாளர்களின் திருமணத்தை சட்டரீதியாக அங்கீகரிப்பது குறித்த பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு தைவானில் தொடங்கியுள்ளது.

இந்த வாக்கெடுப்பு வெற்றிபெறும் பட்சத்தில், தன்பாலின உறவாளர்களின் திருமணத்தை அங்கீகரிக்கும் ஆசியாவின் முதல் நாடாக தைவான் உருவெடுக்கும்.

இதுகுறித்து அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில், தன்பாலின உறவாளர்ளர்கள் திருமணம் செய்துகொள்வதை சட்டரீதியாக அங்கீகரிப்பதற்கு ஒப்புக்கொள்ளப்பட்டதுடன், நாடாளுமன்றம் இரண்டாண்டுகளில் இதுதொடர்பாக சட்டத்தில் மாற்றம் செய்யுமாறும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

ஆனால், இந்த முடிவுக்கு எதிராக மக்கள் வாக்களிப்பார்கள் என்று கடந்த வாரம் நடத்தப்பட்ட கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளை சேர்க்கக்கூடாது - பிடிவாதம் பிடிக்கும் டிரம்ப் நிர்வாகம்

படத்தின் காப்புரிமை Reuters

அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளை சேர்ப்பதில் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக தான் ஏற்கனவே முன்மொழிந்துள்ள பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளுமாறு டிரம்ப் நிர்வாகம் அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளை சேர்ப்பதற்கு டிரம்ப் நிர்வாகம் விதித்த தடையை நீக்கி சமீபத்தில் அந்நாட்டு கீழமை நீதிமன்றம் தீர்ப்பளித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

திருநங்கைகளை அமெரிக்க ராணுவத்தில் சேர்ப்பதால் பெரும் பணச்செலவும், இடையூறும் ஏற்படுவதால் இனி அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் சேர்த்துக்கொள்ளப்படமாட்டார்கள் என்று கடந்த 2017ஆம் ஆண்டு டிரம்ப் அறிவித்திருந்தார்.

அமெரிக்காவை அச்சுறுத்தும் பருவநிலை மாற்றம்

படத்தின் காப்புரிமை Getty Images

பருவநிலை மாற்றம் குறித்து கவனம் செலுத்தவில்லையானால், அமெரிக்காவுக்கு பல பில்லியன் டாலர்கள் இழப்பும், மனித ஆரோக்கியத்துக்கும், வாழ்க்கை தரத்துக்கு பாதிப்பும் ஏற்படும் என அந்நாட்டின் அறிக்கை ஒன்று எச்சரித்துள்ளது.

எதிர்காலத்தில் பருவநிலை மாற்றத்தால் வரக்கூடிய ஆபத்துக்களை நாம் இன்று எடுக்கக்கூடிய முடிவுகள் தீர்மானிக்கும் என நான்காவது தேசிய பருவநிலை ஆய்வு தெரிவிக்கிறது.

பசுமை இல்ல எரிவாயுக்களின் வெளியேற்றத்தை குறைத்துக் கொண்டால் எதிர்காலத்தில் வரும் பேரழிவை தடுக்க முடியும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் உடனடியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :