பருவநிலை மாற்றம்: அமெரிக்காவுக்கு தீவிர எச்சரிக்கை

Climate change படத்தின் காப்புரிமை EPA

பருவநிலை மாற்றம் குறித்து கவனம் செலுத்தவில்லையானால், அமெரிக்காவுக்கு பல பில்லியன் டாலர்கள் இழப்பும், மனித ஆரோக்கியத்துக்கும், வாழ்க்கை தரத்துக்கு பாதிப்பும் ஏற்படும் என அந்நாட்டின் பருவநிலை குறித்த அறிக்கை ஒன்று எச்சரித்துள்ளது.

"எதிர்காலத்தில் பருவநிலை மாற்றத்தால் வரக்கூடிய ஆபத்துக்களை நாம் இன்று எடுக்கக்கூடிய முடிவுகள் தீர்மானிக்கும்" என நான்காவது தேசிய பருவநிலை ஆய்வு தெரிவிக்கிறது.

மனித சுகாதாரம், பாதுகாப்பு, வாழ்க்கை தரம் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் விகிதம் ஆகியவற்றுக்கு பருவநிலை மாற்றம் பெரும் சவாலாக இருக்கும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், பல அமெரிக்க அரசு முகமைகள் மற்றும் துறைகள் பலவற்றின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட அந்த அறிக்கை சரியானதாக இல்லை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் லிண்ட்சே வால்டர்ஸ் கூறுகையில், "நீண்டகாலமாக நிறுவப்பட்ட சூழலில் இருந்து முரண்பட்டு இந்த அறிக்கை உள்ளது." என்று தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

உலகின் முன்னணி விஞ்ஞானிகள் பருவநிலை மாற்றமானது மனிதர்களால் உருவாக்கப்படுவது என்று ஒப்புக் கொண்டுள்ளனர்; மேலும் மனிதர்களின் செயல்பாடுகளால் பூமியின் வெப்பபநிலை அதிகரிக்கிறது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்ன?

பசுமை இல்ல வாயுக்கள் அதீத அளவில் வெளியேற்றப்பட்டால், இந்த நூற்றாண்டின் இறுதியில், சில பொருளாதார துறைகளில், ஆண்டுக்கான நஷ்டமானது பல பில்லியன் கணக்காக உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சர்வதேச அளவில் கணிசமாகவும் மற்றும் நீடித்த காலத்துக்கும் பசுமை இல்ல வாயுக்களை வெளிப்படுத்துதல் குறைக்கப்பட வேண்டும். "இல்லையேல் இந்த நூற்றாண்டின் முடிவில் அமெரிக்காவின் உள்கட்டமைப்பு மற்றும் சொத்துக்களில் அது பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும் மேலும் பொருளாதார வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டையாக இருக்கும்" என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடிக்கடி மாறும் வானிலை மற்றும் தீவரமான வானிலை சூழல்கள் ஆகியவை உட்பட பருவநிலை மாற்றங்களின் விளைவுகளில் பல நாடுகளில் உணரப்பட்டு வருவதாகவும், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

என்ன சொல்கிறார்கள் சூழலியளாளர்கள்?

இந்த அறிக்கை நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூறுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த அறிக்கையை தயாரித்தவர்களில் ஒருவரும், அமெரிக்காவில் அமைந்துள்ள விஞ்ஞானிகள் அமைப்பின் இயக்குநருமான ப்ரெண்டா எக்வூசெல், "பருவநிலை மாற்றமானது ஏதோ எதிர்காலத்தில் நடைபெறும் பிரச்சனையல்ல தற்போது நாம் எதிர்கொண்டிருக்கும் பிரச்சனை" என்று கூறியுள்ளார்.

என்ன சொல்கிறார் டிரம்ப்?

அக்டோபர் மாதம் ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியில், பருவநிலை மாற்றம் குறித்து தெரிவிக்கும் விஞ்ஞானிகளுக்கு அரசியல் உள்நோக்கங்கள் உள்ளதாக தெரிவித்தார் டிரம்ப்.

மேலும் பூமியின் வெப்பநிலை அதிகரித்து வருவதற்கு மனிதர்கள் காரணம் என்பதை தன்னால் நம்ப முடியவில்லை என்றும் தெரிவித்தார்.

அவர் பதவியேற்ற பிறகு பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறியது.

படத்தின் காப்புரிமை Getty Images

அது பருவநிலை மாற்றத்துக்கு எதிராக போராட சுமார் 200 நாடுகளால் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு ஒப்பந்தம்.

அந்த சமயத்தில் அமெரிக்க தொழில்களையும், வேலையாட்களையும் பாதிக்காத புதியதொரு ஒப்பந்தத்தை உருவாக்க தான் விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தில் பருவநிலை மாற்றம் என்பது ஒரு `ஏமாற்று` என்று தெரிவித்தார்.

ஆனால் சமீபமாக அவர் அளித்த நேர்காணல் ஒன்றில், அது ஏமாற்று என்று நான் நினைக்கவில்லை பருவநிலை மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவித்தார்.

நாம் ஏன் கருத்தில் கொள்ள வேண்டும்?

2030 ஆண்டுக்குள் குறைந்தது 45 சதவிகித அளவில் கரியமில வாயு வெளியேற்றம் குறைக்கப்பட வேண்டும். நிலக்கரி பயன்பாட்டை நிறுத்த வேண்டும். ஆற்றல் பயிர்களுக்கு ஏழு மில்லியன் சதுர கிலோமீட்டரை பயன்படுத்த வேண்டும்.

உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க தவறிவிட்டால், ஆபத்தான மாற்றங்கள் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது கடல் நீர்மட்டம் அதிகரித்தல், பெருங்கடலில் வெப்பநிலை மாற்றம் மேலும் அரிசி, கோதுமை, சோளம் ஆகியவற்றை பயிரிடுவதில் சிக்கல் ஆகியவையாக இருக்கக்கூடும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :