ஓரினச்சேர்க்கையாளர்களின் கோரிக்கையை நிராகரித்தது தைவான்

ஓரினச்சேர்க்கையாளர்களின் கோரிக்கையை நிராகரித்தது தைவான்

ஆசியாவில் மக்களுக்கான உரிமைகளை வழங்குவதில் முன்னோடியாக விளங்கும் நாடாக கருதப்படும் தைவானில் ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு எதிரான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரத்தை அளிப்பதற்கு சாதகமான தீர்ப்பை கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் அந்நாட்டு நீதிமன்றம் வழங்கியிருந்த நிலையில், பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பின் மூலம் எடுக்கப்பட்ட இந்த முடிவு ஓரினச்சேர்க்கையாளர்களிடையே பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது.

2017ஆம் ஆண்டு இதுதொடர்பான தீர்ப்பை அந்நாட்டு நீதிமன்றம் வழங்கியபோது, இரண்டாண்டுகளில் புதிய சட்டத்தையோ அல்லது சட்டத்திருத்தத்தையோ நாடாளுமன்றம் மேற்கொள்ள வேண்டுமென்று கூறியிருந்தது.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற உள்ளூர் தேர்தலில் அதிபர் சாய் இங்-வென்னின் ஆளும் கட்சி தோற்றத்தால் அவர் தனது கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகினார்.

அதுமட்டுமின்றி, பொதுவாக சீனாவுடன் நெருக்கமான உறவை கடைபிடித்து வரும் நாடாக கருதப்படும் தைவானின் அதிபராக சாய் பொறுப்பேற்றதிலிருந்து சீனாவுடனான உறவு மோசமடைந்து வருகிறது.

பொது மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு

தைவானில் ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணத்துக்கு ஆதரவாக அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்த நிலையில், அதை நாடாளுமன்றத்திற்கு கொண்டுசெல்வதற்கு முன்னர் பல்வேறு குழப்பங்களுக்கு தீர்வு காண்பதற்காக பொது மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது.

படக்குறிப்பு,

சாய் இங்-வென்

அதன்படி, நேற்று (சனிக்கிழமை) அந்நாடு முழுவதும் இந்த விவகாரம் குறித்து தனித்தனியே மூன்று வாக்கெடுப்புகள் நடத்தப்பட்டது.

அதாவது, நாட்டின் கன்சர்வேட்டிவ் தரப்பினர், ஆண், பெண் இருவருக்குமிடையேயான திருமணமே சட்டப்பூர்வமானது என்ற தைவானின் சட்டப்பிரிவு மாற்றப்படாமல் இருப்பதற்கு உங்களுக்கு சம்மதமா என்று கேட்டிருந்த நிலையில், ஓரினச்சேர்க்கை ஆதரவு தரப்பினர் சட்டதிருத்தத்தின் மூலம் ஏற்கனவே உள்ள திருமணங்களுக்கான சட்டப்பிரிவில் ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணமும் சேர்க்கப்பட வேண்டுமென்று கோரியிருந்தது.

இந்நிலையில், தற்போது வெளிவந்துள்ள முடிவுகளை பார்க்கும்போது கன்சர்வேட்டிவ் தரப்பினர் முன்வைத்த கோரிக்கையையே மக்கள் தேர்ந்தெடுத்துள்ளதாக தெரிகிறது.

ஆனால், நேற்று பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்னர், இதன் மூலம் தெரியவரும் முடிவுகள் நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்துவதில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாதது என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்திருந்தது. எனவே, ஏற்கனவே உள்ள திருமணம் குறித்த சட்டப்பிரிவில் மாற்றம் மேற்கொள்ளாமல், தைவான் அரசாங்கம் புதிய சட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், இந்த சிறப்பு சட்டம் வலிமை குறைந்ததாக இருக்குமென்று ஓரினச்சேர்க்கை ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :