பிரெக்ஸிட்: ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற 27 உறுப்பு நாடுகள் ஒப்புதல்

தெரீசா மே படத்தின் காப்புரிமை Reuters
Image caption பிரஸல்ஸில் பிரதமர் தெரீசா மே. இனி பிரிட்டன் நாடாளுமன்றத்திலும் ஒப்புதல் பெற வேண்டும் .

பிரெக்ஸிட் வாக்கெடுப்பைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான இறுதி ஒப்பந்தத்துக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக, ஐரோப்பிய கவன்சிலின் தலைவர் டொனல்டு டஸ்க் கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகம் அமைந்துள்ள பிரஸல்ஸ் நகரில் அந்த 27 நாடுகளின் தலைவர்களும், இன்று, ஞாயிற்றுக்கிழமை ஒரு மணி நேரத்துக்கும் குறைவான நேரத்தில் நடத்திய ஆலோசனைகளுக்கு பிறகு இந்த ஒப்புதல் வழங்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

வாக்கெடுப்பு எதுவும் நடத்தப்படாமல், அனைத்து நாடுகளின் தலைவர்களும் ஒரு மனதாக இதற்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.

இந்த ஒப்பந்தத்துக்கு பிரிட்டன் நாடாளுமன்றமும் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஏற்கனவே பல பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரெக்ஸிட் இறுதி ஒப்பந்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

பிரெக்ஸிட் வெளியேற்ற ஒப்பந்தம் மீது டிசம்பர் தொடக்கத்தில் பிரிட்டன் நாடாளுமன்றம் வாக்கெடுப்பு நடத்தவுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற ஆதரவாக 2016இல் நடந்த பிரெக்ஸிட் கருத்து வாக்கெடுப்பில் பெரும்பான்மை பிரிட்டன் மக்கள் வெளியேறுவதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரிட்டன் தரப்பில் சுமார் 18 மாதங்கள் நடத்திய பேச்சுவார்தைக்குப் பிறகு, பிரிட்டன் விலகுவதற்கான இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption டொனல்டு டஸ்க்

2019 மார்ச் 29 அன்று பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற தேதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இறுதி ஒப்பந்தத்தில் இருப்பது என்ன?

இன்று ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் இரண்டு ஆவணங்களுக்கு ஒப்புதல் தந்துள்ளனர்.

585 பக்கங்கள் கொண்ட வெளியேற்ற ஒப்பந்தத்த்தில் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும்போது செய்யக் கடமைப்பட்டுள்ள செயல்கள் குறித்து கூறப்பட்டுள்ளது.

இதன்படி பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு 39 பில்லியன் பவுண்டு கொடுக்க வேண்டும். பிரிட்டன் குடிமக்களுக்கு ஐரோப்பிய நாடுகளில் இனிமேல் உள்ள உரிமைகள் உள்ளிட்டவையும் இந்த ஒப்பந்தத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கமாக இருப்பதால், தனி உறுப்பு நாடான அயர்லாந்து மற்றும் பிரிட்டனின் அங்கமான வடக்கு அயர்லாந்து ஆகியவற்றுக்கு இடையே வர்த்தகம் செய்யப்படும் சரக்குகள் சுங்க சோதனைகளுக்கு தற்போது உட்படுத்தப்படுவதில்லை.

பிரெக்ஸிட் அமலானபின் பிரிட்டன் தனி வர்த்தக நடைமுறையைக் கையாளும் என்பதால், அங்கு சுங்கச் சோதனைகள் எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்பதும் இந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.

பிரிட்டனின் ஒரு பகுதியான வடக்கு அயர்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து நீடித்திருக்க ஆதரவாக வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.

இன்று ஒப்புதல் அளிக்கப்பட்ட இன்னொரு ஆவணமாக அரசியல் பிரகடனத்தில் பிரிட்டன் வெளியேறிய பிறகு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் மற்றும் பிரிட்டன் ஆகியவற்றுக்கு இடையேயான உறவு எத்தகையதாக இருக்கும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

அடுத்தது என்ன?

பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் விரைவாகவும் சமூகமாகவும் இந்த வெளியேற்றம் நடக்க வேண்டும் என்று விரும்பினாலும், பிரிட்டன் நாடாளுமன்றம் ஒருவேளை இந்த இறுதி ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிக்காவிட்டால், மேற்கொண்டு இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவது மற்றும் மீண்டும் இன்னொரு கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்துவது உள்ளிட்டவை நடத்த வேண்டியிருக்கும் என லித்துவேனிய அதிபர் டலியா கிருபாஸ்காடே தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடந்தபின் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் மீண்டும் சந்திக்கவுள்ளனர்.

பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைத் திரட்ட பிரிட்டன் பிரதமர் தெரீசா மே அடுத்த சில நாட்களைச் செலவிட வேண்டியிருக்கும்.

நாடாளுமன்றத்தில், கன்சர்வேடிவ், லேப் உள்பட பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்கள் இந்த ஒப்பந்தத்துக்கு எதிராக வாக்களிக்க திட்டமிட்டுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :