பாகிஸ்தானில் சீன தூதரகத்தின் மீதான தாக்குதலுக்கு இந்தியாவில் திட்டமிடப்பட்டதா?

  • 26 நவம்பர் 2018
சீன துணை தூதரகத்திற்கு அருகே எரியும் கார் படத்தின் காப்புரிமை XINHUA
Image caption சீன துணை தூதரகத்திற்கு அருகே எரியும் கார்

பாகிஸ்தானில் வெளியாகும் உருது பத்திரிகைகளின் கடந்த வார செய்திகளில் கராச்சியில் இருக்கும் சீன துணை தூதரகத்தில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல், கர்தார்பூர் வழித்தடத்தை திறந்துவிடுவது போன்றவை முக்கியமான செய்திகளாக இடம் பெற்றன.

நவம்பர் மாதம் 23ஆம் தேதியன்று கராச்சியில் இருக்கும் சீன துணை தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில், மொத்தம் ஏழு பேர் கொல்லப்பட்டனர். பொதுமக்கள் இருவர், பாதுகாப்பு படையினர் இருவர் மற்றும் தாக்குதல்தாரிகள் மூன்று பேர் உயிரிழந்தனர்.

பலூசிஸ்தான் லிபரேஷன் ஆர்மி என்ற பிரிவினைவாத அமைப்பு தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption பாகிஸ்தான் கராச்சி நகரில் உள்ள சீனத் துணைத் தூதரகம்

'தாக்குதலுக்கு இந்தியாவே பொறுப்பு'

இந்தத் தாக்குதலுக்கு இந்தியா தான் பொறுப்பு என பலூசிஸ்தான் உள்துறை அமைச்சர் சலீம் கோசா குற்றம் சாட்டியிருக்கிறார்.

பத்திரிகையாளர்களிடம் பேசிய சலீம் கோசா, சீன துணைத் தூதரகத்தின் மீதான தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அஸ்லம் அச்சு இந்தியாவில் இருப்பதாக குற்றம் சாட்டினார்.

அஸ்லம் அச்சு இறந்துவிட்டதாக தகவல் வந்தது தவறு என்று கூறும் பலூசிஸ்தான் உள்துறை அமைச்சர் சலீம் கோசா, அவர் தற்போது அஸ்லம் இந்திய மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் கிடைத்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

இந்த தகவல்கள், பலூசிஸ்தானின் நிலைமையை மோசமாக்குவதில் இந்தியா முழு மூச்சாக ஈடுப்பட்டிருப்பதை காட்டுவதாக அவர் குற்றம் சாட்டுகிறார்.

பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பு (சி.டி.டி.) தலைவரான ராஜா உமர் கத்தாபின் கருத்துப்படி, இந்தத் தாக்குதலில் பயன்படுத்தப்பட்டுள்ள சி-4 பிளாஸ்டிக் வெடிகுண்டு, பாகிஸ்தானில் கிடைப்பதில்லை.

ஜங் பத்திரிகையின்படி, தாக்குதலுக்கு ஏற்பாடு செய்தவர்களே அதற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களை கொடுத்ததாகவும் உமர் கத்தாப் கூறுகிறார்.

அவரின் கருத்துப்படி, இது பாகிஸ்தானின் எதிரி நாட்டின் புலனாய்வு முகமையின் முயற்சி இது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption பாகிஸ்தானில் உள்ள சீன துணை தூதரகம்

'பாகிஸ்தானும், சீனாவும் ஓரணியில்'

இந்தத் தாக்குதல் பற்றி பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தான் அரசு, எதிர்கட்சியினர், ராணுவம் மற்றும் சீன அரசு என அனைவரும் ஒரே தரப்பில் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

அண்மையில் சீனாவுடன் பாகிஸ்தான் கையெழுத்திட்ட ஒப்பந்தத்திற்கு விரோதமானவர்கள், சீன துணை தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியிருக்கக்கூடும் என இம்ரான் கூறியதாக ஜங் பத்திரிகை கூறுகிறது.

அந்த பத்திரிகையின்படி, சீன துணை தூதரகத்தின் மீதான தாக்குதலை முறியடித்த பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினருக்கு சீன அரசு பாராட்டு தெரிவித்துள்ளதாக ஜங் பத்திரிகை கூறுகிறது.

படத்தின் காப்புரிமை AFP

சீன-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்திற்கு, பரஸ்பரம் இரு நாடுகளும் ஒத்துழைப்பை தொடரும் என இம்ரான் கான் கூறியிருக்கிறார்.

இந்தத் தாக்குதலை முறியடித்த பாதுகாப்புப் படைப் பிரிவின் துணை கண்காணிப்பாளர் சுஹாயி அஜீஜ் தல்பூர் பற்றி தற்போது பரவலாக பேசப்படுகிறது.

"நாட்டின் துணிச்சலான மகள் பயங்கரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தின் முன்னணியில்" என்று 'துனியா' என்ற பத்திரிகை தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளது.

காவல்துறையின் உயரிய விருதான காயத்-ஏ-ஆஜம் என்ற விருதுக்கு சுஹாயி அஜீஜ் தல்பூரின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அந்த பத்திரிகை கூறுகிறது.

காவல்துறையின் உயரிய விருதுக்கு பரிந்துரைக்கப்படும் முதல் பெண் அதிகாரி சுஹாயி அஜீஜ் தல்பூர் என்று 'நவா-ஏ-வக்த்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

Image caption கர்தாபூர் குருத்வாரா தர்பார் சாஹிப்

பாகிஸ்தானின் அழைப்பை ஏற்க மறுக்கும் சுஷ்மா

இந்திய எல்லையில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் கர்தாபூரில் உள்ளது குருத்வாரா தர்பார் சாஹிப். பஞ்சாப் மாகாணத்தின் நரோவல் மாவட்டத்தில் உள்ள இந்த குருத்வாராவிற்கு அமிர்தசரஸ் அல்லது லாகூரில் இருந்து 3 மணி நேரம் மட்டுமே ஆகும்.

இந்த குருத்வாராவுக்கு இந்திய யாத்ரீகர்கள் சுலபமாக சென்று வருவதற்காக, விசா அல்லாத இலவச அனுமதி கொடுக்கும் திட்டம் இரு நாடுகளுக்கு இடையிலும் முன்னெடுக்கப்பட்டது. இதற்கான வழித்தடத்தை திறந்துவிடவும் பாகிஸ்தான் ஒப்புக்கொண்டது.

ஜங் பத்திரிகையின்படி, நவம்பர் 28ஆம் தேதி பாகிஸ்தான், இதற்கான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கர்தார்பூருக்கு வரவேண்டும் என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் கரைஷி அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் பாகிஸ்தானின் அழைப்பை சுஷ்மா ஸ்வராஜ் மறுத்துவிட்டார் என்று ஜங் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கெளர் மற்றும் ஹர்த்ஹீப் பூரி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் செல்வார்கள் என்று சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்ததாகவும் ஜங் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் பஞ்சாப் மாநில முதலமைச்சர் அம்ரிந்தர் சிங் மற்றும் அவரது அமைச்சரவை சகா நவ்ஜோத் சிங் சித்து கர்தார்பூர் வரவேண்டும் என்று பாகிஸ்தான் அழைப்பு விடுத்திருந்தது.

இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவதில் தனக்கு மகிழ்ச்சி என்றும், இந்திய அரசு அனுமதி கொடுத்தால் தான் கலந்துக் கொள்ள ஆர்வமாக இருப்பதாகவும் நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்திருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :