இந்தோனீசிய விமான விபத்து: பறக்க தகுதியற்ற விமானத்தை இயக்கியதால் ஏற்பட்ட விளைவு

பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் படத்தின் காப்புரிமை Reuters
Image caption விமான விபத்து நடைபெற்ற பகுதிக்கு சென்ற பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர், பலியானோருக்க அஞ்சலி செலுத்தினர்.

கடந்த மாதம் விபத்திற்குள்ளாகி 189 பேர் பலியாகிய லயன் ஏர் விமானம் பறக்க தகுதியின்றி இருந்ததாகவும், அதை நிறுத்தி வைத்திருக்க வேண்டும் என்று இந்தோனீசிய விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் 29ம் தேதி இந்தோனீசிய தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து மேலெழுந்து பறந்த சற்று நேரத்தில் போயிங் 737 மேக்ஸ் விமானம் ஜாவா கடலில் விழுந்தது.

முந்தைய விமானங்களில் தொழில்நுட்ப பிரச்சனைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

737 போயிங் விமானத்தின் புதிய பதிப்பான 737 மேகஸ் விமானம் விரைவாக விற்கப்படும் ஒன்றாகியுள்ளது.

சற்றுநேரமே இந்த விமானம் வானில் பறந்ததாக அதிகாரிகள் அறிந்திருந்ததையே முதற்கட்ட அறிக்கையும் விவரிக்கிறது.

ஆனால், இந்த விபத்திற்கான சரியான காரணத்தை புலனாய்வாளர்கள் வழங்கவில்லை.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption எந்திரங்களில் ஒன்றில் ஆய்வு மேற்கொள்ளும் புலனாய்வாளர்கள்.

என்ன சொல்கிறது அறிக்கை ?

இத்தகைய விமானங்களில் முன்னதாக பிரச்சனைகள் இருந்தபோதிலும், லயன் ஏர் இந்த விமானத்தை இயக்கியுள்ளது என்று தேசிய போக்குவரத்து பாதுகாப்பு குழு கண்டறிந்துள்ளது.

இதற்கு முந்தைய விமானம் பாலித்தீவிலுள்ள டென்பசாரில் இருந்து ஜகார்த்தாவுக்கு சென்றது.

"அப்போது இந்த விமானத்தில் தொழிற்நுட்ப பிரச்சனை இருந்துள்ளது. ஆனால், விமானி பயணத்தை தொடர முடிவு செய்தார்" என்று தேசிய போக்குவரத்து பாதுகாப்பு குழுவின் விமான போக்குவரத்து தலைவர் நுர்காக்யோ உடோமோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த பிரச்சனைகளால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பராமரிப்பு நடைமுறைகள் பற்றி இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

"எங்களது கருத்தின்படி, இந்த விமானம் மேலழுந்து பறக்க தகுதியில்லாதது. இது இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று அவர் கூறினார். முடிவு பற்றி இந்த குழுவின் அறிக்கை எதையும் தெரிவிக்கவில்லை.

போயிங் 737 மேக்ஸ் விமானங்களில் காணப்படும் புதிய வசதியான விமான இயக்கத்தை தானாக நிறுத்திவிடும் அமைப்போடு விமானிகள் சிரமப்பட்டதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

தானாக இயங்கும் அமைப்பை ரத்து செய்கின்ற செயல்முறைகளை விமானிகள் பயன்படுத்தினார்களா என்பது தெளிவாக தெரியவில்லை.

விபத்திற்குள்ளான விமானத்தின் தரவு பதிவு கருவியை அதிகாரிகள் கண்டுபிடித்து விட்டாலும், விமானிகள் அறையில் நடப்பதை பதிவு செய்கின்ற குரல் பதிவுக்கருவியை இன்னும் கண்டறிய வேண்டியுள்ளது. இந்த ஒலிப்பதிவு கருவிதான் விமானிகள் எவ்வாறு எதிர்வினையாற்றினார்கள் என்று மேலதிக தகவல்களை வழங்கும்.

தானாக செயல்படும் பாதுகாப்பு வசதிகளை மையமாக வைத்து விமான வடிவத்தின் குறைபாடுகளை குறிப்பிட்டு பாதிக்கப்பட்டோரின் குடும்பதினர் போயிங் விமான தயாரிப்பு நிறுவனத்தின் மீது வழக்கு தொடுத்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: