''ரஷ்யாவுடன் போர் ஏற்படும் அபாயம்'' - எச்சரிக்கிறார் யுக்ரேன் அதிபர்

ரஷ்ய ஆண்கள் படத்தின் காப்புரிமை Getty Images

ராணுவச் சட்டம் அமலில் இருக்கும்போது 16 முதல் 60 வயது வரையிலான ரஷ்ய ஆண்களை யுக்ரைன் தன் நாட்டிற்குள் அனுமதிக்காது என்று எல்லை பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது.

"மனிதநேய அடிப்படைகளில்" மட்டும், அதாவது இறுதிச்சடங்கு போன்ற காரியங்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் எல்லையை பகிர்ந்துள்ள 10 பிராந்தியங்களில் ஒரு மாதகாலத்திற்கு ராணுவச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த வார இறுதியில், கருங்கடலில் 3 யுக்ரேனிய கப்பல்கள் மற்றும் 24 மாலுமிகளை ரஷ்ய படைகள் கைப்பற்றியதையடுத்து பதற்றம் நிலவி வரும் சூழலில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

க்ரைமியா கடல் பகுதியில் ரஷ்ய படைகள் புகுந்து தாக்குதல் நடத்தி மூன்று யுக்ரேனிய கப்பல்களை கைப்பற்றி 24 மாலுமிகளை சிறைப்படுத்தியதன் பின்னர் யுக்ரைன் அதிபர் தனது அச்சங்களை வெளிப்படுத்தியிருந்ததையடுத்து ரஷ்ய தரப்பில் இருந்து இந்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது.

ஞாயிற்று கிழமை நடந்த கருங்கடலில் நடந்த நிகழ்வானது வெளிப்படையாக சர்வதேச விதிகளை மீறும் ஒன்று என யுக்ரேன் தெரிவித்துள்ளது. ஆனால் யுக்ரேனிய கப்பல்கள் தங்களது எல்லைப்பகுதியை மீறி நுழைந்ததாக ரஷ்யா கூறுகிறது.

யுக்ரேன் என்ன சொல்கிறது?

அதிபர் பெட்ரோ போரோஷென்கோ நாட்டின் உயர் பாதுகாப்பு அதிகாரிகளை சந்தித்ததன் பிறகு இத்தடை அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

யுக்ரேனில் தனியார் படைகள் உருவாவதை தடுக்கும் வண்ணம் இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளதாக யுக்ரேனிய அதிபர் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 2014-ல் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் குழுவாகச் சேர்ந்து கிழக்கு யுக்ரேனில் அரசு படைகளுக்கு எதிராக சண்டையிட்டதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

ராணுவச் சட்டத்தின் கீழ் உள்ள பிராந்தியங்களில் ரஷ்ய குடிமக்களுக்கான பதிவீடுக்கான விதிகள் கடுமையாக்கப்படும் என போரோஷென்கோ தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவுடன் ''முழு அளவிலான போர்'' ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாக செவ்வாய்கிழமையன்று அவர் எச்சரித்துள்ளார்.

''எங்களது எல்லை பகுதியோடு உள்ள தளத்தில் ரஷ்ய டாங்கிகளின் அளவு மூன்று மடங்கு அதிகரித்திருக்கிறது'' என அதிபர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அதிகரிக்கும் பதற்றம் தொடர்பாக மிகவும் கவலை அடைவதாக இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த ஐரோப்பிய ஆணையம், ராணுவ பலத்தை ரஷ்யா பயன்படுத்தியது தவறு என்று குறிப்பிட்டுள்ளது.

ஆனால், ரஷ்யா மீது எவ்விதமான தடைகளையும் ஐரோப்பிய ஆணையம் விதிக்கவில்லை.

இந்த சம்பவம் இவ்விரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இரு நாடுகளும் ஒன்றின் மீது ஒன்று பழி சுமத்தியுள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்