பேய் மழையை, வெள்ளத்தை தாங்கும் டோக்கியோவின் ரகசியம் என்ன?

  • 3 டிசம்பர் 2018
பேய் மழையையும், வெள்ளத்தையும் தாங்கும் டோக்கியோவின் ரகசியம் என்ன? படத்தின் காப்புரிமை Getty Images

சில நிமிடங்கள் பெய்த மழைக்கு சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலைமையும், சில மணிநேரங்களுக்கு மழை பெய்தால் வீடே வெள்ளத்தில் தத்தளிக்கும் சூழ்நிலையும் தமிழகம் உள்பட பெரும்பாலான இடங்களில் நிலவி வருகின்றன.

இந்நிலையில், உலகின் மிகப் பெரிய நகரங்களில் ஒன்றும், அதிக மக்கள் தொகை நெருக்கமுள்ள நகரங்களில் முதலாவதாகவும், இயற்கை பேரிடர்களை அதிகம் சந்திக்கும் நகரமாகவும் விளங்கும் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வெள்ளப்பாதிப்பை தவிர்ப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இந்த கட்டுரை விளக்குகிறது.

ஜப்பானின் பொறியியல் வியப்புகளில் ஒன்றாக கருதப்படும், டோக்கியோ நகர சுரங்க வெள்ளநீர்க் கால்வாயை நோக்கி செஸில்லா டார்டஜடா என்ற பெண் நீண்ட படிக்கட்டுகளில் செல்கிறார். சில நிமிட நடைப்பயணத்துக்கு பின்னர் செஸில்லா சுமார் 500 தூண்களை கொண்ட வெள்ளப்பாதிப்பு தடுப்பு சுரங்கத்தின் தரைப்பகுதிக்கு செல்கிறார்.

"இந்த மிகப் பெரிய அமைப்பிற்குள் உங்களை நீங்களே மிகவும் சிறியதாக உணருவீர்கள்" என்று சிங்கப்பூரை சேர்ந்த நீர் மேலாண்மை நிபுணரான செஸில்லா கூறுகிறார். "அந்த பாதாளத்தை நீங்கள் பார்த்தவுடன், வெள்ளத்தை எதிர்கொள்ள டோக்கியோ தன்னை எவ்வாறு தயாராக வைத்துள்ளது என்பது உங்களுக்கு புரியும்" என்று அவர் கூறுகிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

வடக்கு டோக்கியோ வெள்ளப்பாதிப்பில் சிக்குவதை அறவே தடுக்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ள இந்த சுரங்கமானது தரைப்பகுதியிலிருந்து சுமார் 22 மீட்டர்கள் ஆழத்தில், 6.3 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தசாப்தங்களாக ஜப்பானின் தலைநகரமான டோக்கியோ தனது பலமிக்க வெள்ளத்தடுப்பு அமைப்பின் மூலம் புயல்கள் முதல் கனமழை வரை பல்வேறு காலநிலைகளை சமாளிக்கும் நிலைக்கு முன்னேறியுள்ளது. ஆனால், தற்போது உலக வெப்பமயமாதலின் விளைவாக கணிப்பை மீறி தொடர்ந்து மாறிவரும் வானியல் நிகழ்வுகளை எதிர்கொள்ளும் வகையில் மீண்டுமொருமுறை அந்நகரம் தன்னைத்தானே மறுமதிப்பீடு செய்து வருகிறது.

டோக்கியோவின் நீண்ட வரலாற்றின் எல்லா பக்கங்களிலும் அந்நகரம் எவ்வாறு வெள்ள பாதிப்புகளை சந்தித்துள்ளது என்பதை தெரிந்துகொள்ள முடியும்.

"இப்படிப்பட்ட இடத்தில் இவ்வளவு பெரிய நகரத்தை நிர்மாணிப்பதற்கு யார் முடிவு செய்தது என்று எனக்கு தெரியவில்லை" என்று இருபது வருடங்களுக்கு மேலாக நீர் மேலாண்மை துறையில் பணியாற்றி வரும் செஸில்லா நகைச்சுவையாக கூறுகிறார்.

பல நூற்றாண்டுகளாக டோக்கியோ நீர் மேலாண்மையில் சிறப்பாக செயல்பட்டாலும், தற்போதுள்ள வெள்ளத்தடுப்பு அமைப்புமுறை உலகப் போருக்கு பின்னர்தான் தொடங்கியது. 1947ஆம் ஆண்டு டோக்கியோவை கத்லீன் என்ற சூறாவளி தாக்கியதில் கிட்டத்தட்ட 31,000 வீடுகள் முற்றிலும் சேதமடைந்ததுடன், 1,100 பேர் உயிரிழந்தனர். பத்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் கணோகவா என்ற சூறாவளி ஒரே வாரத்தில் 400 மிமீ மழை டோக்கியோவில் பொழிந்ததால் அந்நகரம் முழுவதுமே தண்ணீரில் மிதக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

அடுத்தடுத்து ஏற்பட்ட சூறாவளிகள் டோக்கியோவை புரட்டிப்போட்டதால் அந்நாட்டு அரசாங்கம் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்தது.

"உலகப் போர் விளைவித்த மோசமான பாதிப்புகளிலிருந்து மீண்டு வந்த 1950-1960க்கு இடைப்பட்ட காலத்தில் கூட ஜப்பான் அரசாங்கம் தனது வருடாந்திர தேசிய நிதி ஒதுக்கீட்டில் சுமார் 6-7 சதவீதத்தை பேரழிவு மற்றும் ஆபத்து குறைப்பு பணிகளுக்காக முதலீடு செய்தது" என்று ஜப்பானிலிலுள்ள ஜிக்கா என்னும் பன்னாட்டு நிறுவனத்தின் பேரிடர் தடுப்பு நிபுணரான மிக்கி இனவொக்கா கூறுகிறார்.

டோக்கியோ நகர திட்டமிடுதலில் ஈடுபடுகிறவர்கள் பல்வேறு விதமான பிரச்சனைகளுக்கு எப்போதுமே தயாராக இருக்கவேண்டியுள்ளது. ஏனெனில், நதிகள் பாய்வதற்கு எதிர்பக்கத்தில் அதிகளவில் மழை பொழிந்தால் அதன் கரைகள் உடைந்து, அருகிலுள்ள பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கும் வாய்ப்புள்ளது. அதுவே நகரத்தின் மையப்பகுதியில் கனமழை பொழிந்தால், அங்குள்ள வடிகால் அமைப்புகளில் பிரச்சனை ஏற்படும் வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி, நகரின் கடலோர பகுதிகள் சுனாமியால் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக அடிக்கடி ஏற்படும் நிலநடுக்கம் எவ்விதமான பாதிப்புக்களை ஏற்படுத்த கூடும் என்று நினைத்துப் பாருங்கள்.

படத்தின் காப்புரிமை Getty Images

இடைவிடாமல் தாக்கிய இயற்கை பேரிடர்களை போன்றே, பல தசாப்தங்களாக தொடர்ந்து திட்டமிட்டு ஜப்பான் தற்போது வெள்ளப்பாதிப்புகளை தடுக்கக்கூடிய பல அணைகள், நீர்த்தேக்கங்கள், தடுப்பணைகளுடன் தைரியத்துடன் காட்சியளிக்கிறது. டோக்கியோ நகரத்தில் எரிவாயு குழாய்களும், சுரங்க ரயில்பாதைகளும் ஒருபுறமிருக்க, சாலையின் நடுவே ஜப்பானின் பொறியியலுக்கு உதாரணமாக திகழும் இந்த சுரங்கங்கள் அமைந்துள்ளன.

சுமார் இரண்டு பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில், 13 ஆண்டுகால உழைப்பில் கட்டப்பட்டுள்ள இந்த சுரங்க அமைப்பு உலகின் மிகப் பெரிய வெள்ளத்தடுப்பு அமைப்பாக விளங்குகிறது.

"ஜப்பான் கடினமான தருணங்களிலிருந்து பாடம் கற்பதை நம்பும் நாடு" என்று கடந்தாண்டு இந்த அமைப்பை நேரில் பார்வையிட்ட செஸில்லா கூறுகிறார்.

டோக்கியோவில் வடக்குப்பகுதியிலுள்ள சிறிய மற்றும் நடுத்தரமான ஆறுகளிலிருந்து தண்ணீரை உறிஞ்சும் இந்த சுரங்கங்கள் தொலைதூரத்திலுள்ள அதிக கொள்ளவுள்ள தண்ணீரையும் பிடிக்கக்கூடிய எடோ என்னும் ஆறுக்கு நீரை எடுத்துச்செல்கிறது.

அதாவது டோக்யோவிலுள்ள ஏதாவதொரு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் அதன் நீளத்துக்கு இணையாக அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்கத்தின் உருளை வடிவ நுழைவுப் பகுதிகள் திறந்து தண்ணீரை உறிஞ்ச ஆரம்பிக்கும். இந்த சுரங்க அமைப்பின் மையப்பகுதியை தண்ணீர் அடையும்போது, ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைகிறது. பிறகு, சுரங்கத்தின் மைய பகுதியிலிருந்து 'எடோ' ஆற்றை நோக்கி நீரானது பம்புகளின் மூலம் உந்தப்படும்.

படத்தின் காப்புரிமை Carl Court
Image caption வெள்ளத்தடுப்பு அமைப்பின் கட்டுப்பாட்டு அறை

தற்போதுள்ள அமைப்புகளின் மூலம் ஒரு மணிநேரத்திற்கு 50 மில்லி மீட்டர் மழை பெய்தாலும் அதை தாங்க முடியும் என்று டோக்கியோ நகர அதிகாரிகள் கூறுகின்றனர்.

இருந்தபோதிலும், ஜப்பான் மட்டுமின்றி உலகம் முழுவதும் மாறிவரும் மழைப்பொழிவின் வீரியத்தை தாக்குப்பிடிக்கும் வகையில், டோக்கியோவின் சில பகுதிகளில் 65 முதல் 75 மில்லி மீட்டர் வரையிலான மழைப்பொழிவை தாங்கும் வெள்ளத்தடுப்பு அமைப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

உலக வெப்பமயமாதலால் டோக்கியோ மட்டுமின்றி நியூயார்க், ஷாங்காய், பாங்காங் உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் வெள்ளம் உள்ளிட்ட பல்வேறு இயற்கை பேரிடர்களை எதிர்நோக்கியுள்ளன. வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் உலக நாடுகள் டோக்கியோவை முன்னுதாரணமாக கொண்டு செயல்பட்டு வருகின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்