பிரான்சில் கலவரம்: அவசர பாதுகாப்பு கூட்டம் நடத்திய மக்ரோங்

கடந்த சில மணிநேரங்களில் நிகழ்ந்த சில முக்கிய உலக நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

எரிபொருள் விலை உயர்வு - அவசர பாதுகாப்பு கூட்டம் நடத்திய மக்ரோங்

படத்தின் காப்புரிமை EPA
Image caption பிரான்சில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிரான போராட்டத்தில் சிலை சேதம்

எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக பிரான்சில் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில் பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங் அவசர பாதுகாப்பு கூட்டம் ஒன்றை நடத்தியிருக்கிறார்.

அவசர நிலை பிரகடனம் செய்யப்படலாம் என செய்திகள் வெளிவந்தநிலையில் அதுகுறித்து இந்த சந்திப்பில் எதுவும் விவாதிக்கப்படவில்லை என அமைச்சர்கள் கூறியுள்ளனர்.

எரிபொருள் வரி உயர்த்தப்பட்டதால் பல்வேறு பொருள்களின் விலை உயர்ந்து பொதுமக்கள் மத்தியில் கோபம் ஏற்பட்டுள்ளது.

வன்முறைக்கு வழிவகுத்தவர்கள் மீது முழுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நீதித் துறை அமைச்சர் நிக்கோலே பெல்லுபெட் உறுதியளித்திருக்கிறார்.

ஞாயற்றுக்கிழமையன்று பாதுகாப்பு கூட்டம் நடத்துவதற்கு முன்னதாக பாரிசில் பாதிக்கப்பட்ட இடங்களை மக்ரோங் நேரில் பார்த்தார் .

சமீபத்தில் வெடித்த வன்முறையால் 23 பாதுகாப்பு படை வீரர்கள் உள்பட நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். மேலும் நானூறுக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் தாக்குதலில் கொல்லப்பட்ட தாலிபன் மூத்த தலைவர்

படத்தின் காப்புரிமை EPA
Image caption முல்லா அப்துல் மனன் கொல்லப்பட்டதற்கு பின்னர் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது

அமெரிக்காவின் வான் தாக்குதல் ஒன்றில் ஆப்கன் தாலிபனின் மூத்த தலைவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

நாட்டின் தெற்கு பகுதியில் ராணுவ நடவடிக்கைகளுக்கு தலைமையேற்று வழிநடத்தி வந்தவரும், ஹெல்மண்ட் மாகாணத்தின் தாலிபன் மாற்று நிர்வாகத்தின் தலைவராகவும் இருந்தவருமான முல்லா அப்துல் மனன் சனிக்கிழமை இரவு கொல்லப்பட்டுள்ளார்.

செல்வாக்கு, அனுபவம், ஈர்ப்பு மிக்கவராக இருந்த அவரது மறைவு தாலிபனுக்கு இழப்பு என்றும் செய்தியாளர்கள் விவரிக்கின்றனர்.

கடந்த சில மாதங்களாக, அரச படைகளின் மீதான தாக்குதல் அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளது. தீவிரவாதிகளின் இலக்குகள் மீது வான் தாக்குதல்களும் அதிகரித்துள்ளன.

ஸ்பெயினில் கால்தடம் பதித்த வலதுசாரி கட்சி

படத்தின் காப்புரிமை Reuters
Image caption வாக்ஸ் கட்சி தலைவர் சாண்டியாகோ அபாஸ்கல் மற்றும் வேட்பாளர் பிரான்சிஸ்கோ செர்ரானோ வெற்றியை கொண்டாடுகிறார்கள்

தெற்கு ஸ்பெயினில் நடந்த பிராந்திய தேர்தல்களில் தீவிர வலதுசாரின வாக்ஸ் கட்சி, 1975-ல் நாட்டின் ராணுவ ஆட்சி முடிவடைந்த பிறகு முதன் முறையாக சில வெற்றிகளைப் வெற்றிபெற்றுள்ளது.

குடியேறிகள், கேட்டலன் பிரிவினைவாதம் உள்பட பல விஷயங்களில் கடுமையான பார்வை உடைய இந்தக் கட்சி ஆண்டலூசியா பிராந்தியத்தில் எதிர்கால கூட்டணியை நிர்ணயிப்பதில் இந்த வாக்ஸ் கட்சி முக்கிய பங்கு வகிக்கும் நிலை இதனால் உருவாகியுள்ளது. இம்முறை தேர்தலில் 12 இடங்களை இக்கட்சி வென்றுள்ளது.

ஆளும் சோஷலிஸ்ட் கட்சி அதிக இடங்களை (33) வென்றிருந்தாலும், இக்கட்சி பெற்றிருந்த பெரும்பான்மையில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளது.

இடது சரியான போடெமாஸ் கட்சியுடன் கூட்டணிக்கு சோஷலிச கட்சி முயற்சிக்கும்.

ஸ்பெயின் அரசியலில் வாக்ஸ் கட்சியின் வெற்றியானது ஐரோப்பா முழுவதும் சமீப காலத்தில் ஏற்பட்டுவரும் தேசியவாத எழுச்சியின் தொடர்ச்சியாகும்.

ஸ்பெயினின் மக்கள் தொகை மிகுந்த ஆண்டலூசியாவின் தெற்கு பகுதி, மத்தியத் தரைகடலைக் கடந்து ஸ்பெயினுக்குள் குடியேறிகள் நுழையும் முக்கிய இடமாக விளங்குகிறது. இங்கே வேலையில்லா திண்டாட்டம் முக்கிய பிரச்னையாக உள்ளது.

பிராந்திய தேர்தலின் முடிவானது ஸ்பெயினின் புதிய பிரதமர் பெட்ரோ சான்செஸ்ஸை பாதிக்கக்கூடும் என்கிறது எல் முண்டோ நாளிதழ். சோஷலிச கட்சியின் தோல்வியும் அரசின் பலவீனமும் புதிய பிரதமரை முன் கூட்டி தேர்தல் நடத்தும் முடிவை எடுக்க அழுத்தம் தரக்கூடும் என்கிறது அந்நாளிழ்.

மோதிரத்தை கண்டுபிடித்து பின்னர் அதை தொலைத்த ஜோடியையும் கண்டுபிடித்த நியூயார்க் காவல்துறை

படத்தின் காப்புரிமை NYPD
Image caption ஜான், டேனிலா எனும் இந்த ஜோடி அமெரிக்காவில் மோதிரத்தை தவறவிட்ட பிறகு பிரிட்டனில் உள்ள தங்களது வீட்டுக்கு திரும்பியது

நியூயார்க்கில் ஒரு காதல் ஜோடி நிச்சயதார்த்தத்தில் மாற்றிக்கொள்வதற்கு வைத்திருந்த மோதிரம் சாக்கடையில் தவறிவிழுந்தது. இந்நிலையில் நியூயார்க் காவல்துறை முதலில் மோதிரத்தை கண்டுபிடித்தது. பிறகு அதைத்தவற விட்ட ஜோடியையும் கண்டுபிடித்து அவர்களிடம் மோதிரத்தை தர ஏற்பாடு செய்துள்ளது.

வெள்ளிக்கிழமையன்று டைம்ஸ் ஸ்கொயரில் பிரிட்டனைச் சேர்ந்த ஒரு ஜோடி மோதிரத்தை மாற்றிக்கொண்டு திருமண நிச்சயம் செய்து கொள்ள முடிவெடுத்து மோதிரத்தை எடுக்கையில் அதைத்தவறவிட்டது.

சிசிடிவி புகைப்படங்கள் அந்த ஜோடியானது மோதிரத்தை எடுக்க பல முறை முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை என்பது தெரிந்தது.

ஆனால் காவல்துறையினர் அதை கண்டெடுத்து சுத்தம் செய்துள்ளனர் மேலும் பிரிட்டனில் உள்ள அத்தம்பதிகளிடம் மோதிரத்தை ஒப்படைக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் என நியூயார்க் காவல்துறை ட்வீட் செய்துள்ளது.

இந்த ஜோடி பிரிட்டனின் கேம்பிரிட்ஜ்ஷைரின் பீட்டர்போராவைச் சேர்ந்தது என்பதை பிபிசிக்கு தெரிய வந்துள்ளது.

ஜான், டேனிலா எனும் இந்த ஜோடி அமெரிக்காவில் மோதிரத்தை தவறவிட்ட பிறகு பிரிட்டனில் உள்ள தங்களது வீட்டுக்கு திரும்பியது.

வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்கு முன் எடுக்கப்பட்ட சிசிடிவி காணொளியை காவல்துறை வெளியிட்டுள்ளது. அதில் ஒரு காலை மடக்கி ஒரு நபர் மோதிரத்தை எடுக்க முயற்சிப்பது தெரிகிறது.

முன்னதாக, நியூயார்க் காவல்துறை இந்த காணொளியை ட்விட்டரில் வெளியிட்டு சம்பந்தப்பட்ட ஜோடியை தாங்கள் கண்டுபிடிக்க உதவுமாறு கேட்டிருந்தது. இந்த காணொளியை சுமார் 58 லட்சம் பேர் பார்த்தது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்