முடிவுக்கு வருகிறதா அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப் போர்?

முடிவுக்கு வருகிறதா அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப் போர்? படத்தின் காப்புரிமை Getty Images

சீனாவில் இறக்குமதியாகும் அமெரிக்க கார்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 40 சதவீத வரிகளை 'நீக்கவதற்கும் குறைப்பதற்கும்' சீனா முடிவு செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

எந்த வித மேற்கொண்ட தகவல்களும் இல்லாமல் டிரம்ப் இதனை டிவிட்டரில் தெரிவித்திருந்தார். இதற்கு சீனா இன்னும் பதிலளிக்கவில்லை.

இந்த முடிவு உறுதி செய்யப்பட்டால் அமெரிக்க - சீன வர்த்தக போரால் தடுமாற்றத்தில் இருந்த கார் உற்பத்தித்துறை இதை பெரிதும் வரவேற்கும்.

அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையே தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த வர்த்தகப் போரை தற்காலிகமாக நிறுத்துவதற்கு இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.

கடந்த வாரம் நடைபெற்ற ஜி20 மாநாட்டிற்கு பிறகு இருநாட்டு அதிபர்களுக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பின்போது, பேச்சுவார்த்தைகளுக்கு இடமளிக்கும் விதமாக 90 நாட்களுக்கு வரிகளை உயர்த்தப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளனர்.

இருநாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்படாவிட்டால், அடுத்த வருடத்தின் தொடக்கத்தில் 200 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான சீன பொருட்கள் மீதான வரி 10 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை உயர்த்தப்படுவதுடன், மேலும் பல சீன பொருட்களுக்கு புதிதாக வரி விதிக்கவும் நேரிடும்.

ஜி20 மாநாட்டை தொடர்ந்து சீன அதிபரும் அமெரிக்க அதிபரும் தங்களது பொருளாதார குழுவினரிடம், விதிக்கப்பட்டுள்ள வரிகள் அனைத்தையும் நீக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாக சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது என ராயட்டர்ஸ் செய்தி முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

தங்கள் உள்நாட்டில் உற்பத்தியான பொருட்களின் விற்பனையை அதிகரிக்க இறக்குமதி பொருட்கள் மீது இருநாட்டு அதிபர்களும் வரிகளை விதித்தனர்.

சீனாவின் நியாமற்ற வர்த்தக நடைமுறைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும், அதன் அறிவுசார் சொத்து திருட்டுக்காகவும் அந்நாட்டின் பொருட்கள் மீது வரி விதிக்கப்படுவதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது.

ஜூலை மாதம் தொடங்கி சீன பொருட்கள் மீது அமெரிக்கா 250 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான வரி விதித்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்க பொருட்கள் மீது சுமார் 110 பில்லியன் டாலர் மதிப்பிலான வரியை சீனா விதித்தது

எதற்கெல்லாம் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது?

வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனா மீது அமெரிக்கா விதித்துள்ள வரிகளில் அடுத்த 90 நாட்களுக்கு எவ்வித மாற்றமும் இருக்காது என்று தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும், "இந்த குறிப்பிட்ட காலக்கட்டத்தில் இந்த விவகாரத்தில் இருதரப்பிலும் எவ்வித தீர்வும் எட்டப்படவில்லை என்றால், தற்போதுள்ள 10 சதவீத வரி 25 சதவீதமாக உயர்த்தப்படும்" என்று அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

"அமெரிக்கா, சீனா இடையே வர்த்தகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை குறைக்கும் பொருட்டு சீனா அமெரிக்காவிடமிருந்து கணிசமான அளவு விவசாயம், எரிசக்தி, தொழில்துறை உள்ளிட்ட பல துறைகளை சார்ந்த சேவைகளை வாங்கும்" என்று எதிர்பார்ப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இருநாடுகளும் தொழில்நுட்பம், அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு, இணைய ஊடுருவல்கள் மற்றும் சைபர் திருட்டு தொடர்பாக உடனடியாக பேச்சுவார்த்தைகள் தொடங்க ஒப்புக்கொண்டுள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: