900 ஆண்டுகள் பழமையான தங்க காசுகள் கண்டுபிடிப்பு - சுவாரஸ்ய தகவல்

பழமையான தங்ககாசுகள் படத்தின் காப்புரிமை YANIV BERMAN

கடந்த சில மணிநேரங்களில் நிகழ்ந்த சில முக்கிய உலக நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

பழமையான தங்ககாசுகள்

படத்தின் காப்புரிமை YAAKOV SHIMDOV

தற்போது இஸ்ரேல் அமைந்துள்ள பகுதியில் இருந்த பழமையான துறைமுகம் அருகே 900 ஆண்டுகளுக்கு முன்பு புதைத்து வைக்கப்பட்ட தங்க காசுகள் தொல்பொருள் ஆய்வாளர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கிணறு அருகே கற்களுக்கு நடுவே இருந்த வெண்கல பானையில் ஒரு காதணி உடன் இந்த தங்க காசுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. திரும்ப எடுத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் யாரோ ஒருவரால் இவை புதைத்து வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அதனை அவர் திரும்ப எடுக்கவில்லை என்று நம்பப்படுகிறது. 1101ஆம் ஆண்டு இந்த பகுதியில் நடந்த போரில் சிலுவை படையால் இதனை புதைத்து வைத்தவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

பிரான்ஸ் போராட்டம் - 80 வயது மூதாட்டி மரணம்

படத்தின் காப்புரிமை AFP

பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக பிரான்ஸில் நடந்து வரும் போராட்டத்தில் 80 வயது முதாட்டி ஒருவர் பலியாகி உள்ளார். போராட்டம் நடந்த வீட்டின் அருகே அவரது அடுக்குமாடி குடியிருப்பில் அவர் வசித்து வந்திருக்கிறார். அவர் வீட்டில் ஜன்னலில் கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டிருக்கிறது. இதில் பாதிப்புக்குள்ளானவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள். ஆனால், அறுவை சிகிச்சையின் போது அவர் மரணம் அடைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உடல் கண்டுபிடிப்பு

படத்தின் காப்புரிமை FINDING CARLA / FACEBOOK

கோஸ்டா ரிகாவில் எர்பின்பிக்கு சொந்தமான இடத்தின் அருகே காணாமல் போல ப்ளோரிடா பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. முப்பத்தாறு வயதுடைய கார்லா தனது உறவினரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக கோஸ்டா ரிகா சென்று இருந்தார். அங்கிருந்து கிளம்பும் நாளில் அவரை காணவில்லை. அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்றும், ஏதோ ஆபத்தில் இருக்கிறார் என்றும் அவரது உறவினர்கள் அஞ்சினார்கள். இந்த சூழலில் பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்டு புதைக்கப்பட்ட உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அது கார்லாதானா என்பது அதிகாரபூர்வமாக உறுதிசெய்யப்படவில்லை.

சீனியர் புஷ் உடலுக்கு அஞ்சலி

படத்தின் காப்புரிமை AFP

முன்னாள் அமெரிக்க அதிபர் சீனியர் புஷ்ஷின் உடல் 21 குண்டுகள் முழங்க டெக்சாஸிலிரிந்து வாஷிங்டனுக்கு ஏர் ஃபோர்ஸ் 1 விமானத்தில் எடுத்துவரப்பட்டது. புஷ்ஷுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அந்த விமானத்திற்கு ஸ்பெஷல் ஏர் மிஷன் 41 என்று பெயரிடப்பட்டது. அவரது உடல் தகனம் செய்யப்படும்வரை, மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வாஷிங்டன்னில் வைக்கப்பட்டிருக்கும். பின் டெக்சாஸில் அவரது மனைவி உடல் அருகே புதைக்கப்படும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :