பிரான்ஸ் போராட்டம் : எரிபொருள் விலை உயர்வை கைவிட்ட அரசு - பிரதமர் கூறியது என்ன?

  • 6 டிசம்பர் 2018
பிரான்ஸ் போராட்டம் எதிரொலி படத்தின் காப்புரிமை AFP

தொடர் போராட்டங்களுக்கு வழிவகுத்த எரிபொருளுக்கான வரி விதிப்பை அடுத்தாண்டு பட்ஜெட்டில் இருந்து கைவிடுவதாக பிரான்ஸ் அரசு அறிவித்திருக்கிறது.

முன்னதாக இதனை ஆறு மாத காலம் இடைநிறுத்துவதாக உறுதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இதனை கைவிடுவதாக பிரதமர் எய்ட்வார் ஃபிலிப் அறிவித்துள்ளார்.

கடந்த 3 வாரங்களாக நடைபெற்று வந்த இந்த போராட்டங்கள் பிரான்சிஸின் முக்கிய நகரங்களில் கணிசமான சேதங்களை ஏற்படுத்தியுள்ளன. "மஞ்சள் ஜாக்கெட்" என்று அறியப்படும் இந்த போராட்டங்கள் அரசின் மீதான மக்களின் கோபத்தை வெளிக்காட்டுவதாக அமைந்தன.

மேலும், இந்த வார இறுதியில் சில போராட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த போராட்டம் தொடங்கியதில் இருந்து 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
பிரான்சில் 'மஞ்சள் ஜாக்கெட்' போராட்டம் ஏன்?

பிரதமர் என்ன கூறியுள்ளார்?

ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வர இருந்த எரிபொருளுக்கான வரி ஆறு மாத காலத்திற்கு இடைநிறுத்தம் செய்யப்படும் என்று செவ்வாய்கிழமை அன்று ஃபிலிப் தெரிவித்திருந்தார்.

இந்த குளிர்காலத்தில், எரிவாயு மற்றும் மின்சார விலையை உயர்த்த திட்டமிடப்பட்டிருந்தது நிறுத்தி வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், புதன்கிழமையன்று நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் கூறிய அவர், "அரசு பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளது. மேலும், 2019 பட்ஜெட்டில் இருந்து வரி உயர்வு கைவிடப்படுகிறது" என்றார்.

படத்தின் காப்புரிமை EPA

அதிக சீர்திருத்தங்களை கொண்டு வருவதாக பரப்புரை மேற்கொண்டதால் 2 ஆண்டுகளுக்கு முன்னர் இம்மானுவெல் மக்ரோங் பிரான்சின் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால், சமீபத்திய மாதங்களில் அவரது நற்பெயரில் அதிக வீழ்ச்சி காணப்படுகிறது.

தன்னுடைய சீர்திருத்தங்களை தடை செய்ய இந்த இயக்கத்தை பயன்படுத்தி கொள்வதாக எதிர்க்கட்சியினரை மக்ரோங் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :