அமெரிக்க கடற்படை விமானங்கள் மோதல்: ஜப்பானில் தொடரும் மீட்பு பணி

  • 6 டிசம்பர் 2018
அமெரிக்க கடற்படை விமானங்கள் மோதல்: ஜப்பானில் தொடரும் மீட்புதவி பணி படத்தின் காப்புரிமை Reuters

ஏழு கடற்படையினர் பயணித்த இரண்டு விமானங்கள் மோதி கடலுக்குள் விழுந்து பின்னர், காணாமல் போன சம்பவத்தில், 5 கடற்படையினரை தேடும் பணியும், மீட்பு நடவடிக்கையும் ஜப்பானில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

2 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஒருவரின் உடல் நிலை சீராக உள்ளது என்று ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. இன்னொருவரின் நிலைமை பற்றி உடனடியாக எதுவும் தெரியவில்லை.

கேசி-130 மற்றும் ஃஎப்/எ-18 ரக விமானங்கள் விபத்திற்குள்ளாயின என்று ஹிரோஷிமாவுக்கு அருகிலுள்ள இவாகுனி கடற்படை அதிகாரிகள் கூறுகின்றனர்.

வான் பரப்பில் எரிபொருள் நிரப்பும் பயிற்சியின்போது இந்த விமானங்கள் மோதி, கடலில் முழ்கியதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தை ‘விபத்து’ என்று கடற்படை பிரிவுகள் இன்னும் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

இந்த சம்பவம் உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை நள்ளிரவு 2 மணிக்கு நிகழ்ந்ததாக கடற்படை பிரிவு டுவிட் பதிவிட்டுள்ளது.

சி-130 விமானத்தில் 5 பேரும், ஃஎப்/எ-18 விமானத்தில் 2 பேரும் இருந்தனர். போர் விமானத்தில் இருந்து ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP

கடற்கரையில் இருந்து 200 மைல் தொலைவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக அமெரிக்க கடற்படைப் பிரிவொன்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது.

இவாகுனி கடற்படை விமான தளத்தில் இருந்து மெலேழுந்து பறந்த இந்த அமெரிக்க விமானங்கள், விபத்து நடைபெற்றபோது வழக்கமாக திட்டமிட்டிருந்த பயிற்சியில் ஈடுபட்டிருந்தன.

உடனடியாக தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளத் தொடங்கிய ஜப்பானின் தற்காப்பு கடற்படை பிரிவுகளின் முயற்சிகளுக்கு நன்றி தெரிவிக்கிறோம் என்று கடற்படையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் டேக்ஷி இவாயா, "9 ஜப்பானிய விமானங்களும், 3 கப்பல்களும் இந்த மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

வான்பரப்பில் எரிபொருள் நிரப்புவது மிகவும் கடினமானது. இரவு வேளையில் இந்த போர் நடவடிக்கையை மேற்கொள்வது மிகவும் ஆபத்தானது என்று கூறுகிறார் டோக்கியோவிலுள்ள பிபிசியின் ருபர்ட் விங்ஃபீல்ட்.

வானிலை பற்றி தெளிவாக தெரியவில்லை. ஆனால், இரவு முழுவதும் மேகம் சூழ்ந்து ஜப்பான் தீவுக்கூட்டம் முழுவதும் மழை பெய்தது என்று அவர் கூறுகிறார்.

C-130 ரக விமானத்தின் விரிவாக்கப்பட்ட டேங்கர் மாதிரி விமானமான கேசி-130, வான்பரப்பில் எரிபொருள் நிரப்ப பயன்படுத்தப்படுகிறது.

மெக்டோனெல் டக்லஸ் ஃஎப்/எ-18 ஹோர்நெட் ரக விமானம் போரில் தாக்குதல் நடத்துகின்ற விமானமாகும். இதனால் பெரிய ஏவுகணைகளையும், குண்டுகளையும் கொண்டு செல்ல முடியும்.

அமெரிக்காவின் 50 ஆயிரம் அமெரிக்க படையினர் ஜப்பானில் உள்ளனர். அதில் 18 ஆயிரத்திற்கு மேலானோர் கடற்படையை சேர்ந்தவர்கள்.

ஜப்பானிலுள்ள அமெரிக்க விமானங்களின் செயல்பாடுகளில் சில பிரச்சனைகள் இருந்தன. கடந்த நவம்பர் மாதம் ஃஎப்/எ-18 ஹோர்நெட் விமானம் ஒன்று ஒக்கினாவ-வின் தெற்கு கடலில் விழுந்தது. அதிலிருந்து வெளியேறிய இரண்டு மாலுமிகள் மீட்கப்பட்டனர்.

கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்க ஹெலிகாப்டர் ஒன்றின் பகுதி ஒக்கினாவ-விலுள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் மோதியது. இதனால், உள்ளூர் மக்களிடம் பதற்றம் அதிகரித்தது.

கடந்த காலங்களில் நடைபெற்ற பல விபத்துகளும், குற்றங்களும் அமெரிக்க கடற்படை தளம் அங்கு தொடர்ந்து இயங்குவதற்கு எதிராக உள்ளூர் மக்களின் எதிர்ப்பு அதிகரிக்க காரணமாக அமைந்தன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: