ஹூவாவெய் நிதி அதிகாரி கைது: மனித உரிமை மீறல் என்கிறது சீனா

  • 6 டிசம்பர் 2018
ஹூவாவெய் தலைமை நிதி அதிகாரி படத்தின் காப்புரிமை EPA

ஹூவாவெய் தொலைத்தொடர்பு குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி மெங் வான்ட்சொவ் கைது பற்றி அமெரிக்காவும், கனடாவும் விளக்கம் அளிக்க வேண்டுமென சீனா வலியுறுத்தியுள்ளது.

சீன தொலைத்தொடர்பு நிறுவனமான ஹூவாவெயை நிறுவியவரின் மகள் டிசம்பர் முதல் நாள் கனடாவின் வான்கூவர் நகரில் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவிடம் அவர் ஒப்படைக்கப்படலாம் என தெரிகிறது.

அவரது கைது பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை. ஆனால் ஈரானுக்கு எதிராக தடைகளை ஹூவாவெய் மீறியதா என்பது பற்றி அமெரிக்கா புலனாய்வு மேற்கொண்டு வருகிறது.

இந்த நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியை கைது செய்திருப்பது மனித உரிமை மனித உரிமை மீறலாக இருக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்திருக்கும் சீனா, அவரை விடுதலை செய்ய வேண்டுமென கோரியுள்ளது.

உலக அளவில் பெரிய தொலைத்தொடர்பு கருவிகள் மற்றும் சேவை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாக ஹூவாவெய் உள்ளது.

சமீபத்தில் ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளிய ஹூவாவெய், சாம்சங்கிற்கு அடுத்தாக இரண்டாவது பெரிய திறன்பேசி தயாரிப்பு நிறுவனமாகியுள்ளது.

தனது கைது பற்றிய விவரங்களை வெளியிட தடை விதிக்க மெங் வான்ட்சொவ் கோரியதற்கு நீதிமன்ற அனுமதி கிடைத்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

மெங் வான்ட்சொவ் மீதான குற்றச்சாட்டுகள் பற்றிய தகவல்கள் இல்லையெனவும், மெங் தவறுகள் செய்திருப்பதாக தெரியவில்லை என்றும் ஹூவாவெய் கூறியுள்ளது.

மெங் வான்ட்சொவ் கைது செய்யப்பட்ட பின்னர், அந்த நிறுவனத்தின் ஐரோப்பிய பங்கு சந்தை மதிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளில் காணாத அளவு வீழ்ச்சி அடைந்திருக்கிறது. ஆசியா முழுவதும் இதன் பங்கு சந்தை குறியீடுகள் பெரும் சரிவை சந்தித்தன.

சீனா எப்படி எதிர்வினையாற்றுகிறது?

எந்தவொரு காரணமும் கொடுக்காமல் ஒருவரை கைது செய்வது மனித உரிமைகளுக்கு எதிரானது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

"அமெரிக்காவும், கனடாவும் உடனடியாக கைது செய்ததற்கான காரணங்களை வழங்க வேண்டுமென கோரியுள்ளதோடு, இந்த நபரின் தனிப்பட்ட சட்ட உரிமைகளை பாதுகாக்கும் வகையில் அவரை உடனடியாக விடுவிக்க வேண்டுமெனவும் இருதரப்பிடம் தெரிவித்துள்ளோம்" என்று அவர் கூறியுள்ளார்.

சீனா மீதான மனித உரிமை பிரச்சனைகளை விமர்சனம் செய்வோருக்கு, சீனா இது தொடர்பாக தெரிவித்திருக்கும் கூற்று ஆச்சரியம் அளிப்பதாக அமைந்துள்ளது.

அம்னெஸ்டி இன்டர் நேஷனல் அமைப்பு சீனாவில் மிக கடுமையான மனித உரிமை அச்சுறுத்தல்கள் நிலவுவதாகவும், அதிகாரிகளுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் அனைவரும் சித்ரவதை, கைது செய்யப்படுதல் மற்றும் சிறையில் அடைப்படுவதாகவும் தெரிவிக்கிறது.

படத்தின் காப்புரிமை Reuters

மெங்கின் இந்த கைது தொடர்பான கவலைகள், அமெரிக்க-சீன உறவுகளில் முக்கியமான தருணத்தில் நிகழ்ந்துள்ளது. இருதரப்பும் ஒன்று மற்றொன்றிடம் இருந்து இறக்குமதி செய்கின்ற பொருட்களின் மீது மாறி மாறி பில்லியன் கணக்கான மதிப்பில் கூடுதல் வரிகளை விதித்துள்ளன.

இந்த கைது தொடர்பான கவலைகள், 20 நாடுகள் குழுவின் உச்சி மாநாட்டில் இந்த இரு நாடுகளுக்கு இடையில் எட்டப்பட்ட 90 நாட்களுக்கு வரி விதிப்பு நிறுத்தம் நடைமுறையாவதில் பாதிப்புகளை ஏற்படுத்தும். ஒப்புக்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை உடனடியாக நடைமுறைப்படுத்த போவதாக வியாழக்கிழமை நடைபெற்ற வழக்கமான செய்தியாளர் சந்திப்பில் சீனா அறிவித்திருக்கிறது.

இந்த கைது மேற்கத்திய நாடுகளில் ஹூவாவெய் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் நடவடிக்கைகளுடன் ஒத்துப்போகிறது.

புதிய விரைவான 5ம் தலைமுறை செல்பேசி வலையமைப்பு உள்கட்டுமானங்களில் இந்த சீன நிறுவனத்தின் கருவிகள் பயன்படுத்தப்படுவதை அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகள் ஏற்கெனவே தடை செய்துள்ளன.

கனடா கூறியது என்ன?

மெங் கைது செய்யப்பட்ட தேதி மற்றும் இடத்தை கனடா நீதி அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. "அமெரிக்கா மெங்கை நாடுகடத்தி தம்மிடம் ஒப்படைக்க வேண்டுமென கோரியுள்ளது. வெள்ளியன்று ஒரு பிணை விசாரணை நடைபெறுகிறது" என்றும் அது தகவல் வெளியிட்டுள்ளது".

படத்தின் காப்புரிமை VCG/VCG via Getty Images

அவரது கைது விவரங்களை வெளியிடுவதற்கான தடை பற்றி எதுவும் கூற முடியாது என்றும், நீதிமன்றத்தால் இந்த ஆணை வழங்கப்பட்டுள்ளதாகவும் அது கூறியுள்ளது.

பின்னணி என்னவாக இருக்கலாம்?

இரான் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை மீறியிருக்கலாம் என்ற சந்தேகம் தொடர்பாக ஹூவாவெய் விசாரணைக்கு உள்ளாகியிருந்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உளவு பார்க்க சீன அரசு இந்த நிறுவனத்தின் தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியும் என்று கூறி, அமெரிக்க தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இந்த நிறுவனம் இருப்பதாக தொடர்ந்து அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறி வருகின்றனர்.

படத்தின் காப்புரிமை FRED DUFOUR/AFP/Getty Images

"இந்த கைது பற்றி கருத்து தெரிவிக்கையில், தனியார் துறையை பயன்படுத்தி அமெரிக்க தேசிய பாதுகாப்பு நலன்களை குறைப்பதில் மிக தீவிரமாக சீனா ஈடுபட்டு வருகிறது" என்று அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் அமெரிக்க செனட் அவை உறுப்பினர் பென் சாஸ்சே கூறியுள்ளார்.

"கனடா நாட்டு பங்காளிகள் இந்த நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியை கைது செய்திருப்பதற்கு அமெரிக்கர்கள் நன்றிக்கடன் பட்டுள்ளோம்" என்று அவர் மேலும் கூறினார்.

ஐநா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏற்றுமதி கட்டுப்பாடு மற்றும் தடை சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் உள்பட, எங்கெல்லாம் இந்த நிறுவனம் சேவையாற்றி வருகிறதோ, அங்கெல்லாம் பொருத்தமான சட்டங்களை தாங்கள் கடைபிடித்து வருவதாக ஹூவாவெய் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: