பிரியங்கா சோப்ராவிடம் மன்னிப்பு கேட்ட அமெரிக்க எழுத்தாளர்

பிரியங்கா சோப்ரா படத்தின் காப்புரிமை EPA

கடந்த சில மணிநேரங்களில் நிகழ்ந்த சில முக்கிய உலக நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

பிரியங்காவை விமர்சித்த மரியாவின் மன்னிப்பு

"திரைப்பட நடிகை பிரியங்கா சோப்ரா தனது தொழில்முறை வாழ்க்கையை வலுப்படுத்திக்கொள்ளவே அமெரிக்கப் பாடகர் நிக் ஜோனாஸை திருமணம் செய்துகொண்டார்," என்று கட்டுரை ஒன்றில் குறிப்பிட்ட அமெரிக்கப் பெண் எழுத்தாளர் மரியா ஸ்மித் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனாஸ் மற்றும் வாசகர்கள் மனதை, தான் கட்டுரையில் எழுதியது காயப்படுத்தியிருந்தால் மன்னிப்புக் கேட்பதாக அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அவரது கட்டுரை வெளியான 'தி கட்' இணையதளம் இனவெறியுடன் நடந்துகொள்வதாக விமர்சிக்கப்பட்டது. அந்தக் கட்டுரை இப்போது நீக்கப்பட்டுள்ளது.


போரில் கொல்லப்பட்டவர்களுக்கு 'அருளாளர்' பட்டம்

படத்தின் காப்புரிமை EPA

அல்ஜீரியாவில் உள்நாட்டுப் போரில் கொல்லப்பட்ட 19 கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு, கத்தோலிக்க திருச்சபையால் அருளாளர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ மதத்தில் புனிதர் பட்டம் வழங்குவதற்கு முந்தைய நிலையாகும். இஸ்லாமிய நாடான அல்ஜீரியாவில் இவ்வாறு நிகழ்வது இதுவே முதல் முறையாகும்.

அருளாளர் பட்டம் பெற்றவர்களில் பெரும்பாலானோர் பிரான்ஸ் நாட்டவர்கள்.

1991 முதல் 2002 வரை, இஸ்லாமியவாதிகள் மற்றும் அரசுக்கு இடையே நடந்த அல்ஜீரிய உள்நாட்டுப் போரில் இரண்டு லட்சம் பேர் வரை கொல்லப்பட்டனர்.


சோவியத் எதிர்ப்பாளர் மறைவு

படத்தின் காப்புரிமை AFP/getty

ரஷ்யாவின் முக்கிய மனித உரிமைகள் செயல்பாட்டாளரான லிக்யூட்மீலா அலெக்ஸ்யேவா தனது 91ஆம் வயதில், சனிக்கிழமையன்று, காலமானார்.

சோவியத் ஒன்றியத்தின் ஆட்சியை கடுமையாக விமர்சித்ததால் 1968இல் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அவர், 1977இல் அமெரிக்காவில் குறியேறினார்.

சோவியத் ஒன்றியம் உடைந்தபின் அவர் ரஷ்யா திரும்பினார்.


பதவி விலகும் டிரம்பின் தலைமை அதிகாரி

படத்தின் காப்புரிமை Reuters

தனது நிர்வாகத்தின் தலைமை அதிகாரியாக செயல்படும் ஜான் கெல்லி இந்த ஆண்டு இறுதியில் பதவி விலகுவார் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

டிரம்ப் மற்றும் கெல்லி இடையிலான உறவில் விரிசல் உண்டாகியுள்ளதாகும், கெல்லி பதவி விலக அழுத்தம் இருந்ததாகவும் சில செய்திகள் வெளியாகின.


பருவ நிலை மாற்றம்: தோல்வியில் முடிந்த முக்கிய முன்னெடுப்பு

படத்தின் காப்புரிமை Getty Images

முந்தைய கணிப்புகளைவிட பூமியின் வெப்பநிலை வேகமாக அதிகரித்து வருவதாக கூறிய சமீபத்திய ஆய்வறிக்கையை போலந்தில் நடைபெற்று வரும் பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் விவாதிப்பதற்கான முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது.

பருவநிலை மாற்றத்திற்கான அரசாங்கங்களுக்கிடையேயான குழுவான ஐபிசிசி, கடந்த அக்டோபர் மாதம் வெளியிட்ட ஆய்வறிக்கை ஒன்றில், பூமியின் வெப்பநிலை 1.5C அதிகமானால் ஏற்படுக்கூடிய விளைவுகளை பட்டியலிட்டிருந்தது. அது உலகமெங்கும் அதிர்வலைகளை கிளப்பியிருந்தது.

சர்வதேச அளவில் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் இந்த அறிக்கை குறித்து விவாதிப்பதற்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் எடுத்திருந்த முயற்சிக்கு அமெரிக்கா, சௌதி அரேபியா, ரஷ்யா, குவைத் உள்ளிட்ட நாடுகள் முட்டுக்கட்டை போட்டுள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: