'நிசான்' முன்னாள் தலைவர் கார்லோஸ் கோசென் மீது நிதி மோசடி குற்றச்சாட்டு பதிவு

கார்லோஸ் கோசென் படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கார்லோஸ் கோசென்

ஜப்பானை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் நிசான் கார் தயாரிப்பு நிறுவனத் தலைவர் கார்லோஸ் கோசென் மீது நிதி மோசடி செய்துள்ளதாக ஜப்பானிய அரசு வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கோசென் ஐந்தாண்டுகளுக்கு மேலாக தனது சம்பளத்தை குறைவாக காண்பித்ததாகவும், நிறுவனத்தின் சொத்துக்களை தனிப்பட்ட விஷயங்களுக்காக பயன்படுத்தியதாகவும் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் கோசென் மீதான குற்றஞ்சாட்டுகள் முதல் முறையாக வெளியானபோது கைதுசெய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரெனால்ட்-நிசான்-மிட்சுபிஷி கூட்டு நிறுவனத்தின் தலைவராக செயல்பட்ட கோசென் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.

கோசென் மட்டுமின்றி அவர் தலைவராக பதவி வகித்த நிசான் நிறுவனத்தின் மீதும் அரசு வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கைது செய்யப்பட்டது முதல் அதிகாரிகளால் விசாரணைக்குட்படுத்தப்பட்ட கோசென் மீது இன்று வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும் அல்லது விடுவிக்கப்பட வேண்டும் என்ற சூழ்நிலையில், அவர் மீது தொடுக்கப்பட்டுள்ள மற்ற வழக்குகளின் கீழ் மீண்டும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஜப்பானிய செய்தி நிறுவனமான என்எச்கே செய்தி வெளியிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

பிரேசிலில் பிறந்த 64 வயதாகும் கார்லோஸ் கோசென் ரெனால்ட்-நிசான் கூட்டணியின் சிற்பியாக விளங்கியதுடன், கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த ரெனால்ட்-நிசான்-மிட்சுபிஷி கூட்டுக்கும் முக்கிய காரணமாக விளங்கினார்.

கடந்த மாதம் கைதுசெய்யப்பட்டவுடனே நிசான் மற்றும் மிட்சுபிஷி ஆகியவை கார்லோஸ் கோசெனை தலைவர் பதவியிலிருந்து நீக்கிவிட்டன.

எனினும், கோசென் தங்களது நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயலதிகாரியாக நீடிப்பார் என்றும் ஆனால் நிறுவனத்தின் செயல்பாட்டை உறுதிசெய்வதற்காக தற்காலிக துணை தலைமை செயலதிகாரியாக ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ரெனால்ட் நிறுவனம் தெரிவித்தது.

நிசான் நிறுவனத்தில் 43 சதவீத பங்கை ரெனால்ட் வைத்துள்ள நிலையில், ரெனால்ட் நிறுவனத்தில் வெறும் 15 சதவீத பங்கையே நிசான் கொண்டுள்ளது.

மிட்சுபிஷி நிறுவனத்தில் நிசானுக்கு 34 சதவீத பங்குகள் மட்டுமல்லாது, அதிக கட்டுப்படுத்தும் அதிகாரமும் உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்