பிரெக்ஸிட் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுடன் தெரீசா மே பேச்சுவார்த்தை

பிரெக்ஸிட் தொடர்பாக ஐரோப்பிய தலைவர்களுடன் பிரிட்டன் பிரதமர் பேச்சுவார்த்தை படத்தின் காப்புரிமை AFP

இன்று நிகழ்ந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகின்றோம்.

பிரெக்ஸிட் தொடர்பாக தெரீசா மே பேச்சுவார்த்தை

பிரிட்டன் பிரதமர் தெரீசா மே வழங்கியுள்ள பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் ஐரோப்பிய தலைவர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளை அவர் சந்திக்க தொடங்கியுள்ளார்.

இந்த ஒப்பந்தம் தொடர்பாக பிரிட்டன் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் நடைபெற இருந்த வாக்கெடுப்பை ஒத்தி வைத்த தெரீசா மே, நெர்தர்லாந்து பிரதமர் மார்க் ருட்டே மற்றும் ஜெர்மனியின் சான்சலர் ஏங்கெலா மெர்க்கலுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து ஆதரவு கிடைப்பதற்கு வட அயர்லாந்து எல்லை திட்டம் பற்றி மேலதிக உறுதிப்பாடுகள் தேவைப்படுவதாக பிரிட்டன் பிரதமர் தெரிவிக்கிறார்.

இந்த ஒப்பந்தம் பற்றி ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தாது. ஆனால், மேலதிக தெளிவுகளை வழங்கும் என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஜாங் கிளாடு யுங்கர் கூறியுள்ளார்.

வடக்கு அயர்லாந்துக்கு ஆதரவு அளிக்கும் திட்டம் காலவரையின்றி தொடர்வதில் பிரிட்டன் சிக்காமல் இருப்பதற்கான சட்ட ரீதியான உறுதிப்பாடுகளை பிரிட்டன் பிரதமர் எதிர்பார்ப்பதாக தெரிகிறது.

மனித படுகொலை சந்தேக நபரை ருவாண்டாவிடம் ஒப்படைந்த டென்மார்க்

படத்தின் காப்புரிமை Adem Mehmedovic/Anadolu Agency/Getty Images

டென்மார்க்கிலிருந்து ஒப்படைக்கப்படும் மனித படுகொலை செய்த சந்தேக நபர் ஒருவர், இன்னும் சில மணிநேரங்களில் ருவாண்டா வந்தடைவார் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1994ம் ஆண்டு நடைபெற்ற படுகொலையின்போது, வென்சஸ்லாஸ் வாகிராயேசு இந்த குடியரசு நாட்டின் பாதுகாப்பு கூட்டணியின் உள்ளூர் அதிகாரியாக இருந்தார். இந்த கூட்டணிதான் ஹூடு கட்சிக்கு ஆதரவாக வன்முறையை தூண்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இப்போது 50 வயதாகும் வாகிராயேசு, நாட்டின் வட மேற்கில் அமைந்துள்ள ருபாவு மாவட்டத்தில் உள்ளூர் படைப்பிரிவை தலைமையேற்று நடத்தினார் என்று அரசு தரப்பு வழங்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

2001ம் ஆண்டிலிருந்து டென்மார்க்கில் வாழ்ந்து வரும் அவர், ருவாண்டாவிடம் ஒப்படைக்காமல் இருப்பதற்கு எதிராக சட்ட நடைமுறைகளை நீதிமன்றங்களில் எதிர்கொண்டு வந்துள்ளார்.

இந்த படுகொலையின்போது 8 லட்சம் டுசிஸ் மற்றும் மிதவாத ஹூடுக்கள் கொல்லப்பட்டனர்.

தன்னை விமர்சனம் செய்த செயற்பாட்டாளருக்கு புதின் நேரில் அஞ்சலி

படத்தின் காப்புரிமை EPA

தன்னை அடிக்கடி விமர்சனம் செய்து வந்த மனித உரிமை செயற்பாட்டாளர் லயுட்மிலா அலெசியேவா-வின் சடலத்தின் மீது மலர்கள் வைத்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

மாஸ்கோவின் பத்திரிகையாளர்களின் மத்திய இல்லத்தில் நடைபெறும் இறுதி சடங்குகளில் பங்கேற்க அலெசியேவா-வின் சகாவான செயற்பாட்டாளர் லிவ் போனோமார்யோஃப்-க்கு அனுமதி வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

போனோமார்யோஃப்-க்கு தொடருகின்ற சிறை தண்டனையாலும், ரஷ்யாவில் நிலவும் அரசியல் நிலைமையாலும், புதின் இந்த இறுதி சடங்குக்கு வருகை தந்தது கேலிக்கூத்தாக இருந்தது என்று எதிர்க்கட்சி அரசியல்வாதி டிமிட்ரி குட்கோஃப் கூறியுள்ளார்.

தனது 91வது வயதில் கடந்த சனிக்கிழமை இறந்த அலெசியேவாவுக்கு மக்கள் பலர் வரிசையில் நின்று இறுதி மரியாதை செலுத்தினர்.

சிரியா அகதிகளுக்கு உதவ தேவைப்படும் ஐந்தரை பில்லியன் டாலர்

படத்தின் காப்புரிமை UN

பக்கத்து நாடுகளில் பராமரிக்கப்படும் சிரியாவில் இருந்து வந்த அகதிகளுக்கு உதவ ஐந்தரை பில்லியன் டாலர் தொகை தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் அவை கூறியுள்ளது.

இந்த தொகை துருக்கி, லெபனான், ஜோர்டன் மற்றும் பிற நாடுகளில் இடம்பெயர்ந்து வாழும் மக்களின் கல்வி, வேலைவாய்ப்புகள் மற்றும் பிற உதவிகளுக்காக செலவு செய்யப்படும்.

அடுத்த ஆண்டு 2 லட்சத்து 50 ஆயிரம் அகதிகள் சிரியாவுக்கு திரும்பலாம் என நம்புவதாக ஐக்கிய நாடுகள் அவை தெரிவிக்கிறது. ஆனால் 50 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு உடனடியாக திரும்பி செல்லும் நோக்கம் இல்லை என்று அது கூறியுள்ளது.

நாடு கடந்த நிலையில் பிறந்த 10 லட்சம் குழந்தைகளும் இந்த எண்ணிக்கையில் அடங்கியுள்ளனர்.

திரும்பி செல்வது கடினமானதும், ஆபத்தானதுமாக அமையலாம். சில இடங்களில் சண்டைகளும், ஆங்காங்கு மேதல்களும் தொடர்ந்து வரும் நிலையில், அந்த பகுதிகளில் வெடிக்காத குண்டுகள் குப்பைகளைபோல காணப்படுகின்றன.

வெனிசுவேலாவில் ரஷ்ய விமானங்கள் தரையிறக்கம்: அமெரிக்க, ரஷிய அதிகாரிகள் வாக்குவாதம்

படத்தின் காப்புரிமை AFP

அணு ஆயுதங்களை கொண்டு சென்று நீண்ட தொலைவு சென்று தாக்குகின்ற 2 ரஷ்ய விமானங்கள் வெனிசுவேலாவில் தரையிறக்கப்பட்டிருப்பது தொடர்பாக ரஷ்ய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் சண்டையிட்டு வருகின்றனர்

வெனிசுவேலாவின் சோசலிச அதிபர் நிக்கோலாஸ் மதுரோவின் அரசுக்கு தங்களின் ஆதரவை தெரிவிக்கும் வகையில் திங்கள்கிழமை இந்த இரு விமானங்களையும் வெனிசுவேலாவில் ரஷ்யா தரையிறக்கியது.

இது பற்றி ட்விட்டரில் கருத்து வெளியிட்ட அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பேயோ, ஊழல் நிறைந்த இரு அரசுகள் பொது நிதியை பயன்படுத்தி மக்களை துன்புறுத்துவதை இது காட்டுவதாக கூறியுள்ளார்,

இந்த கருத்து முற்றிலும் பொருத்தமற்றது என்று ரஷ்யா பதிலளித்துள்ளது. இந்த இரு விமானங்களும் கூட்டு விமான பயிற்சியில் பங்கேற்றுள்ளதாக வெனிசுவேலா பாதுகாப்பு அமைச்சர் விளாடிமிர் பாடிரினோ தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: