நேபாளத்தில் புதிய இந்திய ரூபாய் தாள்கள் தடை - மனவருத்தத்தால் தரப்பட்ட பதிலடி

இந்திய நாணயம் 2000 ரூபாய்

இந்திய அரசின் 2000, 500, 200 ரூபாய் தாள்களை பயன்படுத்த வேண்டாம் என நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்ட இந்திய அரசு, உயர் மதிப்பு கொண்ட நோட்டுகளை விலக்கிக் கொண்டது. அதன் பிறகு இந்தியா வெளியிட்ட புதிய தாள்களுக்கு மட்டும் இந்தத் தடை விதிக்கப்படுள்ளது.

2016 நவம்பர் 8ம் தேதியன்று இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ரூபாய் தாள்கள் புழக்கத்தை தடை செய்யும் நேபாள அரசின் அறிவிப்பு பலருக்கும் வியப்பளிப்பதாக இருக்கிறது.

இந்த விவகாரம் தொடர்பாக முழு விவரங்களையும் தெரிந்து கொள்வதற்காக பிபிசி செய்தியாளர் பூமிகா ராய், நேபாள தலைநகர் காட்மண்டுவில் இருக்கும் பிபிசி இந்தி சேவைப் பிரிவின் வானொலி ஆசிரியர் ராஜேஷ் ஜோஷியுடன் உரையாடினார்.

இந்த முடிவை நேபாள நாட்டு அமைச்சரவை திங்கட்கிழமையன்றே எடுத்துவிட்டாலும், வியாழனன்றுதான் செய்தியாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என்று அவர் கூறுகிறார்.

மேலும், ''2000, 500, 200 ரூபாய் மதிப்பு கொண்ட இந்திய ரூபாய் தாள்களை வைத்திருப்பது சட்டவிரோதமானது என்றும், அதைக் கொண்டு வர்த்தகம் செய்வதும், இந்தியாவில் இருந்து வருபவர்கள் அந்த ரூபாய் தாள்களை கொண்டு வருவது தடை செய்யப்பட்டிருப்பதாகவும் நேபாள அரசின் செய்தித் தொடர்பாளர் கோகுல் பாஸ்கோடா தெரிவித்தார்'' என்று ராஜேஷ் ஜோஷி தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Reuters

இந்தியாவில் பணவிலக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பிறகு, நேபாளில் இந்திய தாள்கள் தொடர்பான விஷயங்கள் பலராலும் அடிக்கடி விவாதிக்கப்பட்டு வந்தது என்பதை ராஜேஷ் ஜோஷி சுட்டிக் காட்டுகிறார்.

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடவடிக்கை ஏன்?

இந்திய ரூபாய் நேபாளத்திலும் செல்லக்கூடியது. பணமதிப்பிழப்பில் விலக்கிக் கொள்ளப்பட்ட 1000 மற்றும் 500 ரூபாய் மதிப்புள்ள இந்திய தாள்கள், நேபாளத்தில் இருக்கும் பலரிடம் தற்போதும் இருக்கிறது. அது திரும்பப் பெறப்படவில்லை என்று பலர் கூறுகின்றனர்.

இந்திய அரசால் விலக்கிக் கொள்ளப்பட்ட எட்டு கோடி ரூபாய் மதிப்புள்ள இந்திய ரூபாய் தாள்கள் இருப்பு இருப்பதாக நேபாளத்தின் மத்திய வங்கி ஒரு முறை அறிவித்தது நினைவிருக்கலாம்.

இந்தியாவின் பழைய ரூபாய் தாள்கள் விவகாரம் தொடர்பாக நேபாள அரசுக்கு சற்று மனத்தாங்கல் இருந்து வருகிறது.

படத்தின் காப்புரிமை AFP

இந்தியா தனது பழைய ரூபாய் தாள்களை மாற்றிக் கொடுக்காதது ஏன் என்று நேபாளத்தின் அந்நிய செலாவணி மேலாண்மைத் துறையின் நிர்வாக இயக்குனர் பீஷ்ம்ராஜ் துங்கானா, 2018 செப்டம்பரில் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோதி, ஜனக்புர் கோயிலுக்கு செல்வதற்காக நேபாளம் வருகை தந்தபோதும் இந்த கேள்விகள் எழுப்பப்பட்டதாக ராஜேஷ் ஜோஷி கூறுகிறார். அப்போது நேபாள பிரதமர் கே.பி ஷர்மா ஓலி, இந்திய பிரதமரிடம் இது பற்றி பேசினார்.

ஆனால், அதன் பிறகு இந்த விவகாரம் தொடர்பாக இந்திய அரசு எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பதால் எதிர்ப்பை வெளிக்காட்டும் வகையில் நேபாள அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

ஆனால், 2000, 500, 200 ரூபாய் தாள்களைத் தவிர வேறு எந்த இந்திய ரூபாய் தாள்களையும் செல்லாது என்று நேபாளம் அறிவிக்கவில்லை. 100 ரூபாய் மதிப்புள்ள புதிய இந்திய நோட்டு தடை செல்லுமா என்பதைப் பற்றி நேபாள அரசு குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

படத்தின் காப்புரிமை Getty Images

நேபாள அரசின் இந்த அறிவிப்பால், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் விரிசல் ஏற்படுமா என்பதைப் பற்றி எதுவும் தெளிவாக சொல்லமுடியவில்லை என்று ராஜேஷ் ஜோஷி கூறுகிறார்.

இதுபோன்ற முடிவு எடுக்கப்படலாம் என்று இந்திய அரசுக்கும், நேபாளத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கும் தெரிந்திருக்கும் என்று ராஜேஷ் ஜோஷி கருதுகிறார்.

அதுமட்டுமல்ல, இது தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையில் பேச்சுவார்த்தைகளும் மேற்கொள்ளப்படிருக்கும் என்றும் அவர் கூறுகிறார்.

இந்தியாவில் ஏடிஎம்-கள் மூடப்படுவது ஏன்?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ஏடிஎம்-கள் மூடப்படுவது ஏன்?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: