பருவநிலை மாற்றமும், இயற்கை பேரிடர்களும்: அதிகம் பாதிக்கப்படும் நாடுகள் எவை?

பருவநிலை மாற்றம் படத்தின் காப்புரிமை Getty Images

பருவநிலை மாற்றத்துடன் தொடர்புடைய இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்படுவதற்கு அதிக ஆபத்துள்ள 15 நாடுகளில் ஒன்பது நாடுகள் தீவுகளாக இருக்கும் என்று புதிய ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

172 நாடுகளில் பூகம்பங்கள், சுனாமிகள், சூறாவளிகள், வெள்ளம் ஆகிய பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறித்து 2018 உலக ஆபத்து சூழ்நிலை அறிக்கை பகுப்பாய்வு செய்து - அவற்றை எதிர்கொள்வதற்கு அந்த நாடுகளுக்கு உள்ள திறமை குறித்து மதிப்பீடு செய்துள்ளது.

ஜெர்மனியில் போச்சும் பகுதியில் உள்ள ருஹ்ர் பல்கலைக்கழகமும், ஜெர்மனி மனிதாபிமான என்.ஜி.ஓ.க்களின் கூட்டமைப்பான வளர்ச்சி உதவிகள் கூட்டமைப்பும் இந்த ஆய்வை நடத்தியுள்ளன.

நான்கு குழந்தைகளில் ஒருவர் பேரழிவுகளால் பாதிக்கப்படுகின்றனர்

குறிப்பாக குழந்தைகளின் பரிதாபகரமான நிலை பற்றி ஆராய்ச்சியாளர்கள் சிறப்பம்சமாக குறிப்பிட்டுள்ளனர்.

அவர்களுடைய புள்ளிவிவரங்களின்படி, உலகம் முழுக்க நான்கு குழந்தைகளில் ஒருவர் பேரழிவுகளால் பாதிக்கப்படும் ஆபத்து உள்ள பகுதிகளில் வாழ்கின்றனர்.

மேலும், 2017ல் மோதல் அல்லது இயற்கைப் பேரழிவு காரணமாக குடிபெயர்ந்த மக்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 18 வயதுக்கும் கீழ் உள்ளவர்கள் என்று ஐ.நா. விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பட்டியலில் தீவுகள் முதல் வரிசையை பிடித்துள்ளன. ஏனெனில், கடல்மட்டம் உயர்வது உள்ளிட்ட பருவநிலை நிகழ்வுகளால் ஆபத்துகளை எதிர்கொள்ளும் வாய்ப்பு தீவுகளுக்கு அதிகமாக உள்ளது.

தெற்கு பசிபிக் கடலில் உள்ள மிகச் சிறிய வனுவாட்டு தீவு உலகில் மிக அதிக ஆபத்து வாய்ப்புள்ள நாடாகக் கருதப்படுகிறது. அருகில் உள்ள டோங்கா தீவு அடுத்த இடத்தில் உள்ளது.

அதிகம் பாதிக்கப்படும் ஆப்ரிக்க நாடுகள்

104 மில்லியன் மக்கள் வாழும் பிலிப்பின்ஸ் தீவுகள் கூட்டம் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஓசியானியா பகுதி ஒட்டுமொத்தமாக மிகவும் ஆபத்துக்குள்ளாகும் பகுதியாக இருக்கும் என்று ஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்படும் முதல்வரிசை பட்டியலில் உள்ள 50 நாடுகளில், ஆப்பிரிக்க நாடுகள் நிறைய இடம் பெற்றுள்ளன. அதுமட்டுமின்றி, பேரிடர்களால் அதிக அளவில் ``சமூக பாதிப்பு'' ஏற்படும் 15 நாடுகளில் 13 நாடுகள் இந்தப் பகுதியில் உள்ளன. கத்தார் நாடுதான் மிகக் குறைந்த அளவுக்கு ஆபத்து வாய்ப்பு கொண்டது என்று அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

சமூக ஆபத்து நிலை

ஐரோப்பிய நாடுகளில் இளவேனில் மற்றும் கோடைக்காலங்களில் வெப்பக் காற்று வீசிதால் வறட்சி ஏற்பட்டு, நேரடியாக வேளாண்மை பாதிக்கப்பட்ட போது, அந்த நாடுகள் அதை எதிர்கொண்ட விதத்தை ஆக்கபூர்வ உதாரணமாக எடுத்துக் கொண்டு, தீவிர இயற்கைப் பேரிடர்களை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டியதன் அவசியத்தை ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

``ஒப்பீட்டு அடிப்படையில் வறட்சியால் பாதிக்கப்படுவதற்கு ஆபத்து குறைவாக உள்ள நாடுகளில் பேரழிவு நிகழ்வதில்லை'' என்கிறார் ருஹ்ர் பல்கலைக்கழகப் பேராசிரியர் கேத்ரின் ராட்கே.

படத்தின் காப்புரிமை Getty Images

இயற்கைப் பேரிடர் நிகழ்வதற்கான வாய்ப்பை மட்டும் கணக்கில் கொண்டு, ஆபத்துக் குறியீடு கணக்கிடப்படுவதில்லை. விதிமுறைகள் உருவாக்குதல் வறுமை நிலைகள் மற்றும் நெருக்கடி வந்தால் சமாளிப்பதற்கான திட்டங்கள் என எந்த அளவுக்கு ஒரு நாடு தயாராக இருக்கிறது என்பதும் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படுகிறது.

பூகம்பங்கள் அடிக்கடி தாக்கும் ஜப்பான் மற்றும் சிலி போன்ற நாடுகள், அதிக ஆபத்து வாய்ப்புள்ள 20 நாடுகளின் பட்டியலில் ஏன் இடம் பெறவில்லை என்பதை விளக்குவதாக இது உள்ளது.

அல்லது, காலம் காலமாக கடல் மட்டம் உயர்வு பிரச்சினையை சந்தித்து வந்த ஹாலந்து ஏன் 65வது இடத்தில் உள்ளது என்பதற்கும் இது தான்காரணம்.

``இந்த நாடுகள் இயற்கை இடர் நிகழ்வுகளின் போது ஆபத்துகளை குறைந்தபட்ச அளவிற்குள் கட்டுப்படுத்திவிடும் என்பது மட்டுமின்றி, இவை அதிக பாதிப்பு பட்டியலில் இல்லாமல் உள்ளன'' என்று அறிக்கை தெரிவிக்கிறது.

எகிப்து போன்ற மற்ற நாடுகள், பேரிடர் பாதிப்புக்கு குறைந்த வாய்ப்பே உள்ள நிலையிலும், சமூக அளவில் பாதிப்புகள் ஏற்படும் என தெரிகிறது. இந்த ஆப்பிரிக்க நாடு, இந்தப் பட்டியலில் 166வது இடத்தில் தான் உள்ளது. ஆனால் ஆபத்து வாய்ப்புகள் மற்றும் அதைக் கையாளும் திறன்களைப் பொருத்தவரை ஜப்பானைவிட குறைந்த புள்ளிகள் தான் பெற்றிருக்கிறது.

``பருவநிலையைப் பொருத்த வரை, 2018 ஆம் ஆண்டு விழிப்பை ஏற்படுத்திய ஆண்டாக உள்ளது. தீவிர இயற்கை நிகழ்வுகளை எதிர்கொள்ள ஆயத்த நிலையில் இருப்பது முக்கியம் என்பது மீண்டும் வெளிப்படையாக தெரிந்துள்ளது' என்கிறார் வளர்ச்சி உதவிகள் கூட்டமைப்பின் தலைமை பெண் நிர்வாகியான ஏஞ்சலிகா போஹ்லிங்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: