தோழியைக் காண பாகிஸ்தான் சென்ற மும்பை இளைஞர் சிறையில் சிக்கி மீண்டு வந்த கதை

அன்சாரி படத்தின் காப்புரிமை FB/BBC
Image caption ரக்ஷாந்தா நாஜ் மற்றும் ஹாமீத் அன்சாரி

ஃபேஸ்புக் தோழியை பார்ப்பதற்காக நாடு விட்டு நாடு சென்றதால், பாகிஸ்தான் சிறையில் தண்டனையை அனுபவித்து, வீடு திரும்பியிருக்கிறார் மும்பையை சேர்ந்த ஹாமீத் அன்சாரி.

தண்டனைக் காலம் முடிந்தும்கூட பாகிஸ்தான் சிறையில் இருந்த மும்பையை சேர்ந்த ஹாமீத் நிஹால் அன்சாரி, பலவிதமான முயற்சிகளுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டு, அடாரி-வாஹா எல்லை வழியாக செவ்வாய்க்கிழமை இந்தியா வந்தடைந்தார்.

ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான தனது தோழியை சந்திப்பதற்காக 2012-ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சென்றார் ஹாமீத் அன்சாரி.

கோஹட் நகருக்கு சென்ற அவர் உளவு பார்க்க வந்த குற்றச்சாட்டிலும், போதுமான ஆவணங்கள் இல்லாமல் நாட்டுக்கு வந்த குற்றத்துக்காகவும் கைது செய்யப்பட்டார்.

மகனை வரவேற்பதற்காக ஹமீதின் குடும்பத்தீனர் அமிர்தசரஸ் நகருக்கு சென்றனர். இரு நாட்டு அரசுகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்ட ஹாமீதின் குடும்பத்தினர், இன்றுதான் எங்களுக்கு ஈகைத் திருவிழா என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

Image caption ஹாமீத் அன்சாரி குடும்பத்தினர்

"மிகவும் சாதாரணமான எங்களுக்கு எதுவுமே தெரியாது. அரசு தேவையான முயற்சிகளை மேற்கொண்டு எங்களுக்கு உதவி செய்துவருகிறது. அரசு அதிகாரிகள் எங்கள் குடும்ப உறுப்பினர்களைப் போல் ஆதரவாக நடந்துக் கொண்டார்கள். நாங்கள் பலவீனமானவர்களாக இருந்தாலும், ஊடகங்கள் எங்களுக்காக குரல் கொடுத்தன. மேலும், பல தன்னார்வ அமைப்புக்களும் உதவி செய்தார்கள். பிரிட்டன் மக்களும் உதவி செய்தார்கள். அர்விந்த் ஷர்மா என்ற வழக்கறிஞர் கட்டணமே வாங்காமல் உச்ச நீதிமன்றத்தில் எனக்காக வாதாடினார்" என்று அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார் ஹாமீத் நிஹால் அன்சாரி.

ஹாமீத் அன்சாரிக்கு பாகிஸ்தானில் உதவி செய்த பெண்

மகனை வரவேற்ற தாய் ஃபெளஜியா அன்சாரியின் கையில் சாக்லேட் இருந்தது. அவனுக்கு மிகவும் பிடித்த சாக்லேட்டை வாங்கிக் கொண்டு வந்திருக்கிறேன் என்று நெகிழ்வுடன் சொன்னார் அந்த தாய்.

மும்பையை சேர்ந்த ஹாமீத் மேலாண்மை பட்டப்படிப்பு படித்தவர். அவர் காணாமல் போவதற்கு முதல்நாள் தான் மும்பையில் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக வேலைக்கு சேர்ந்தார்.

படத்தின் காப்புரிமை FB
Image caption ஹாமீத் அன்சாரி

ஹாமீதின் தாய் ஃபெளஜியா அன்சாரி மும்பையில் இந்தி மொழி பேராசிரியர் மற்றும் கல்லூரியின் துணை முதல்வர். ஹாமீத் அன்சாரியின் தந்தை வங்கியில் பணிபுரிபவர், மூத்த சகோதரர் பல் மருத்துவர்.

''பேஸ்புக்கில் ஹாமீத் அன்சாரிக்கும், கோஹட்டில் வசிக்கும் ஒரு பெண்ணுக்கும் நட்பு ஏற்பட்டது. அந்தப் பெண்ணை சந்திப்பதற்காக ஹாமீத் பாகிஸ்தான் செல்ல விரும்பினார். பாகிஸ்தான் விசா பெற அவர் பலமுறை முயற்சி செய்தார். ஆனால் அவருக்கு விசா கிடைக்கவில்லை. பிறகு அவர் கோஹட்டில் வசிக்கும் உள்ளூர்வாசிகளுடன் பேஸ்புக்கில் தொடர்பு கொண்டார்.''

பிறகு எப்படியாவது கோஹட் செல்ல வேண்டும் என்று முடிவு செய்த அவர், விமான நிறுவனம் ஒன்றில் வேலைக்கான நேர்காணலுக்கு செல்வதாக குடும்பத்தினரிடம் பொய் சொல்லிவிட்டு, 2012 நவம்பர் நான்காம் தேதியன்று விமானம் மூலம் மும்பையில் இருந்து காபூலுக்கு சென்றார்.

நவம்பர் 15ஆம் தேதியன்று திரும்பி வருவதாக வீட்டில் தெரிவித்திருந்தார். ஆனால் காபூலுக்கு சென்ற ஹாமீதை மொபைலில் தொடர்பு கொள்ள முடியாததால் குடும்பத்தினருக்கு சநதேகம் எழுந்தது.

படத்தின் காப்புரிமை Getty Images

இதற்கிடையில், காபூலில் இருந்து ஜலாலாபாதுக்குச் சென்ற ஹாமீத் அன்சாரி, முறையான பயண ஆவணங்களோ பாஸ்போர்டோ இல்லாமல் தோர்கம் வழியாக பாகிஸ்தானின் கோஹட் நகருக்கு சென்றார்.

ஹம்ஸா என்ற பெயரில் போலி அடையாள அட்டையை பயன்படுத்தி கோஹட்டில் ஹோட்டலில் அறை எடுத்தார். சந்தேகத்தின் அடிப்படையில் போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார் என்று பாகிஸ்தான் போலீசார் தெரிவித்தனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து சட்டவிரோதமாக பாகிஸ்தானுக்கு வந்ததை ஹாமீத் அன்சாரி ஒப்புக்கொண்டதாக பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. பிறகு அவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

ஹாமீதுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டதும், அவரின் மடிக்கணினியில் பேஸ்புக் மற்றும் மின்னஞ்சல்களை குடும்பத்தினர் சோதித்து பார்த்தார்கள். அப்போது, பாகிஸ்தானின் கைபர் பக்தூங்வா பிராந்தியத்தில் உள்ள கோஹட்டில் ஒரு பெண்ணுடன் அவருக்கு நட்பு ஏற்பட்டுள்ளதும், அவரை நேரில் சந்திக்க ஹாமீத் விரும்பியதும் தெரியவந்தது.

அதைத்தவிர பேஸ்புக்கில் அவரது நண்பர்களாக இருந்தவர்களின் வழிகாட்டுதலில் ஹாமீத் இவ்வாறு செயல்பட்டதாக அவரது தாயார் கூறுகிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஹாமீதுக்காக போராடிய பாகிஸ்தான் பெண் வழக்கறிஞர்

ஹாமீத் இந்தியாவிற்கு திரும்புவதற்கு பலர் காரணம் என்றாலும், அதில் பாகிஸ்தான் மனித உரிமை செயற்பாட்டாளரும் வழக்கறிஞருமான ரக்ஷாந்தா நாஜ் என்பவரின் பங்கு முக்கியமானது.

ஹாமீத் அன்சாரிக்காக அவர் மேற்கொண்ட சட்டப் போராட்டம் தொடர்பாக பிபிசி அவரிடம் பிரத்யேக பேட்டி கண்டது. ஹாமீதின் வழக்குப்பற்றிய விரிவான தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார்.

ரீதா மன்சந்தா என்ற இந்திய சமூக சேவகி ஒருவரின் மூலமாகத்தான் எனக்கு ஹாமீத் அன்சாரி தொடர்பான தகவல்கள் தெரியவந்தது. பாகிஸ்தான் பத்திரிகையாளரும் சமூக சேவகியுமான ஜீனத் ஷாஹ்ஜாதி என்பவர் இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

ஹாமீத் அன்சாரியின் தோழியை சந்திக்க சென்றிருந்த ஜீனத், அந்த பெண்ணின் தந்தையையும் சந்தித்து பேசினார். அதே ஊரில் இருந்த ஹாமீதின் பேஸ்புக்க் நண்பர்களிடமும் பேசினார். தோழியின் அடையாளத்தை சொல்ல அவர் மறுத்துவிட்டார். அந்த பெண்ணுக்கு தற்போது திருமணமாகிவிட்டது.

Image caption ஜீனத் ஷாஹ்ஜாதி

ஜீனத்தின் முயற்சி இல்லையென்றால் ஹாமீத் பற்றிய தகவல்கள் யாருக்குமே தெரிந்திருக்காது. இந்த வழக்கின் வெற்றிக்கு ஜீனத் தான் காரணம் என்று கூறுகிறார்

உண்மையில் அந்த சமயத்தில் நான் பாகிஸ்தானில் மூன்று ஆண்டுகளாக இருக்கவில்லை. நான் பாகிஸ்தானுக்கு வந்தபோது வழக்கில் ஆர்வம் காட்டிய ஜீனத் ஷஹஜாதியை காணவில்லை. (இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டு இப்போது அவர் குடும்பத்தினருடன் இருக்கிறார்).

இதனால்தான் ஹாமீதுக்கு உதவி செய்வதற்காக நான் இந்த விவகாரத்திற்குள் நுழைந்தேன் என்று சொல்கிறார் ரக்ஷந்தா நாஜ்.

ஹாமீத் அன்சாரியை முதன்முதலாக சந்தித்தபோது, தான் சிறையில் இருந்து வெளியே வருவோம் என்ற நம்பிக்கையே அவருக்கு இல்லை என்பதை நினைவுகூர்கிறார் ரக்ஷந்தா நாஜ்.

ஹாமீத் மீது உளவு பார்த்தல், சட்டபூர்வ ஆவணங்கள் இல்லாமல் நாட்டுக்குள் வந்தது என்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.

வழக்கை படித்து பார்த்தபோது அதன் உண்மைத்தன்மை புரிந்ததால் நான் உதவி செய்ய முடிவு செய்தேன் என்று ஹாமீத் அன்சாரி தொடர்பான அனைத்து தகவல்களையும் விரிவாக பிபிசியிடம் தெரிவித்தார் ரக்ஷந்தா நாஜ்.

படத்தின் காப்புரிமை RAKHSHANDA NAZ
Image caption ரக்ஷந்தா நாஜ்

வழக்கறிஞர் காஜி மற்றும் ரக்ஷந்தா நாஜ் என இருவரிடம் மட்டும் செவ்வாய்க்கிழமையன்று தொலைபேசியில் பேச ஹாமீதுக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது. அவருக்கு எதாவது தேவையென்றால் அவரை பார்க்கச் செல்லும்போது வாங்கிச் செல்வேன் என்கிறார் ரக்ஷந்தா நாஜ்.

மாதம் ஒருமுறை ஹாமீதை சந்திக்க அனுமதி கொடுப்பார்கள். சில சமயங்களில் தேவைபட்டால் அதிக முறை சந்திக்க அனுமதி கிடைக்கும்.

ஹாமீதை என்னுடைய மகனாக நினைத்துதான் உதவிகள் செய்தேன். நானோ, வழக்கறிஞர் காஜியோ எந்தவித பணத்தையும் அதற்கு பதிலாக பெறவில்லை என்று சொல்கிறார் ரக்ஷந்தா.

ஹாமீதின் தாயுடன் பேசும்போது, தன் மகன் சைவ உணவு மட்டுமே சாப்பிடுவான் என்று சொன்னார். ஆனால் பாகிஸ்தான் சிறையில் இருந்தபோது, பிரியாணி, பர்கர் எனபலவிதமான உணவுகளையும் சாப்பிடத் தொடங்கிவிட்டான் என்று சொன்னதும் அவரது தாய்க்கு ஆச்சரியம் ஏற்பட்டது.

அதுமட்டுமல்ல, சிறையில் இருந்தபோது, நான் வாங்கிச் செல்லும் பொருட்களில் இருந்து எனக்கு பாயசம் செய்துக் கொடுப்பான். உங்கள் வரவை தினமும் எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருப்பேன். உங்களுக்காக பாயசம் செய்து வைத்திருப்பேன். மாலை வரை வரவில்லை என்றால் பிறகு நானே சாப்பிடுவேன் என்று ஹாமீத் சொல்லும்போது என்னுடைய கண்கள் கலங்கிவிடும்.

சிறையில் இருந்தபோது பல பொருட்களை தயாரிக்க கற்றுக்கொண்டார் ஹாமீத். தீக்குச்சிகளால் செய்யப்பட்ட ஒரு வீட்டை செய்து எனக்கு பரிசாக கொடுத்தார் என்று சொல்கிறார் ரக்ஷாந்தா நாஜ்.

படத்தின் காப்புரிமை RUKHSHANDA NAZ
Image caption ரக்ஷந்தா நாஜ்க்கு ஹாமீத் கொடுத்த பரிசு

ஹாமீதின் குடும்பத்துடன் தொடர்பு கொண்டு விவரத்தை கூறியபோது அவர்களுக்கு ஹாமீத் உயிருடன் இருப்பதை நம்பமுடியவில்லை. பல நாட்களாக காணாமல் போயிருந்த மகன் இருப்பதை தெரிந்துக் கொண்டதும் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள்.

ஹாமீதின் வழக்கு சமூக ஊடகத்துடன் தொடர்புள்ளதாக இருந்தது. இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் காஜி முகமது அன்வர் செயல்பட்ட விதம்தான் இந்த வழக்கில் வெற்றியை கொடுத்தது என்று அவர் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: