யேமன் போர்: ஐ.நாவின் புதிய முயற்சியால் லட்சக் கணக்கானோரின் பட்டினி தீருமா?

யேமன் போர்:

பட மூலாதாரம், MOHAMMED AWADH/ SAVE THE CHILDR

யேமன் உள்நாட்டுப் போரில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள சண்டை நிறுத்தத்தைக் கண்காணிக்க தமது குழு ஒன்றை அனுப்ப ஐ.நா பாதுகாப்பு சபை ஒப்புதல் அளித்துள்ளது.

உள்நாட்டுப் போரால் கடும் பஞ்சத்தை சந்தித்துள்ள யேமனில் உணவுப்பொருட்கள் மற்றும் நிவாரண உதவிகள் செல்வதற்கான முக்கிய நுழைவாயிலாக உள்ள, ஹுடைடா துறைமுக நகரில் சண்டை நிறுத்தம் மேற்கொள்ள அரசு ஆதரவுப் படைகள் மற்றும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஆகியோர் கடந்த வாரம் ஒப்புக்கொண்டனர். இந்தச் சண்டை நிறுத்தம் கடந்த செவ்வாய் கிழமை அமலுக்கு வந்தது.

கண்காணிப்புக் குழுவை அனுப்பும் தீர்மானத்தை பிரிட்டன் தயாரித்தது. பாதுகாப்பு சபையில், கடந்த மூன்று ஆண்டுகளில் யேமன் தொடர்பாக நிறைவேற்றப்படும் முதல் தீர்மானம் இதுவாகும்.

சண்டை நிறுத்தம் மற்றும் உதவிப்பொருள் விநியோகம் ஆகியவற்றை ஐ.நா அனுப்பும் குழு முதல் கட்டமாக 30 நாட்கள் கண்காணிக்கும்.

காணொளிக் குறிப்பு,

ஏமன் மோதல்: யார், யாரோடு, ஏன் மோதுகிறார்கள்?

ஹுடைடா நகரின் முக்கியத்துவம் என்ன?

யேமன் தலைநகர் சானாவில் இருந்து மேற்கே 140 கி.மீ. தொலைவில் உள்ள ஹுடைடா நகரம் அந்நாட்டின் நான்காவது மிகப் பெரிய நகரம். 2014ஆம் ஆண்டில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் செல்வதற்கு முன் இது அந்நாட்டின் மிக முக்கியமான பொருளாதார மையமாக இருந்தது.

யேமன் அரசை ஆதரிக்கும் சௌதி தலைமையிலான கூட்டுப்படையினர் கடந்த ஜூன் மாதம் முதல் இந்த நகரைக் குறிவைத்துத் தாக்கி வருகின்றனர்.

உணவு, எரிபொருள், மருந்து ஆகியவற்றுக்கு முற்றிலும் வெளியிலிருந்து வரும் உதவிப்பொருட்களை சார்ந்திருக்கும் யேமனின் மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு, இந்த துறைமுக நகரம் இன்றியமையாத உயிர் காக்கும் பாதையாக உள்ளது.

யேமனில் உள்ள 22 மில்லியன் (2.2 கோடி) மக்களுக்கு ஏதாவது ஒருவித உதவி தேவைப்படுகிறது. அடுத்த வேளை உணவு கிடைக்குமா என்றே அந்நாட்டில் உள்ள 80 லட்சம் பேருக்குத் தெரியாது.

ஐ.நா தீர்மானத்தில் என்ன உள்ளது?

எரிபொருள் உள்ளிட்ட பொருளாதாரத் தேவைகள் மற்றும் நிவாரண உதவிகள் விநியோகம் செய்யப்படுவதை அரசுப் படைகள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் தடுக்கக்கூடாது என்றும், அவற்றுக்கான நிறைவாக ரீதியான தடைகள் விலக்கப்பட வேண்டும் என்றும் இந்தத் தீர்மானம் வலியுறுத்துகிறது.

இந்த மாத இறுதிக்குள் ஹுடைடா நகரில் போர் நிறுத்தத்தை கண்காணிக்க நிலையான நடைமுறைகளை அமல்படுத்தவும், அங்கு மீண்டும் ஐ.நா படைகளை அனுப்பவும், அந்நகரில் உள்ள மூன்று துறைமுகங்களைக் கண்காணிப்பதில் முக்கிய பங்காற்றவும் ஐ.நா பொதுச் செயலர் ஆண்டானியோ கட்டரஸை இந்தத் தீர்மானம் கோருகிறது.

செங்கடலின் கரையில் அமைந்துள்ள இந்தத் துறைமுக நகரில் அமைதி திரும்பினால், பல லட்சம் யேமன் மக்களின் பட்டினி தீர்வதுடன், உள்நாட்டுப் போர் முடிவுக்கு வரவும் வழி உண்டாகும் என பிபிசியின் ஐ.நா செய்தியாளர் நடா தவ்ஃபிக் தெரிவிக்கிறார்.

என்ன நடக்கிறது யேமனில்?

அரபு நாடுகளிலேயே, யேமன் நாடுதான் மிகவும் வறிய நாடு. குறைந்து வரும் எண்ணெய் மற்றும் தண்ணீர் வளம் அதன் பிரச்சனைகள். உள்நாட்டுப் போர் தொடங்கியதிலிருந்து, அதன் அடிப்படைக் கட்டமைப்பு நொறுங்கிவிட்டது. யேமனின் பொருளாதாரமும் ஸ்தம்பித்துவிட்டது.

அதன் 26 மில்லியன் (2.6 கோடி) மக்கள்தொகையில் குறைந்தது 80 சதவீதத்தினராவது, உணவுக்காக உதவியை எதிர்நோக்கும் நிலையில் உள்ளனர்.

அரசு ஆதரவுப் படையினருக்கும், ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடந்த மோதலில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 2.5 மில்லியன் (25 லட்சம்) பேருக்கும் மேற்பட்டவர்கள் நாட்டிற்குள்ளேயே இடம்பெயர்ந்து வசிக்கின்றனர்.

யேமன் மோதலை பிராந்திய போட்டி நாடுகளான சௌதி அரேபியாவுக்கும் இரானுக்கும் இடையேயான மதக்குழுக்களின் நிழல் யுத்தம் என்று சிலர் கருதுகிறார்கள்.

சௌதி அரேபியா ஒரு சுன்னி இனப் பெரும்பான்மை நாடு. சௌதியின் கிழக்குப் பகுதியில் வசிக்கும் ஷியா பிரிவினர் தங்களை அரசு ஒதுக்கிவருவதாகவும், பாரபட்சம் காட்டுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

இரான் ஒரு ஷியா பெரும்பான்மை நாடு. இந்த இரு நாடுகளும் அரபுப் பிராந்தியத்தில் தங்கள் செல்வாக்கை நிலைநிறுத்தவும், அதிகரிக்கவும் போட்டியிடுகின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: