சீனாவிலிருந்து தேயிலை சாகுபடியை ஆங்கிலேயர்கள் திருடிய கதை

  • ஜஃபர் சையத்
  • பிபிசி செய்தியாளர்
சீனாவிலிருந்து தேயிலை சாகுபடியை ஆங்கிலேயர்கள் திருடியது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

வாட்ட சாட்டமான ராபர்ட் ஃபார்சூன், கண்களில் இருந்து நீர்வழிய சவரத் தொழிலாளியின் முன் தலைகுனிந்து அமர்ந்திருந்தார். ராபர்டின் தலையின் முன் பகுதியில் இருக்கும் முடி மழிக்கப்பட்டது.

தலையில் இருந்து முடி குறையக் குறைய ராபர்டின் கண்களில் இருந்து பெருகும் கண்ணீரின் அளவும் அதிகமானது.

1848ஆம் ஆண்டு சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற இந்த சம்பவத்திற்கும், தேநீருக்கும் அசைக்க முடியாத ஒருதொடர்பு இருக்கிறது. கிழக்கிந்திய கம்பெனியின் பணியாளரான ராபர்ட் ஃபார்சூன் ஒரு உளவாளி.

இந்த உளவாளியின் வேலை தேயிலையை திருடுவது என்று சொன்னால் வியப்பாக இருக்கிறதா? சீனாவின் பல பகுதிகளுக்கும் சென்று அங்கு விளையும் தேயிலை மற்றும் அதன் சாகுபடி நுட்பங்களை திருடிவரும் வேலைக்குதான் ராபர்ட் பணியமர்த்தப்பட்டிருந்தார்.

திருட கிளம்பும்போது, ஒரு சீனராக தன்னை உருமாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்த ராபர் ஃபார்சூன் ஸ்காட்லாந்தை சேர்ந்தவர். அதற்காக அவர் செய்த முதல் தியாகம் முடி. ஏனெனில் ஒரு சீனராக மாறும்போது, அவர்களின் வழக்கப்படி தலையின் முன்பகுதி முடியை மழித்துக் கொள்வதும், தலைமுடியை சடையாக பின்னலிட்டுக் கொள்வதும் அவசியமானது.

அதன்பிறகு சீனர்கள் அணிவது போன்ற ஆடை அணிகலன்களையும் அணிந்து கொண்டார். அதிகம் பேசக்கூடாது என்று ராபர்ட்டுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதுதான் அவருக்கு மிகவும் சிரமமாக இருந்தது.

இதெல்லாம் சரி, மழிப்பதும் நீட்டலும் முடிந்தாயிற்று, ஆனால் சீனர்களின் சராசரி உயரத்தை விட அதிகமாக இருந்த உயரத்தை என்ன செய்வது?

அதற்கும் ஒரு உபாயத்தை கண்டுபிடித்தாயிற்று. சீன பெருஞ்சுவருக்கு மறுபுறம் இருக்கும் இடத்தை சேர்ந்தவர்கள் சற்று உயரம் அதிகமானவர்கள் என்பதால், அந்தப் பகுதியை சேர்ந்தவர் என்று சொல்லிவிடலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

ராபர்ட்க்கு பணிக்கப்பட்ட வேலை மிகவும் சவால் நிறைந்தது. இந்த சவாலில் வெற்றிபெற்றால் தேயிலை ரகசியத்தை காலம் காலமாக பாதுகாத்துவரும் சீனாவின் ஆதிக்கம் குறைந்துவிடும்.

கிழக்கிந்திய கம்பெனியினர் சீனாவில் இருந்து கிடைத்த தேயிலையின் சூத்திரத்தை பயன்படுத்தி இந்தியாவில் விளைவித்து உலகம் முழுவதும் விற்கமுடியும். மாறாக ராபர்ட் அகப்பட்டுக் கொண்டால், சீன அரசால் கொல்லப்படுவார்.

பட மூலாதாரம், Getty Images

தினசரி இரண்டு பில்லியன் கோப்பை நுகர்வு

உலகிலேயே தண்ணீருக்கு பிறகு அதிகம் அருந்தப்படுவது தேநீர்தான் என்றும் உலகில் இரண்டு மில்லியன் மக்கள் தினசரி காலை எழுந்தவுடன் தேநீர் குடிக்கிறார்கள் என்றும் ஒரு ஆய்வு கூறுகிறது.

வீட்டிலோ அல்லது பணம் கொடுத்தால் கடையிலோ ஒரு கப் தேநீர் கிடைத்துவிடும் என்றுதானே தோன்றுகிறது? அதேபோல பொதுவாக தேநீர் அருந்துபவர்களுக்கு, அது நமது கைக்கு கிடைப்பது எப்படி என்ற கேள்வி எழுவதில்லை.

ஆனால் உண்மையில் தேநீரின் கதை ஒரு மர்ம நாவலைப் போன்று சுவாரசியமானது. சாகசங்களும், அதிர்ஷ்டமான தருணங்களும், துரதிருஷ்டவசமான சம்பவங்களும் கலந்த ஒரு துப்பறியும் கதைக்கு ஒப்பானது தேநீர் உலகம் முழுவது பரவிய பின்னணிக் கதை.

காற்றில் பறந்த தேயிலை

தேநீர் தோன்றிய வரலாறு பற்றி பலவிதமான கதைகள் உலவுகின்றன. அதில் ஒரு பிரசித்தமான கதையின்படி, ஷினூங் என்ற சீன அரசர், மக்கள் தண்ணீரை சூடுபடுத்தி வெந்நீராக அருந்த வேண்டும் என்று அறிவுறுத்துவார்.

காட்டுக்கு சென்றிந்தபோது, அங்கு அரசர் பருகுவதற்காக கொதிக்க வைத்த நீரில் சில இலைகள் விழுந்துவிட்டன. அந்த வெந்நீரை அரசர் அருந்தியதும் அதில் புதுவித மணம் இருந்ததை கண்டு வியப்பு ஏற்பட்டது. அதோடு, அவரது உடலில் புத்துணர்ச்சி ஏற்பட்டது.

அதன்பிறகு அந்த இலையை மக்கள் அனைவரும் பருகலாம் என்று அரசர் பரிந்துரைக்க, அரசரின் பரிந்துரையைப் பெற்ற தேநீரின் சுவையும், மணமும், புத்துணர்ச்சி தரும் குணமும், பானங்களின் அரசன் தேநீர் என்ற உயர்வான இடத்தை கொடுத்த்து.

ஐரோப்பாவில் 16ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியர்கள் தேயிலை வணிகத்தை தொடங்கினார்கள். அந்த நூற்றண்டின் இறுதியிலேயே தேயிலை உலகின் பல்வேறு பகுதிகளுக்கு பரவிவிட்டது. ஆனால் பிற நாட்டினரைவிட பிரிட்டானியர்களுக்கு தேநீரின் சுவை மிகவும் பிடித்துப்போனது.

மேற்கத்திய நாடுகளுக்கு தேவையான பொருட்களை வர்த்தகம் செய்யும் பொறுப்பு கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்தது. சீனாவில் மட்டுமே தேயிலை இருந்ததால், அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருந்தது.

அதோடு, சீனாவில் இருந்து வாங்கிய தேயிலையை கடல் வழியாக கொண்டு செல்வதற்கு அதிக செலவானதால் தேயிலை விலை உயர்ந்த பண்டமாக இருந்தது. எனவே பல கோணங்களில் சிந்தித்த கிழக்கிந்திய கம்பெனி, அந்த ரகசியத்தை தெரிந்து கொண்டு காலனி நாடுகளில் பயிரிட்டு வர்த்தகம் செய்யக்கூடாது என்று சமோயோசிதமான முடிவை எடுத்தது.

தேயிலையை எப்படி பயிரிடுவது, சாகுபடி முறைகள், பதப்படுத்துவது, வகைப்படுத்துவது என பல கட்டங்களையும் தெரிந்து கொள்ள வேண்டியதும் அவசியம். அதாவது வெறும் தேயிலைப் பயிர்களை திருடுவதோடு, அதன் அனைத்து நுணுக்கங்களையும் தெரிந்துக் கொண்டால்தான் ஆங்கிலேயர்களின் நோக்கம் நிறைவேறும். ஆனால் சீனா ஒருபோதும் இந்த ரகசியங்களை வெளியிடாது.

இதுதான் ஆங்கிலேயர்கள் ராபர்ட் ஃபார்சூனை சீனராக மாற்றியதன் பின்னணி.

பட மூலாதாரம், DEA PICTURE LIBRARY

இந்த ரகசியங்களை தெரிந்து கொள்வதற்காக ராபர்ட் சீனாவின் தொலைதூர மற்றும் மிகவும் உள்ளடங்கிய பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டார்.

மார்க்கோ போலோவுக்கு பிறகு எந்தவொரு ஐரோப்பியரும் செல்லாத சிக்கலான பயணம் அது. ஃபோஜியான் பிராந்தியத்தின் மலைப்பகுதிகளில் உயர் தரம் வாய்ந்த கருந்தேயிலை வளரும். எனவே, சிங் ஹுவா என்று புதுப்பெயர் சூட்டப்பட்ட ராபர்ட் அங்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

சிறப்பான, உயர்தர தேயிலைச் செடிகளையும் அவற்றின் விதைகளை கொண்டு வருமாறும், அவற்றின் சாகுபடி முறைகளைப் பற்றிய தொழில் நுணுக்கங்களையும் கற்றுக் கொண்டு வரவேண்டும் என்று கிழக்கிந்திய கம்பெனி சிங் ஹூவாவுக்கு உத்தரவு இட்டது.

இந்த பணிக்காக அவருக்கு ஆண்டுக்கு 500 பவுண்டுகள் ஊதியம் வழங்குவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.

ஆனால் ராபர்ட் ஃபார்சூனின் வேலை சுலபமானதல்ல. வெறும் தொழில்நுட்பத்தை கற்றுக் கொண்டால் மட்டும் போதாது, செடிகளையும், விதைகளையும் திருடிக் கொண்டு வந்து அதை பத்திரமாக ஒப்படைக்க வேண்டும். அதைக்கொண்டு இந்தியாவில் சாகுபடி செய்து அதை வெற்றிகரமாக வளர்த்து, அந்த நுணுக்கங்களை பிறருக்கு கற்றுத் தரவேண்டும் என்ற நீண்ட கால இலக்கும், ராபர்ட்டின் முன் இருந்த விநோதமான சவால்.

அதுமட்டுமா? ஒருவரே எல்லா வேலைகளையும் செய்ய முடியாதல்லவா? எனவே சீனாவை சேர்ந்த சில தேயிலை விவசாயிகளையும் அவர் அழைத்துக் கொண்டு வரவேண்டும்.

அதோடு, தேயிலை சாகுபடிக்கு உகந்த பருவம், இலை விடும் பருவம், உரங்கள் என பல்வேறு விஷயங்களையும் கற்றுத் தேறவேண்டும்.

அந்த மாபெரும் பணியை முடித்துக் கொண்டு பல படகுகள், பல்லக்குகள், குதிரைகள் மூலமாக கடுமையான சிரமத்துடன் மூன்று மாத முயற்சிகளுக்கு பிறகு தேயிலையுடன் வந்து சேர்ந்தார்.

கருந்தேயிலை மற்றும் பச்சை தேயிலை என்பவை வெவ்வேறு என்றுதான் அதுவரை ஐரோப்பாவில் நம்பப்பட்டது. ஆனால் சீனாவிற்கு ராபர்ட் சென்ற பிறகுதான் இரண்டுமே ஒரே தேயிலை செடியில் இருந்து கிடைக்கும் இரு வகைகள் என்று தெரிந்து கொண்டார்.

இதுபோன்ற ஆச்சரியமான பல அனுபவங்கள் ஏற்பட்டாலும், அதை வெளிக்காட்டால் மெளனமாக அனைத்தையும் கிரகித்துக் கொண்டார்.

தேயிலை விதைப்பில் இருந்து அறுவடை செய்வது, அதை காயவைப்பது, தரம் பிரிப்பது, பதப்படுத்துவது என அனைத்து நுணுக்கங்களையும் கற்றறிந்தார் ராபர்ட் ஃபார்சூன்.

பட மூலாதாரம், Getty Images

வரமாக மாறிய தவறு

ராபர்டின் கடுமையான உழைப்பு பலனளித்தது. அவர் ஆட்சியாளர்களுக்கு தெரியாமல் செடிகள், விதைகள் மற்றும் சில தொழிலாளர்களையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டார். இந்தியா வந்த ராபர்ட் ஃபார்சூனை வரவேற்ற கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகம், அஸ்ஸாமின் மலைப் பகுதிகளில் தேயிலை சாகுபடியைத் தொடங்கியது.

சீனாவின் கடும் குளிரில் நன்றாக வளர்ந்த தேயிலை, அஸ்ஸாமில் சாகுபடி செய்யப்பட்டபோது காய்ந்து போய் தலை சாய்ந்துவிட்டது.

உயிரைப் பணயம் வைத்து மேற்கொண்ட நீண்டகால முயற்சிகள் அனைத்தும் வீணாய் போவதற்கு முன்பு விசித்திரமான தற்செயல் நிகழ்வு ஒன்று நிகழ்ந்தது. அதை கிழக்கிந்திய கம்பெனியின் அதிர்ஷ்டம் என்று சொல்வதா அல்லது சீனாவின் துரதிருஷ்டம் என்று சொல்வதா என்று தெரியவில்லை.

தேயிலைப் போன்றே ஒரு செடி அஸ்ஸாமின் மலைப் பகுதிகளின் காடுகளில் புதர்போல வளர்ந்து கிடந்தது. தேயிலையை கண்காணித்துக் கொண்டிருந்த ராபர்டின் கண்களில் 1823ஆம் ஆண்டில் தென்பட்டது. ஆனால் அந்த செடியின் இலைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட பானத்தின் சுவை தேநீரின் அளவு இல்லை என்று பலரும் கருதினார்கள்.

ராபர்ட் ஃபார்சூன் சீனாவில் இருந்து அரும்பாடுபட்டு கொண்டு வந்த தாவரங்கள் பட்டுப்போக, அஸ்ஸாமில் முளைத்திருந்த தாவரத்தின்மீது கிழக்கிந்திய கம்பெனியின் கவனம் திரும்பியது. அந்த தாவரம் சீனாவின் தேயிலைப் போன்றது என்பதை ராபர்ட் கண்டுகொண்டார்.

சீனாவில் இருந்து கொண்டு வரப்பட்ட தேயிலைச் செடிகள் பயனளிக்கவில்லை என்றாலும், தொழில்நுட்பமும், நுணுக்கங்களும், சாகுபடி முறைகளும் அஸ்ஸாமில் இயற்கையாக வளர்ந்த தாவரத்தை மேம்படுத்த பயன்பட்டது.

இதை, அறிவுசார் சொத்துரிமையை திருடும் கார்பரேட்களின் முயற்சியின் தொடக்கம் என்றும் கூறலாம்.

அஸ்ஸாம் பகுதியில் நாட்டுத் தேயிலையை மேம்படுத்துவதில் வெற்றியடைந்த கிழக்கிந்திய கம்பெனி, உலக அளவில் தேயிலையை வர்த்தகம் செய்தது. ஒரு கட்டத்தில் விற்பனையில் இந்திய தேயிலை, சீனாவின் தேயிலையை முந்திவிட்டது.

ஏற்றுமதியில் ஏற்பட்ட சரிவால் சாகுபடியும் குறைந்து, தேயிலை உற்பத்தி நாடுகளில் பின்தங்கிவிட்டது சீனா.

பட மூலாதாரம், Getty Images

தேநீரில் புதுப்பொலிவு

தேநீர் தயாரிப்பில் புது முறை ஒன்றையும் ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்தினார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வெந்நீரில் தேயிலையை போட்டு அப்படியே அருந்தி வந்தார்கள். ஆனால் ஆங்கிலேயர்கள் தேநீரில் முதலில் சர்க்கரையையும், பிறகு பால் சேர்க்கும் முறையையும் தொடங்கினார்கள்.

உண்மையில் இன்றும்கூட, தேநீரில் வேறு பொருட்களை கலந்து அருந்துவதை சீனர்கள் விசித்திரமாக பார்க்கிறார்கள். அதேபோல் ஆங்கிலேயர்களை பார்த்து பல வழக்கங்களை பின்பற்றத் தொடங்கிய இந்தியர்களும் தேநீரில் பிற பொருட்களை கலந்து அருந்தும் பழக்கத்தை கற்றுக் கொண்டனர்.

அமெரிக்க புரட்சியில் இந்தியாவின் பங்கு

1985ஆம் ஆண்டு அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்ட அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி, தேயிலையின் வரலாற்றில் இந்தியாவின் பங்கு பற்றிய ஒரு ஆதாரத்தை முன்வைத்தார். அமெரிக்க காங்கிரசில் கூட்டு மாநாட்டில் உரையாற்றிய அவர், இந்தியாவில் பயிரிடப்பட்ட தேயிலை, பிரிட்டனில் இருந்து அமெரிக்கா சுதந்திரம் பெறுவதற்கு காரணமாக இருந்தது என்ற கருத்தை முன்வைத்தார்.

1773ஆம் ஆண்டு அமெரிக்காவில் தேயிலை வர்த்தகத்தை தொடங்கிய கிழக்கிந்திய கம்பெனி, வரி செலுத்தவில்லை. ஆனால், ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த சில அமெரிக்கர்கள் பாஸ்டன் துறைமுகத்தில் நின்றிருந்த கிழக்கிந்திய நிறுவனத்தின் கப்பலில் ஏறி, அதிலிருந்த தேயிலை பெட்டிகளை கடலில் வீசி எறிந்தனர்.

அமெரிக்காவின் இந்த செயலுக்கு வலுவான பதிலடியை பிரிட்டன் கொடுத்தது. இதை அடுத்து அமெரிக்காவில் வெடித்த புரட்சி மூன்று ஆண்டுகளில் அந்நாட்டுக்கு விடுதலை பெற்றுத்தந்தது.

ஆனால் ராஜீவ் காந்தி தேயிலையின் வரலாறை தவறாக புரிந்து கொண்டிருந்தார். 18ஆம் நூற்றாண்டில், இந்தியாவில் தேயிலை சாகுபடி தொடங்கவில்லை என்பதும், கிழக்கிந்திய கம்பெனி சீனாவில் இருந்து தேயிலையை வாங்கிக் கொண்டிருந்தது என்பதும் சரித்திரம் கூறும் தேயிலை வரலாறு.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: