கூகுளில் அதிகம் தேடப்பட்ட சீன தொடர் 'யன்ஷி பேலஸ்': காரணம் என்ன ?

பட மூலாதாரம், IQIYI
சீனாவில் பெரும்பாலான பகுதிகளில் கூகுள் தடை செய்யப்பட்டிருந்தாலும், 2018ஆம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட தொடராக யன்ஷி பேலஸ் என்ற சீன தொடர் அறிவிக்கப்பட்டுள்ளது.
கூகுளின் தேடல் ஆய்வுப்படி, ஆசிய பிராந்தியங்களில் நாடகத் தொடர் குறித்து அதிகம் தேடப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா, ப்ரூனே, ஹாங் காங் ஆகிய நாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் சீன பெருநிலப்பரப்பில் தான் அதிகம் தேடுதல் நடந்துள்ளது.
சீனாவில் நெட்ஃபிலிக்ஸ் போன்ற தளமான ஐகியியில் இந்த தொடர் 15 பில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது. அதன் பின் 70 வெளிநாட்டு தொலைக்காட்சி மற்றும் உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் அது ஒளிப்பரப்பானது.
சாதரண குடும்பத்தில் வாழும் ஒரு பெண் ராஜாவின் அன்பை பெறுவதே இந்த தொடரின் கதை. 1700களில் நடப்பவை போன்று கதை அமைப்பு அமைக்கப்பட்டது.
இந்தோனீசியா சுனாமி
பட மூலாதாரம், EPA
இந்தோனீசியாவின் சுந்தா நீரிணையில் ஏற்பட்ட சுனாமியில் 222க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர் மற்றும் 843 பேர் காயமடைந்துள்ளனர் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கு இடையில் அமைந்துள்ள சுந்தா நீரிணை ஜாவா கடலையும், இந்தியப் பெருங்கடலையும் இணைக்கிறது. இந்த நீரிணையில் அமைந்துள்ள க்ரகடோவா தீவில் இருக்கும் எரிமலை வெடித்ததால், நிலத்துக்கு அடியில் உண்டான சரிவுகள் சுனாமி பேரலைகளை உண்டாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
எந்த ஒரு அறிவிப்புமின்றி சுனாமி தாக்கியதில் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் சேதமாகின.
விரிவாக படிக்க - இந்தோனீசியாவில் எரிமலை வெடிப்பால் உண்டான சுனாமி - 222 பேர் பலி
இலங்கை வெள்ளம்
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி நிவாரண உதவிகளை வழங்குமாறு இலங்கையின் இராணுவத்தளபதி, வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கு ஜானதிபதி மைத்திரிபால சிறிசேன அவசர உத்தரவினை விடுத்துள்ளார்.
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் வெள்ளம் காரணமாக 13,646 குடும்பங்களை சேர்ந்த 44,959 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2661 குடும்பங்களை சேர்ந்த 8539 பேர் வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்து 52 நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளதாக இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள அனைத்து குளங்களும் வான்பாய்வதனால் அதனை அண்டியுள்ள பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
சபரிமலை எதிர்ப்பு
பட மூலாதாரம், A.S.SATHEESH
சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழிபாடு செய்ய சென்ற 50 வயதுக்கும் குறைவான பெண் பக்தர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் தமிழகத்துக்கு திரும்ப அழைத்து வரப்பட்டனர்.
டிசம்பர் 23 அன்று 10 முதல் 50 வயதுள்ள நூற்றுக்கணக்கான பெண்கள் சபரிமலை செல்லும் நோக்கில் பம்பையில் கூடவுள்ளதாக 'மனிதி' எனும் பெண்கள் அமைப்பு ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
கேரள தமிழ்நாடு எல்லையில் உள்ள இடுக்கி - கம்பமேடு வழியை காலை 3.30 மணிக்கு வந்தடைந்த பெண்கள், சபரிமலைக்கு செல்லும் வழியில் போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
30-40 போராட்டக்காரர்கள் அய்யப்பன் குறித்து கோஷங்களை எழுப்ப தொடங்கியவுடன், கோயிலுக்குள் செல்ல முயன்ற பெண்கள் பம்பையில் உள்ள போலிஸ் முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
பின் அங்கிருந்து அவர்கள் போலிஸ் பாதுகாப்புடன் தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கருத்தை திரும்பபெற மாட்டேன்
தமிழகத்தில் கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றபோது உரையாற்றிய திமுக தலைவர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோதி ஒரு சேடிஸ்டை போல் செயல்படுகிறார் என்று தெரிவித்தார்.
இதற்கு பாஜகவின் தமிழிசை செளந்தர்ராஜன் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று திமுக எம் எல் ஏ ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், மோதியை சேடிஸ்ட் என்று சொன்னதற்கு எதிர்ப்புகள் எழுந்தன ஆனால் அவர் ஒரு பிரதமராக சேடிஸ்டாகதான் செயல்படுகிறார் என்பதை மீண்டும் சொல்கிறேன் என தான் கூறியதை திரும்பவும் ஆமோதித்தார் ஸ்டாலின்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்