ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீஃபுக்கு 7 ஆண்டு சிறை

நவாஸ் ஷெரீஃப்

பட மூலாதாரம், Getty Images

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பிற்கு ஏழாண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது ஊழல் தடுப்பு நீதிமன்றம்.

வெளிப்படையாக அறிவித்ததைவிட கூடுதலான முதலீடுகளை செய்திருந்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் நவாசுக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த ஜூலை மாதம் லண்டன் சொகுசு குடியிருப்பு வளாகம் தொடர்பான மற்றொரு ஊழல் வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட பத்தாண்டு சிறை தண்டனை நிறுத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அந்த வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மற்றும் அவரது மகள் மரியம் நவாஸ் இருவரும் ஊழல் குற்றவாளிகள் என்று பாகிஸ்தானின் ஊழல் தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நவாஸுக்கு பத்தாண்டு சிறை தண்டனையும், அவரது மகள் மரியத்துக்கு ஏழாண்டு சிறை தண்டனையும், இருபது லட்சம் பவுண்ட் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது.

நவாஸ் சிறையில் இருந்ததால், பாகிஸ்தானில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி, ஷாஹ்பாஜ் ஷெரீஃப்பின் தலைமையில் போட்டியிட்டது. ஆனால் இம்ரான் கானின் கட்சி வெற்றிபெற்று இம்ரான் பிரதமரானார்.

பட மூலாதாரம், Getty Images

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இம்ரான் கான் பிரதமராக பதவியேற்ற பிறகு, நவாஸ் ஷெரீஃபின் தண்டனையை செப்டம்பர் மாதம் இஸ்லாமாபாத் நீதிமன்றம் நிறுத்திவைத்து நவாஸை விடுதலை செய்தது.

அல்-அஜீஜியா ஸ்டீல் மில்ஸ் என்ற ஆலையில் முதலீடு செய்தது தொடர்பான இந்த வழக்கில் தற்போது நவாஸுக்கு ஏழாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்பை கேட்பதற்காக லாகூரில் இருந்து இஸ்லாமாபாதிற்கு வந்திருந்தார் நவாஸ் ஷெரீஃப்,. தீர்ப்பை தெரிந்துக் கொள்ள பெரும் திரளான மக்கள் நீதிமன்றத்தில் கூடியிருந்தனர்.

வருமானத்திற்கு அதிகமான பணத்தை வெளிநாட்டில் முதலீடு செய்தது தொடர்பான வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அறிவித்த வருமானத்தை விட இந்த ஆலையில் நவாஸ் அதிகமாக முதலீடு செய்ததாகக் கூறிய நீதிமன்றம், நவாஸ் ஷெரீஃபுக்கு தண்டனையை அறிவித்தது.

இதனிடையில், நவாஸ் ஷெரீஃபை சிறைக்கு அனுப்பினால், பெரிய அளவிலான போராட்டங்கள் நடத்தப்படும் என்று நாட்டின் எதிர்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி ஏற்கனவே அறிவித்துவிட்டது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

நவாஸ் ஷெரீஃப்

அல்-அஜீஜியா ஸ்டீல் மில்ஸ் விவகாரம் என்ன?

நவாஸ் ஷெரீஃபின் தந்தை மியா முகமது ஷெரீஃப் 2001இல் செளதி அரேபியாவில், அஜீஜியா ஸ்டீஸ் மில்ஸ் என்ற ஆலையை நிறுவினார். நவாஸ் ஷெரீஃபின் மகன் ஹுசைன் நவாஸ் இந்த ஆலையின் நிர்வாகத்தை பார்த்துக்கொள்கிறார்.

ஷெரீஃப் குடும்பத்தினர் செய்திருக்கும் முறையீட்டில், இந்த ஆலையை நிறுவுவதற்காக செளதி அரேபியாவும் நிதியுதவி வழங்கியிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

ஆனால் அதை நிரூபிக்கும் ஆவணங்கள் எதுவும் சமர்க்கப்பிக்கப்படவில்லை என்றும், ஆலைக்கு பணம் எங்கிருந்து கிடைத்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் ஊழல் தடுப்பு அமைப்பின் வழக்கறிஞர் தெரிவித்தார்.

தனது தாத்தா முகமது ஷெரீஃப், தன்னிடம் இருந்த 50 லட்சம் டாலருக்கும் அதிகமான தொகையைக் கொண்டு அல் அஜீஜியா ஸ்டீல் ஆலையில் முதலீடு செய்ததாக ஹுஸைன் நவாஸ் தெரிவித்தார். இதைத்தவிர கத்தார் அரசக் குடும்பத்திடம் இருந்தும் முகமது ஷெரீஃபுக்கு உதவி கிடைத்தது என்றும் ஹுஸைன் நவாஸ் கூறுகிறார்.

ஆனால் இந்த விவகாரத்தை விசாரித்த முகமையின் கருத்துப்படி, அல் அஜீஜியா ஸ்டீல் ஆலையின் உண்மையான உரிமையாளர் நவாஸ் ஷெரீஃப். வருமானத்திற்கு அதிகமான பணத்தை ஆலையில் முதலீடு செய்ததாக நீதிமன்றம் கருதியதால் தற்போது ஏழாண்டு சிறை தண்டனை பெற்றிருக்கிறார் நவாஸ் ஷெரீஃப்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

நவாஸ் ஷெரீஃப்

கடந்த ஓராண்டாக நவாஸுன் அரசியல் வாழ்க்கை அமைதியானதாக இருக்கவில்லை. தினம் தினம் போராட்டமாகதான் இருந்தது. இப்படியான சூழலில் இம்மாதம் வந்த இப்படியான தீர்ப்பு நிச்சயமாக பின்னடைவுதான்.

பனாமா ஊழல் வழக்கில் தொடர்பு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் நவாஸ் பிரதமர் பதவியை இழந்தார்.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், நவாஸ் தேர்தலில் போட்டி இடுவதற்கு வாழ்நாள் தடை விதித்தது நீதிமன்றம்.

அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதிலிருந்து, அந்நாட்டு நீதித்துறை மற்றும் ராணுவத்திற்கு எதிராக தொடர்ந்து குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்தார் நவாஸ் என்து குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: