இந்தோனீசியா சுனாமி பேரலை: உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு - தொடரும் பாதிப்பு

இந்தோனீசிய பேரிடர் உயிரிழப்புகள் 373-ஆக அதிகரிப்பு - தொடரும் பாதிப்பு

பட மூலாதாரம், Ulet Ifansasti

இந்தோனீசியாவின் அனாக் க்ரகடோவா தீவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பில் குறைந்தது 429 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் பேரழிவு தடுப்பு முகமை தெரிவித்துள்ளது. மேலும் 16 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர் என அம்முகமை கூறுகிறது.

சுமத்ரா மற்றும் ஜாவா தீவுகளில் உள்ள கடலோர நகரங்களில் சனிக்கிழமை வீசிய பிரம்மாண்ட சுனாமி அலைகள் பெரும் பாதிப்பை உண்டாக்கியது.

ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கு இடையில் அமைந்துள்ள சுந்தா நீரிணையில் அமைந்துள்ள க்ரகடோவா தீவில் இருக்கும் எரிமலை வெடித்ததால், நிலத்துக்கு அடியில் உண்டான சரிவுகள் சுனாமி பேரலைகளை உண்டாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

''சனிக்கிழமை முதல் நடைபெற்ற இயற்கை பேரிடர் சம்பவங்களில் 1459 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 150 பேரை காணவில்லை'' என்று இந்தோனீசிய பேரழிவு தடுப்பு முகமையின் பேச்சாளர் சுடோபோ புர்வோ ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

அனாக் க்ரகடோவா தீவில் எரிமலை வெடித்ததால், அது ஒரு புதிய சுனாமியை உருவாக்கக்கூடும் என்று அப்பகுதிக்கு அருகில் உள்ள கடலோர மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அவர்களை கடலோர பகுதிகளில் இருந்து உள்பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் அனாக் க்ரகடோவா தீவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்புகளின் காரணமாக அப்பகுதிகள் புகைமண்டலமாக காட்சியளித்தது.

பட மூலாதாரம், GALLO IMAGES/ORBITAL HORIZON/COPERNICUS SENTIN

"எங்கும் இடிபாடுகள் சிதறிக்கிடக்கின்றன. இடிந்த கார்கள், நொருங்கிய மோட்டார் சைக்கில், கட்டட இடிபாடுகளையே எல்லா இடங்களிலும் காண முடிகிறது" என செஞ்சிலுவை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கார்கள் மற்றும் கண்டெய்னர்கள் 10 மீட்டர் தூரம் வரை இழுத்து செல்லப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

எரிமலை வெடித்ததால் சுனாமி ஏற்பட்டதா என அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images

1883ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இந்த க்ரகடோவா எரிமலை வெடித்துச் சிதறியதுதான், நவீன வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய எரிமலைச் சீற்றமாகக் கருதப்படுகிறது.

பன்தேக்லங், தெற்கு லாம்பங் மற்றும் சேராங் பகுதிகளில் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.

இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புண்டு என்றும் முழு நிலவு தினத்தையொட்டி அலைகளின் வேகம் அதிகமாக இருந்ததும் இழப்பை அதிகரித்திருக்கலாம் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: