காணாமல் போன துபாய் இளவரசியின் புகைப்படங்கள் வெளியீடு

காணாமல் போன துபாய் இளவரசியின் புகைப்படங்கள் வெளியீடு

பட மூலாதாரம், UNITED ARAB EMIRATES FOREIGN MINISTRY

காணாமல் போனதாக அஞ்சப்பட்ட துபாய் இளவரசியின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

துபாயின் ஆட்சியாளர் மகள் ஷேக் லடிஃபா கடந்த மார்ச் மாதம் வெளிநாட்டுக்கு தப்பிச்செல்வதற்கு முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. பிறகு இந்தியாவுக்கு அருகே ஒரு படகிலிருந்து அவர் வலுக்கட்டாயமாக திரும்ப அழைத்துச்செல்லப்பட்டதாக சாட்சியங்கள் குற்றஞ்சாட்டுகின்றன.

ஆனால், இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஷேக் லடிஃபா தனது குடும்பத்தினருடன் இல்லத்தில் வசித்து வருவதாக கூறுகிறது.

இந்த விவகாரத்தை எழுப்பிய சர்வதேச மனித உரிமை அமைப்புகள் அவரது பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு கேட்டுக்கொண்டதற்கு இணங்க தற்போது இந்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ரோஹிஞ்சா முஸ்லிம்கள் இந்துக்களின் சடலத்தை சாப்பிடுகிறார்களா?

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு,

ரோஹிஞ்சா முஸ்லிம்கள்

மியான்மரில் இருந்து அகதிகளாக இந்தியாவில் குடியேறிய ரோஹிஞ்சா முஸ்லிம்கள், இந்து மக்களின் சடலங்களை உண்பதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்கள் வைரலாக பரவுகின்றன. 'இந்தியாவில் குடியேறி இந்துக்களின் மாமிசத்தை உண்டு வாழ்பவர்கள்' என்ற தலைப்பில் இந்த செய்திகள் பகிரப்படுகின்றன.

ஹரியானா மாநிலத்தில் பிரபலமான 'ஆஜ் தக் குட்காவ்' என்ற வாரப் பத்திரிகையில் இந்த செய்தி வெளியாகியிருக்கிறது.

இந்த தகவலின் உண்மைத்தன்மையை சரிபார்ப்பதற்காக பிபிசி, மேவாதில் கள ஆய்வு மேற்கொண்டது. மேவாத் நகர காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் துக்கலிடம் பேசினோம். இதுபோன்ற குற்றச்சாட்டு குருகிராமில் பதிவாகியிருக்கிறதா என்று அவரிடம் கேட்டோம்.

எங்கள் கேள்விக்கு பதிலளித்த அவர், "இது முற்றிலும் தவறான செய்தி. ரோஹிஞ்சா முஸ்லிம்கள் தொடர்பாக எந்த குற்றச்சாட்டும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை" என்று தெளிவாக கூறிவிட்டார்.

"அமைச்சுப் பதவி வேண்டுமென்றால், மன்னிப்பு கோர வேண்டும்"

பட மூலாதாரம், Twitter

படக்குறிப்பு,

சரத் பொன்சேகா

அமைச்சுப் பதவி வேண்டுமென்றால், மன்னிப்புக் கோர வேண்டுமென்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்மை கேட்டதாக, இலங்கையின் முன்னாள் ராணுவத் தளபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

மாவனல்லை பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

ஓர் அமைச்சுப் பதவிக்காக ஜனாதிபதியிடம் தான் மன்னிப்புக் கோரப் போவதில்லை எனவும் இதன்போது அவர் தெரிவித்தார்.

பாம்பன் பாலத்துக்கு பதிலாக புதிய பாலம்

பட மூலாதாரம், prabhakaran sambandam

பாம்பன் பாலத்துக்கு பதிலாக 250 கோடி ரூபாயில் புதிய பாலம் கட்டப்படும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

ராமேஸ்வரத்துக்கு செல்லும் பாம்பன் ரெயில் பாலம், 1914ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 104 ஆண்டுகள் பழமையான இப்பாலம், 2006-ம் ஆண்டு அகல பாதையாக மாற்றப்பட்டது. இப்பாதையில் சென்னையில் இருந்தும், வடமாநிலங்களில் இருந்தும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன.

சமீபத்தில், பாம்பன் தூக்கு பாலத்தில் விரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து, ராமேசுவரத்துக்கு செல்ல வேண்டிய ரயில்கள், மண்டபத்துடன் நிறுத்தப்படுகின்றன.

இந்நிலையில், பாம்பன் பாலத்துக்கு பதிலாக புதிய ரயில் பாலம் கட்டப்படும் என்று ரயில்வே அமைச்சகம் நேற்று அறிவித்தது. பழைய பாலம் 104 ஆண்டுகள் பழையதாக இருப்பதாலும், தூக்கு பாலத்தில் விரிசல் விழுந்திருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வாஜ்பேயி உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம்

பட மூலாதாரம், Twitter

முன்னாள் பிரதமர் வாஜ்பேயி பிறந்த நாள், இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட உள்ள நிலையில், அவரது நினைவைப் போற்றும் விதமாக சிறப்பு நாணயத்தை பிரதமர் நரேந்திர மோதி நேற்று வெளியிட்டார்.

மறைந்த பிரதமர் வாஜ்பேயிக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் வெளியிட மத்திய அரசு முடிவு செய்தது. 35 கிராம் எடை கொண்ட இந்த நாணயத்தின் ஒரு பக்கத்தில் வாஜ்பேயியின் உருவம் பதிக்கப்பட்டுள்ளது. அவரது உருவத்துக்கு கீழ் அவரது பெயர் ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் அருகில் வாஜ்பேயி வாழ்ந்த காலமான 1924-2018 என்றும் பொறிக்கப்பட்டுள்ளது. நாணயத்தின் மற்றொரு பக்கத்தில் அசோக சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. சிங்கமுகம் கொண்ட அந்த சின்னத்தின் மத்தியில் "சத்தியமேவ ஜெயதே" என்று பொறிக்கப்பட்டுள்ளது. அதற்கு கீழ் 100 ரூபாய் என்று பொறிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: