டொனால்டு டிரம்ப் - மைய வங்கி மோதல்: அமெரிக்கப் பங்குச் சந்தையில் வரலாறு காணாத சரிவு

பெடரல் ரிசர்வின் தலைவ ஜெரோம் பொவவெலுடன் டிரம்ப்.

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்க அதிபர் டிரம்புக்கும், அந்நாட்டின் மைய வங்கியான ஃபெடரல் ரிசர்வுக்கும் இடையே நீடிக்கும் மோதலின் விளைவாக அமெரிக்க, ஐரோப்பிய, ஆசியப் பங்குச் சந்தைகள் பல சரிவைச் சந்தித்தன.

குறிப்பாக, கிறிஸ்துமஸ் காலத்தில் இதுவரை முன்னெப்போதும் இல்லாத வீழ்ச்சியை அமெரிக்கப் பங்குச் சந்தைகள் சந்திக்கின்றன. 30 முன்னணி நிறுவனங்களின் பங்குகளை உள்ளடக்கிய டொவ் ஜோன்ஸ் பங்குச் சந்தைக் குறியீட்டென் திங்கள்கிழமை 650 புள்ளிகள் வீழ்ந்தது. 1930-ம் ஆண்டு ஏற்பட்ட உலகப் பொருளாதாரப் பெருமந்தத்துக்குப் பிறகு அமெரிக்கப் பங்குச் சந்தைகளுக்கு இது மிக மோசமான டிசம்பராக உருவெடுக்க உள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பா, அமெரிக்காவில் உள்ள பல நிதிச் சந்தைகள் கிறிஸ்துமஸை ஒட்டி செவ்வாய்க்கிழமை மூடப்பட்டுள்ளன.

சீனாவில் ஷாங்காய் பங்குச் சந்தையின் ஒருங்கிணைந்த குறியீட்டென் செவ்வாய்க்கிழமை காலை 2 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. ஜப்பானின் முக்கிய பங்குச்சந்தை குறியீட்டென் நிக்கெய் 5 சதவீதம் வீழ்ச்சியடைந்தது.

ஃபெடரல் ரிசர்வ்- டிரம்ப் மோதல், அமெரிக்க அரசுச் செயல்பாடுகள் முடக்கம் ஆகியவை முதலீட்டாளர்களை கவலை கொள்ளச்செய்துள்ளன.

அமெரிக்கச் சந்தையில் ஏற்படும் அசைவுகளுக்கு ஏற்ப ஆசியச் சந்தைகள் ஆடுவதாக நம்பப்படுவதும், அதையொட்டி கவலை கொண்ட முதலீட்டாளர்கள் பங்குகளை விற்க முனைவதும் இந்தச் சரிவுகளுக்குக் காரணம்.

அமெரிக்க - சீன வர்த்தக உறவில் நீடிக்கும் பதற்றமும், ஃபெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பொவெல்-லைப் பதவி நீக்கம் செய்ய டிரம்ப் ஆலோசிப்பதாக வெளியாகும் செய்திகளும் இந்தப் பதற்றத்துக்கும், அதை ஒட்டிய பங்குச்சந்தை வீழ்ச்சிக்கும் காரணம்.

பங்குச் சந்தைகள் தொடர்ந்து வீழ்ச்சியடைந்ததை ஒட்டி நாட்டின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ்தான் அமெரிக்கப் பொருளாதாரத்தின் ஒரே பிரச்சனை என்று டிரம்ப் டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.

அவர் அதிபரான பிறகு முதல் ஆண்டில் பங்குச் சந்தை கிடுகிடுவென உயர்ந்ததற்கு தாமே காரணம் என்பதாக டிரம்ப் சித்திரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: