அமெரிக்கா: வாழ்வுதேடி வந்த இடத்தில் செத்து மடிந்த குழந்தைகள்

அமெரிக்காவின் தடுப்புக் காவலில் சிறுவன் உயிரிழப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

தங்கள் குடும்பத்துடன் மத்திய அமெரிக்காவிலிருந்து வெளியேறி தஞ்சம் கோரியுள்ள குழந்தை ஒன்று. (கோப்புப்படம்)

அமெரிக்க எல்லையை நோக்கி படையெடுத்துள்ள ஆயிரக்கணக்கான அகதிகளில், அந்நாட்டு அரசின் தடுப்புக் காவலில் இருந்த குவாட்டமாலாவை சேர்ந்த எட்டு வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.

அந்தச் சிறுவனின் பெயர் ஃபெலிப் அலோன்சோ-கோமேஸ் என்று டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.

மெக்சிகோ வழியாக அமெரிக்க எல்லைக்குள் நுழைந்ததாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட குடியேறிகளின் குழந்தை உயிரிழப்பது இந்த மாதத்தில் இது இரண்டாவது சம்பவமாகும்.

இதற்கு முன்பு அதே குவாட்டமாலாவை சேர்ந்த ஏழு வயது சிறுமியொருவர் அமெரிக்க அரசின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலில் உயிரிழந்த சிறுமி தனது குடும்பத்தினருடன் மெக்சிகோ வழியாக அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு முயற்சித்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜாக்கெலின் கால் என்ற குவாட்டமாலாவை சேர்ந்த சிறுமி கல்லீரல் செயலிழப்பால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இருந்தபோதிலும், அந்த குழந்தை போதிய நீர் இன்றி, நீர்ச்சத்துகளை இழந்ததால் ஏற்பட்ட உடல் வறட்சி மற்றும் அதிர்ச்சியின் காரணமாக உயிரிழந்ததாக வாஷிங்டன் போஸ்ட் செய்தித்தாள் செய்தி வெளியிட்டது.

அந்த சிறுமி பல நாட்களாக உணவு, தண்ணீர் இல்லாமல் தவித்ததாக அமெரிக்க எல்லைப்பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

மத்திய அமெரிக்க நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் தங்களது உயிர்களை பணயம் வைத்து அமெரிக்க எல்லையை நோக்கி பயணித்து வருகின்றனர்.

பெரும்பாலும் குவாட்டமாலா, ஹோண்டுராஸ், எல் சால்வடோர் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் தங்களில் நாடுகளில் நிலவும் துன்புறுத்தல், வறுமை மற்றும் வன்முறை போன்றவற்றிலிருந்து தப்பிப்பதற்காக அமெரிக்காவில் அடைக்கலம் கோரி வருவதாக தெரிவிக்கின்றனர்.

அமெரிக்காவிற்குள் நுழைய முற்பட்டால் கைது, வழக்கு மற்றும் நாடு கடத்தல் போன்றவற்றை சந்திக்க நேரிடும் என்று அந்நாட்டு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்த பின்னரும் கூட ஆயிரக்கணக்கான அகதிகள் எல்லைப்பகுதியில் குழுமிய வண்ணம் உள்ளனர்.

என்ன நடந்தது?

நேற்று நள்ளிரவு (செவ்வாய்க்கிழமை) நேரத்தில் அந்த எட்டு வயது சிறுவன் உயிரிழந்ததாக அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது.

உயிரிழந்த சிறுவனுக்கு திங்கட்கிழமை முதலே கடும் உடல்நலக் குறைவோடு காணப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து, நியூ மெக்சிகோ பகுதியிலுள்ள மருத்துவமனை ஒன்றிற்கு அந்த சிறுவனும், அவனது தந்தையும் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த சிறுவனுக்கு தக்க மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு திங்கட்கிழமை மதியம் திரும்ப அனுப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பட மூலாதாரம், Reuters

பிறகு தொடர் வாந்தியால் அவதிப்பட்ட சிறுவன் திங்கட்கிழமை மாலை அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே உயிரிழந்ததாக அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்புப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவன் உயிரிழந்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் இதுகுறித்து அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் மற்றும் குவாட்டமாலா அரசாங்கத்துக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜாக்கெலின் கால் உயிரிழந்தது எப்படி?

டிசம்பர் 6 தேதி அமெரிக்க எல்லையை சட்டபூர்வமற்ற முறையில் கடந்த ஜாக்கெலின் கால் என்ற அந்த சிறுமியும் அவரது தந்தையும் தடுத்து வைக்கப்பட்டதாக அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு சேவை தெரிவிக்கிறது.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு,

ஜாக்கெலின் கால்

அதன்பின் செய்யப்பட்ட பரிசோதனையில், இந்த சிறுமிக்கு உடல்நல பிரச்சனைகள் எதுவும் இருக்கவில்லை.

94 மைல் (151 கி.மீ) தொலைவிலுள்ள எல்லை பாதுகாப்பு நிலையத்திற்கு பேருந்தில் அனுப்பப்படும் வரை உணவு, நீர் மற்றும் கழிவறை வசதிகள் இருந்த ஓர் இடத்தில்தான் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆனால், பேருந்தில் இருந்தபோதே இந்த சிறுமி வாந்தி எடுக்க தொடங்கினார் என்று கூறுகின்ற அதிகாரிகள் பின்னர் சிறுமி இறந்து விட்டார் என்று தெரிவித்துள்ளனர். எல்லை பாதுகாப்பு நிலையத்தை இந்த பேருந்து சென்றடைந்தவுடன் அவசர மருத்துவ சிகிச்சைகள் அவருக்கு வழங்கப்பட்டன.

எல் பாசோவிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் இருமுறை அவருக்கு நினைவு திரும்பியது என்று மத்திய எல்லை பாதுகாப்பு படை தெரிவித்தது.

இதயத்தின் இயக்கம் நின்றுவிட்டதால் இந்த சிறுமி இறந்துவிட்டதாக கூறியுள்ள மத்திய எல்லை பாதுகாப்பு படை, மூளையில் வீக்கம் மற்றும் நுரையீரல் செயலிழப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டதாக கூறியது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: