வணிகரீதியில் திமிங்கில வேட்டையைத் தொடங்கும் ஜப்பான் - உயிரினப் பாதுகாவலர்கள் கவலை

திமிங்கிலம்

பட மூலாதாரம், Getty Images

வணிக ரீதியில் திமிங்கிலங்களை வேட்டையாடுவதை ஜூலை மாதம் முதல் தொடங்க இருப்பதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. முன்னதாக வணிக ரீதியில் திமிங்கிலங்களைப் பிடிப்பதை தடை செய்துள்ள சர்வதேச திமிங்கிலப் பிடிப்பு ஆணையத்தில் இருந்து ஜப்பான் வெளியேறியது.

திமிங்கிலங்களைப் பாதுகாப்பதே சர்வதேச திமிங்கிலப் பிடிப்பு ஆணையத்தின் நோக்கம். சில திமிங்கில இனங்கள் கிட்டத்தட்ட முற்றிலும் அழியும் நிலைக்கு வந்தவுடன், வணிக ரீதியில் திமிங்கிலங்களைப் பிடிப்பதை 1986-ம் ஆண்டு தடை செய்தது இந்த ஆணையம்.

1951-ம் ஆண்டில் இருந்து ஜப்பான் இந்த ஆணையத்தின் உறுப்பினராக இருந்துவந்தது. இந்நிலையில், இந்த ஆணையத்தின் உறுப்பினரான ஜப்பான் அதிகாரி ஒருவர் திமிங்கிலங்களை உண்பது ஜப்பான் பண்பாட்டின் ஓர் பகுதி என்று தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகளாக அறிவியல் ஆராய்ச்சிக்கு என்று திமிங்கிலங்களைப் பிடித்த ஜப்பான் அவற்றின் இறைச்சியை விற்றும்வந்தது. இந்த செயலை உயிரினப் பாதுகாவலர்கள் பரவலாக விமர்சித்துவந்தனர்.

வணிக ரீதியில் திமிங்கிலங்களைப் பிடிக்கப்போவதாக ஜப்பான் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு சில நாள்களாகவே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதனால் மோசமான பின் விளைவுகள் இருக்கும் என்று சர்வதேச உயிரினப் பாதுகாப்பு அமைப்புகள் எச்சரிக்கின்றன.

ஜப்பான் அறிவித்தது என்ன?

ஜப்பான் அரசு செய்தித் தொடர்பாளர் யோஷிஹிடே சுகா புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் வணிகரீதியான திமிங்கிலப் பிடிப்பு ஜப்பானின் தேசிய கடற்பரப்பிலும், பொருளாதார மண்டலங்களிலும் மட்டுமே நடக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இதன் விளைவாக, அண்டார்க்டிக் பகுதியிலும், தென் கோளப் பரப்பிலும் திமிங்கில வேட்டையாடுவதை ஜப்பான் நிறுத்திக்கொள்ளும். இதனை ஜப்பான் உறுதிப்படுத்தும் முன்பாகவே, இத்தகைய நிலைப்பாட்டை உயிரினப் பாதுகாப்பாளர்கள் வரவேற்றனர்.

பட மூலாதாரம், Getty Images

சர்வதேச திமிங்கிலப் பிடிப்பு ஆணையம் திமிங்கிலங்களின் எண்ணிக்கையை பாதுகாப்பது என்ற ஒரே இலக்கில் மட்டுமே குறியாக இருப்பதாகவும், அதன் மற்றொரு இலக்கான நீடித்த நிலைத்த வணிகரீதியிலான திமிங்கிலப் பிடிப்பு நடவடிக்கைகளை ஆதரிப்பது என்பதற்கு அது போதிய கவனம் செலுத்தவில்லை என்றும் ஜப்பான் அரசின் அறிக்கை தெரிவித்துள்ளது.

பல ஜப்பான் கடலோர சமூகங்கள் பல நூற்றாண்டுகளாக திமிங்கிலங்களை வேட்டையாடி வந்தன. ஆனால், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு திமிங்கில இறைச்சியை உண்பது அதிகரித்தது. ஏனெனில் அதுதான் அகப்பட்ட முக்கிய உணவாக இருந்தது. ஆனால் சமீபத்திய பதிற்றாண்டுகளில் திமிங்கில இறைச்சியை உண்பது குறைந்துள்ளது.

ஜப்பானின் ஆஷாய் செய்தித்தாளின் கூற்றுப்படி, ஜப்பானில் விற்பனையாகும் எல்லா இறைச்சிகளிலும், திமிங்கில இறைச்சி 0.1 சதவீதம்தான்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: