தாய்லாந்து குகை மீட்பு: சிறுவர்களை மீட்ட பின்னர் அங்கு என்ன நிலைமை?

12 சிறுவர்கள் மற்றும் அவரது பயிற்சியாளர் தாய்லாந்து குகையில் சிக்கிய பின்னர் மீட்கப்பட்டனர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

12 சிறுவர்கள் மற்றும் அவரது பயிற்சியாளர் தாய்லாந்து குகையில் சிக்கிய பின்னர் மீட்கப்பட்டனர்

தாய்லாந்தின் குகையொன்றில் ஒரு சிறுவர் கால்பந்து அணியும் அதன் பயிற்சியாளரும் சிக்கிக்கொண்டதும் அவர்கள் வெற்றிகரமாக மீட்டெடுக்கப்ட்டதும் இந்த ஆண்டின் அதிமுக்கிய நிகழ்வுகளில் ஒன்று .

பிபிசியின் தென்கிழக்கு ஆசிய செய்தியாளர் ஜோனாதன் ஹெட், கடந்த ஜூலை மாதம் வைல்ட் போர் கால்பந்தாட்ட அணி வீரர்கள் சிக்கிக்கொண்ட வடக்கு தாய்லாந்தின் மா சய் மாவட்டத்துக்கு மீண்டும் திரும்பியிருக்கிறார். ஜோனாதன் தற்போது அங்குள்ள அங்குள்ள நிலைமை குறித்து விவரிக்கிறார்.

தாம் லுவாங் மலை குகைதான் இந்த ஆண்டு உலகிலேயே அதிகளவில் செய்திகளில் இடம் பிடித்த ஓர் இடமாக இருக்கிறது. இந்த ஆண்டின் ஜூன் ஜூலை மாதங்களில் 12 இளம் கால்பந்து வீரர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளர்கள் மரணத்தின் விளிம்பில் இருந்த நிலையில் அவர்களின் விதி மாறியது.

ஐந்து மாதங்களுக்கு பிறகு தாம் லுவாங் குகைதான் வடக்கு தாய்லாந்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட பகுதியாக விளங்குகிறது.

படக்குறிப்பு,

அர்ச்சாவின் மொபோவாக்கு ஆரஞ்சு விற்கிறார்

சரி, ஜூலை மாதத்துக்குச் செல்வோம். என்ன நடந்தது?

குகையினுள் தேங்கியிருந்த நீரை வெளியேற்ற ஒரு பெரும் முயற்சி எடுக்கப்பட்டது. அங்கிருக்கும் நீர் இயந்திரம் மூலம் உறிஞ்சப்பட்டு மலைக்கு வெளியே கொட்டப்பட்டது. மலையைச் சுற்றியிருந்த காய்கறி மற்றும் பழங்கள் பயிரிடப்பட்டிருந்த நிலம் அருவிபோல கொட்டிய நீரால் முழுவதுமாக நிரம்பி வெள்ளக்காடானது.

அங்கு வேளாண்மை செய்தவர்களில் அர்ச்சாவின் மொபோவாக்குவும் ஒருவர். அப்பகுதியில் வசிக்கும் பல்வேறு மலைவாழ் பழங்குடி சிறுபான்மையினரில் ஒன்றான அக்ஹா இனத்தைச் சேர்ந்தவர் இவர்.

அர்ச்சாவின் அன்னாசி பழங்களை பயிரிட்டிருந்தார். ஆனால் குகை நீரால் அவை பாதிக்கப்பட்டிருந்தது குறித்து புகார் சொல்லவில்லை. அதற்கு பதிலாக சிறிதுகாலம் விவசாயத்தை விட்டுவிட்டு, குகை நுழைவுவாயிலுக்குள் ராணுவம் தங்களது பொருள்களை எடுத்துச் செல்வதற்கு உதவும் பொருட்டு மூங்கில் அறுக்கும் தன்னார்வலராக ஆனார்.

அர்ச்சாவினின் நிலம் இன்னும் அன்னாசி பழம் பயிரிடுவதற்கு ஏற்ப தயாராகவில்லை. ஆனால், அர்ச்சாவின் தனது நிலத்துக்கு அருகேயுள்ள குகைக்குச் செல்லும் செப்பனிடப்பதாக சாலையில் பயணித்து அங்கே குகையை காண வரும் சுற்றுலாப்பயணிகளுக்காக ஆரஞ்சு பழங்களை விற்கிறார்.

ஆரஞ்சு பழத்தின் நிறைய லாபம் கிடைக்கிறது. அன்னாசிப்பழம் விற்றபோது இந்த அளவுக்கு பணம் கிடைக்கவில்லை என்கிறார் அர்ச்சாவின்.

பட மூலாதாரம், Getty Images

''இம்மீட்புப்பணி நடப்பதற்கு முன்னதாக இந்தப் பகுதி அமைதியாக இருக்கும். எப்போதாவதுதான் சில வெளிநாட்டவர்கள் குகையை சுற்றிப்பார்க்க வருவார்கள். ஆனால் தற்போது நிறைய பேர் வருகிறார்கள். என்னை போன்ற மலைவாழ் மக்களுக்கு பணம் சம்பாதிக்க முடிகிறது,'' என்றார் அர்ச்சாவின்.

இப்போது சாலையின் நுழைவு வாயிலில் நுகர்வோரை கூப்பிட்டு பூக்கள் விற்கிறார்கள் பூ வியாபாரிகள். உணவு விற்பவர்கள் பன்றிக் கறியை தயார் செய்து தருகிறார்கள் லாட்டரி டிக்கெட் கடைகள்கூட முளைத்துவிட்டன.

வனச் சரக அலுவலர் வழக்கமாக ஒரு பிளாஸ்டிக் நாற்காலியில் உட்கார்ந்து அங்கே சுற்றிப்பார்க்க வருபவர்களின் விவரங்களை பதிவு செய்வார். முன்பு ஒரு நாளைக்கு 10 அல்லது 20 என்ற எண்ணிக்கையில் இருந்த சுற்றுலாவாசிகளின் எண்ணிக்கை தற்போது ஆறாயிரத்தை தாண்டியுள்ளது.

சுற்றுலாவாசிகளில் பெரும்பாலானவர்கள் தாய்லாந்து வாசிகள். நாட்டின் அனைத்து மூலை முடுக்கில் இருந்தும் மீட்புப்பணி நடந்த இவ்விடத்தை பார்க்க வருகிறார்கள்.

ஒரு பத்திரிகை பதிப்பாளரும், டிவி பிரபலமுமான டெம்ரான் புட்டன் ''இப்போதைக்கு இந்த பிராந்தியத்தில் தாம் லுவாங்கைவிட எந்தவொரு சுற்றுலா தளமும் சுற்றுலாவாசிகளை அதிகளவில் ஈர்க்காது'' என்கிறார். ஜூன் மாதம் குகையில் சிறுவர்கள் சிக்கிக்கொண்ட செய்தி வெளியானபோது அவர் ஐரோப்பாவுக்கு பயணம் செய்துகொண்டிருந்தார். அங்கே இச்செய்திக்கு கிடைத்த முக்கியத்துவம் குறித்து ஆச்சர்யமடைந்ததாக தெரிவிக்கிறார்.

அந்த மலையில் என்னதான் இருக்கிறது எனும் எதிர்பார்ப்பு மட்டும் இவ்வளவு சுற்றுலாவாசிகளை ஈர்க்க காரணம் இல்லை. குகைகளுக்கு மேலேயுள்ள மலைத்தொடர் பகுதிக்கு ஒரு இளவரசியின் பெயர் (நேங் நோன்) வைக்கப்பட்டிருக்கிறது. முறையற்ற உறவு காரணமாக 'புராண' இளவரசி தற்கொலை செய்து கொண்டதாவும், அவர் படுத்திருக்கும் வடிவத்தில் மலைத்தொடர்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

படக்குறிப்பு,

தாய் லுவாங் குகை நுழைவு வாயில் மூடப்பட்டது

தாய்லாந்திகள் குகைகள் அனைத்துமே பாரம்பரியமாக மாய சக்திகள் நிறைந்த இடமாக பார்க்கப்படுகிறது. குகையின் நுழைவுவாயிலுக்கு அடுத்தபடியாக நேங் நோன் கோயில் இருக்கிறது. மக்கள் இங்கே வந்து பிராத்தனை செய்வது வழக்கம்.தற்போது வியக்கத்தக்க மீட்புப்பணி நடந்து முடிந்த நிலையில் இந்த இளவரசிக்கு அதிக மாய சக்தி இருப்பதாக நம்பிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் அதிர்ஷ்ட தேவதையாகவும் பார்க்கிறார்கள். இதன் காரணமாக கோயிலுக்கும் அநேகம் பேர் வருகிறார்கள்.

இங்கு வரும் ஒவ்வொருவரையும் நான் பார்த்தபோது, அவர்களின் கையில் பூக்கள் இருந்தன. அவர்கள் கோயிலில் சிறிது நேரம் பிராத்தனை செய்கிறார்கள். லாட்டரி டிக்கெட் வாங்க அதிர்ஷ்டமிக்க இடமாக கருதுகிறார்கள். குகைக்குள் இருந்த சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் எண்ணிக்கை 13 என்பதால் லாட்டரி வாங்குவதற்கு பதின்மூன்றில் முடியும் எண்ணை அதிர்ஷ்டமிக்க ஒன்றாக பார்க்கிறார்கள்.

இப்போது அங்கே இன்னொரு கோயிலும் கட்டப்பட்டிருக்கிறது. மூன்று மீட்டர் உயரமுள்ள சமன் குனனின் சிலை அங்கே உள்ளது. மீட்புப்பணியின் போது உயிரிழந்த தாய்லாந்து டைவர் இவர்.

ஜூன் ஜூலை மாதங்களில் மீட்புப்பணி நடக்கும்போது நாங்கள் நின்று கொண்டு செய்திகளை வெளியிட்ட சேற்று மணலில் இருந்த கார் பார்க்கிங் இடத்தில்தான் தற்போது அருங்காட்சியகம் அமைக்கப்பட்டிருக்கிறது.

குகையில் சிக்கிக்கொண்ட சிறுவர்கள் 17 நாள்கள் அங்கே மன உறுதியுடன் இருப்பதற்கு தியானப்பயிற்சியளித்து உதவியவர், அவர்களுடன் குகையில் சிக்கிய பயிற்சியாளர் எக்காபோல் சன்டாவாங்.

படக்குறிப்பு,

மீட்கப்பட்ட சிறுவர்கள் இம்மாத துவக்கத்தில் சமன் குணனுக்கு கட்டப்பட்ட நினைவக சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்

குகையில் இருந்து மீட்கப்பட்ட பயிற்சியாளரும், மாணவர்களும் அதன்பின்னர் ஒரே ஒரு முறை இங்கே வந்திருக்கிறார்கள்.

மீட்புப்பணியில் ஈடுபட்ட மிக்கோ பாசி எனும் மீட்புப்பணியாளரும் இங்கே வந்திருந்தார். பின்லாந்தைச் சேர்ந்த அந்த முக்குளிப்பவர்தான் இறுதிக்கட்ட மீட்புப்பணிக்குத் தேவையான பொருள்களை விநியோகித்தார்.

அமெரிக்கர் ஜோஷ் மோரிஸ் சியாங் மையில் மலையேற்ற பயிற்சிப்பள்ளியை நடத்தி வருகிறார். இவர் மேலும் அயல்நாட்டு முக்குளிப்பவர்கள் மற்றும் மூத்த தாய்லாந்து அதிகாரிகளுக்கு இணைப்புப்பாலமாக செயல்பட்டுவந்தார். மேலும் தாம் லுவாங் குகையை ஆராய பல வருடங்கள் செலவிட்டிருந்த, பிரிட்டனைச் சேர்ந்த குகையில் சிக்கியவர்களை மீட்கும் மீட்புபணியில் திறன் வாய்ந்த வீரரான வெர்ன் அன்ஸ்வொர்த்தும் இக்குகைக்கு மீண்டும் வருகை தந்திருக்கிறார்

12 சிறுவர்களும் மறுபடி கூடி தங்களை காப்பாற்றியவர்களை அணைத்துக்கொண்டனர்.

படக்குறிப்பு,

வைல்ட் போர்ஸ் பயிற்சியளர் எக்காபோல் சன்டவோங் மற்றும் மீட்புப்பணி வீரர் மிக்கோ பாசி டிசம்பர் மாத துவக்கத்தில் சந்தித்துக்கொண்டனர்

தாய்லாந்து அரசு இன்னமும் இச்சிறுவர்களை பாதுகாக்கிறது. பதின்வயது சிறுவர்கள் பொது இடங்களுக்குச் செல்லும்போது சிறுவர் நல அதிகாரிகள் உடனிருக்கிறார்கள். சிறுவர்களை யாராவது பேட்டி எடுக்க விரும்பினால் சில வாரங்கள் நீடிக்கக்கூடிய இரண்டு குழுக்களின் கடுமையான சோதனையை எதிர்கொள்ள வேண்டும்.

நான் வெர்ன் அன்ஸ்வொர்த்திடம் பேசினேன் '' என்னைப் பொறுத்தவரை அந்நிகழ்வு மிகவும் உணர்ச்சிகரமானது. பதிமூன்று போரையும் மீட்டது அசாதாரண ஒரு நிகழ்வு என சிலர் எண்ணுகிறார்கள் '' என்றார்.

'' வெளியுலகம் ஒரு மோசமான செய்தியை எதிர்பார்த்துக் காத்திருந்தது என நினைக்கிறேன். ஆனால் நாங்கள் நம்பிக்கையை விடவில்லை. முக்குளிப்பவர்கள் அப்போது செய்த பணி நம்பமுடியாத ஒரு பெருஞ்சாதனை. யாரும் அந்த சிறுவர்களையோ பயிற்சியாளரையோ ஏன் குகைக்குச் சென்றாய் என கேட்கக்கூடாது. அவர்கள் துரதிருஷ்டவசமாக மாட்டிக்கொண்டனர். அது எனக்கும் கூட நடந்திருக்கலாம்'' என்கிறார் வெர்ன் அன்ஸ்வொர்த்.

இந்த அனுபவம் சிறுவர்களின் வாழ்வை மாற்றிவிட்டதா? '' அவர்கள் ஒரு அற்புதமான குழு'' என பதிலளித்தார் வெர்ன். மேலும் தொடர்ந்தவர் '' அவர்கள் நன்றாக கவனித்துக் கொள்ளப்படுகிறார்கள். அவர்கள் ஒரு சாதாரண வாழ்வு வாழ்கிறார்கள் என சொல்லமாட்டேன். தற்போது அவர்கள் பள்ளியில் படிக்கிறார்கள்'' என்றார்.

குகையில் இருந்து மீட்கப்படுவதற்கு முன் எப்படியிருந்தார்களோ அதே போல வகுப்பு முடிந்ததும் கடுமையாக பயிற்சி மேற்கொள்கிறார்கள் அச்சிறுவர்கள் என்கிறார் அவர்களின் தலைமை பயிற்சியாளர் நோபோராட் கந்தவோங்.

''அவர்கள் இழந்த உடல் எடையை மீண்டும் பெற்றிருக்கிறார்கள். ஆனால் இன்னமும் இழந்த தசை வலிமையைப் பெற மெருகேற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவுவதற்கு பல குழுக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். மான்செஸ்டர் சிட்டி அணியைச் சேர்ந்த ஒரு பயிற்சியளிக்கும் குழு மலைப்பகுதி கால்பந்து ஆடுகளத்தில் பயிற்சி தந்ததாக கூறுகிறார்.

குறைந்தபட்சம் மூன்று சினிமாக்கள் இந்த மீட்புப்பணி குறித்து தயாராகிவருகிறது. முதலில் தயாராகும் சினிமாவின் பெயர் 'தி கேவ்'. இந்த திரைப்படத்திற்கு ஷூட்டிங் முடிந்துவிட்டது.

இக்குகைப்பகுதி தளமும் அருங்காட்சியகமும் மக்கள் இப்பகுதியை சுற்றியுள்ள நிலவியல் மற்றும் விலங்கினங்கள், தாவரங்கள் உள்ளிட்டவற்றை புரிந்துகொள்ள உதவும் என வெர்ன் மற்றும் மற்ற முக்குளிப்பவர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

மா சய் மாநகராட்சியின் தலைமை அலுவலர் சாம்சக் கனாக்கம் தாய்லாந்தின் மிகப்பெரிய ஏழ்மையான கிராமப்பகுதியில், இந்த குகையைச் சுற்றி உருவாகியுள்ள மினி சுற்றுலா ஆர்வத்தையம் அதனால் உண்டாகும் தொழில் வாய்ப்பு மற்றும் கூடுதல் வருமானத்தையும் வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த சூழ்நிலையை எப்படி மேற்கொண்டு பயன்படுத்திக்கொள்வது என்பதில் அவர் கவலைப்படுகிறார். இப்பகுதியில் உள்கட்டுமான வசதிகள் வேண்டும். அதன்மூலம் கூடுதலாக சுற்றுலாவாசிகளை ஈர்க்கமுடியும் என அவர் தெரிவிக்கிறார்.

இந்த பசுமையான மலைப்பகுதியில் மேற்கொண்டு வலுவான சுற்றுலா தளங்களை எப்படி உருவாக்கமுடிடியும் என்பதில் வெளியில் இருந்து ஆலோசனை கிடைக்கும் என அவர் நம்புகிறார்.

ஒரு கட்டத்தில், அட்டகாசமான இம்மீட்புப்பணி கிளப்பிய ஒரு உற்சாகம் குறையத்துவங்கும். அப்போது இங்கே வருபவர்களின் எண்ணிக்கையும் குறையக்கூடும் .

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: