அண்டார்டிகாவின் 1,482 கி.மீ தூரத்தை, கடுங்குளிரில் தனியாக கடந்த தடகள வீரர்

அண்டார்டிகாவின் 1,482 கி.மீ தூரத்தை தனியாக கடந்து அமெரிக்க வீரர் சாதனை

பட மூலாதாரம், COLIN O'BRADY

அமெரிக்காவை சேர்ந்த 33 வயதாகும் தடகள வீரரொருவர் தனியாக, எவ்வித உதவியுமின்றி அண்டார்டிகாவை கடந்த முதல் மனிதர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

தனக்கும் பிரிட்டனின் ராணுவ கேப்டனான 49 வயதாகும் லூயிஸ் ரூட்டுக்கும் இடையில் நடந்த கடுமையான போட்டியில் கொலின் ஓ'ப்ராடி வெற்றி பெற்றுள்ளார். தனது இலக்கை 53 நாட்களில் கொலின் அடைந்தார்.

இவருவருக்கிடையேயான போட்டி கடந்த நவம்பர் 3ஆம் தேதி தொடங்கியது. இதே பகுதியில் இதே மாதிரியான போட்டியில் ஈடுபட்ட பிரிட்டன் ராணுவத்தின் முன்னாள் அதிகாரி ஒருவர் இரண்டாண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பூமியில் மிகவும் குறைந்தபட்ச வெப்பநிலையும், அதிக ஆபத்துகளும் நிறைந்த அண்டார்டிகாவின் 1,482 கிலோமீட்டர் தூரத்தை இவர் 53 நாட்களில் கடந்துள்ளார்.

அடிப்படையில் தடகள வீரரான ஓ'ப்ராடி தனது சாதனை தருணங்களை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வருகிறார்.

"நான் முற்றிலும் சோர்வடைந்து இருந்தாலும், ஒவ்வொரு நாளும் சீரிய அளவில் என்னுடைய இலக்கை நோக்கி முன்னேறி வருகிறேன்" என்று கடந்த டிசம்பர் 20ஆம் தேதி, அதாவது தனது பயணத்தின் 47ஆவது நாளன்று பிபிசியிடம் செயற்கைகோள் அலைபேசியில் பேசியபோது கோலின் தெரிவித்தார்.

பட மூலாதாரம், COLIN O'BRADY

படக்குறிப்பு,

கொலின் ஓ'ப்ராடி

தனது பயணத்தின்போது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் அடர்ந்த பனிப்பொழிவு, மிகவும் குறைந்த அளவில் இருந்த புலப்பாடு ஆகியவற்றை எவ்வித பிரச்சனையுமின்றி கடந்ததாக கோலின் கூறுகிறார்.

"உலகின் மிகவும் குளிரான மற்றும் ஆபத்துகள் நிறைந்த பிராந்தியத்தில் ஒரு நாளைக்கு சுமார் 12-13 மணிநேரங்கள் 170 கிலோ எடை பனிச்சறுக்கு வாகனத்தை இயக்கினேன்" என்று கூறும் கோலின், தனது உடல் எடையை இழந்துவிட்டதாகவும், அதன் காரணமாக கைகள் மெலிந்து, கைக்கடிகாரம் கீழே விழுந்ததையும், தனது வெற்று உடலையும் கண்டு "பயந்ததாக" அவர் மேலும் கூறுகிறார்.

வேறுபட்ட பின்னணி; ஒரே இலக்கு

இரண்டு பேருமே அண்டார்டிகாவின் ரான் ஐஸ் ஷெல்ஃப் என்ற பகுதியிலிருந்து தங்களது பயணத்தை மோசமான வானிலையில் காரணமாக திட்டமிட்டதைவிட சில நாட்கள் தாமதமாக தொடங்கினர்.

பட மூலாதாரம், Getty Images

இந்த போட்டியை ஆரம்பிப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர்தான் இருவரும் சிலியிலுள்ள ஒரு உணவகத்தில் சந்தித்துக்கொண்டனர். பிறகு, தங்களின் தனிப்பட்ட சாகச பயணத்தை இருவருக்குமிடையிலான போட்டியாக மாற்றிக் கொண்டனர்.

இருப்பினும், இருவருமே முற்றிலும் வேறுபட்ட பின்னணியில் இருந்து வந்தவர்கள். குறிப்பாக, கடந்த 2008ஆம் ஆண்டு ஓ'ப்ராடி தாய்லாந்திற்கு சுற்றுலாவிற்கு சென்றிருந்தபோது, தீ விபத்தில் சிக்கியதால் உடல் முழுவதும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. உடலின் 25 சதவீத பகுதிகள் தீயினால் பாதிக்கப்பட்டதால் ஓ'ப்ராடி மீண்டும் சாதாரணமாக நடக்க முடியாமல் போகலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பட மூலாதாரம், BRITISH ARMY

படக்குறிப்பு,

லூயிஸ் ரூட்

ஆனால், விரைவிலேயே உடல்நிலை தேறிய ஓ'ப்ராடி உலகின் அனைத்து கண்டங்களிலும் உள்ள மிக உயர்ந்த சிகரங்களில் ஏறுவதற்கு முன்னர், பல்வேறு நாடுகளில் நடந்த டிரையத்லான் போட்டிகளில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சாகச பயணத்தை மேற்கொள்வதற்காகவே பிரிட்டன் ராணுவத்தை சேர்ந்த ரூட் பணி விடுப்பில் இருக்கிறார்.

அண்டார்டிகாவில் இதே பாதையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பயணத்தை மேற்கொண்டு உயிரிழந்த தனது சக ராணுவ வீரரான ஹென்றியை முன்மாதியாக கொண்டு ரூட் இந்த பயணத்துக்கு ஆயத்தமானார்.

தனது பயணத்தை முடிப்பதற்கு சுமார் 30 மைல் தூரத்தில் உயிரிழந்த ஹென்றியின் கொடியை சுமந்துகொண்டு தான் பயணிப்பது மிகவும் உணர்வுப்பூர்வமாக இருப்பதாக ரூட் கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: