டிரம்ப் - கிம் ஜாங் உன் சந்திப்பு: வட கொரிய சிக்கலின் சூட்டை தணித்த 2018-ம் ஆண்டு

  • அ.தா. பாலசுப்ரமணியன்
  • பிபிசி தமிழ்
கிம் ஜாங்-உன் - டொனால்டு டிரம்ப்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு,

கிம் ஜாங்-உன் - டொனால்டு டிரம்ப்.

வட கொரியா அடுத்தடுத்து நடத்திய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகள், அணு ஆயுத சோதனைகள், ஜப்பான் தலைக்குமேல் அது பறக்கவிட்ட சோதனை ஏவுகணைகள், ஒவ்வொரு சோதனைக்குப் பிறகும் அமெரிக்காவும், ஐ.நா.வும் விதித்த தடைகள் ஆகியவை 2018 பிறந்தபோது சர்வதேச அரசியலை சூடாக்கிவந்தன.

டிரம்பைப் பார்த்து வயதான பைத்தியம் என்றார் வடகொரியத் தலைவர் கிம். இதற்குப் பதிலடியாக குட்டி ராக்கெட் மனிதன் என்று அவரை கிண்டல் செய்தார் டிரம்ப். அத்துடன், உலகம் இதுவரை பார்த்திராதவகையில் தீயும் சினமும் கொண்டு வடகொரியாவைத் தாக்குவோம் என்றும் டிரம்ப் முழங்கினார்.

அணு ஆயுத வல்லமை மிக்க இந்த இரு நாட்டுத் தலைவர்கள் பயன்படுத்திய இந்த மொழி எல்லோரையும் பதறவைத்தது.

இந்நிலையில், உலக அளவில் தனிமைப்படுத்தப்பட்டு வந்த வடகொரியாவுக்கு, தனது பங்காளி நாடான தென்கொரியாவுடன் உறவை சீரமைக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தென் கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்க வடகொரியா சம்மதித்தது. மகிழ்ச்சியோடு தென்கொரியாவும் ஒப்புக்கொண்டது. பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ? இறுதியாக இரு நாடுகளும் அந்தப் போட்டியில் ஒரே கொடியின்கீழ் அணி வகுத்து செல்லும் அளவுக்கும், பனிச்சறுக்கில் ஒரே அணியாக பங்கேற்கும் அளவுக்கும் நெருங்கின.

பங்காளிகளாகப் பிரிந்த நாடுகள், அண்ணன் - தம்பியாகி இணைந்தது, அவர்களின் இரு தரப்பு உறவுகள் மேம்படுவதற்கு மட்டுமல்ல, அமெரிக்கா-வட கொரியா உறவின் பதற்றம் தணியவும் காரணமாக அமைந்தது. வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் அமெரிக்க அதிபர் டிரம்புடன் பேசத் தயாராக இருப்பதை முதலில் டிரம்பிடம் தெரிவித்து அதற்கு இசைவு பெற்றது தென்கொரியாதான். இதனை முதலில் வெளியில் அறிவித்ததும் தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன்தான்.

அதன் பிறகு வடகொரிய-தென் கொரிய உறவில் நிகழ்ந்ததைப் போலவே நம்ப முடியாத அதிசயங்கள் அமெரிக்க வடகொரிய உறவில் நிகழ்ந்தன.

பட மூலாதாரம், AFP

சில ஆரம்பகட்ட பின்னடைவுகளுக்குப் பிறகு டிரம்ப் - கிம் சந்திப்பு சிங்கப்பூரில் ஜூன் 12-ம் தேதி நடந்தேவிட்டது. வடகொரிய அதிபர் ஒருவரை நேரில் சந்தித்துப் பேசிய முதல் அமெரிக்க அதிபரானார் டிரம்ப்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சிங்கப்பூர் உச்சி மாநாட்டில் அணு ஆயுத ஒழிப்பு செய்ய வட கொரியா கொள்கை அளவில் ஒப்புக்கொண்டது. ஆனால், குறிப்பான உறுதி மொழிகள் எதையும் அது வழங்கவில்லை. ஆரம்பத்தில் இந்தப் பேச்சுவார்த்தையின் பலன் குறித்தும், வடகொரியாவின் நோக்கங்கள் குறித்தம் ஐயங்கள் நிலவின.

இதைப் போக்கும் வகையில், தமது அணு ஆயுத சோதனை தளம் ஒன்றை இடித்து நம்பிக்கையைப் பெற வட கொரியாவும் முயன்றது. இதைப் போல நம்பிக்கை அளிக்கும் நடவடிக்கைகளை, குறிப்பாக, தடை நீக்கம் ஆகியவற்றின் மூலம் அமெரிக்காவும் முன்னெடுக்கவேண்டும் என்று வட கொரியா விரும்பியது.

ஒலி& ஒளி வடிவில் இந்த செய்தி:

ஆனால், இந்தப் பேச்சுவார்த்தை ஒரு நல்லெண்ண உணர்வைத் தோற்றுவித்துப் பதற்றத்தைத் தணித்தாலும், அந்த முயற்சி அத்துடன் தேங்கிப்போனது.

இந்நிலையில், அதிநவீன ஆயுதம் ஒன்றை வடகொரியா சோதனை செய்ததாகவும் அதை அந்நாட்டுத் தலைவர் கிம் ஜோங் உன் மேற்பார்வையிட்டதாகவும் வட கொரிய அரசு ஊடகம் 2018 நவம்பரில் செய்தி வெளியிட்டது.

பட மூலாதாரம், THE BLUE HOUSE/TWITTER

2017 நவம்பரில் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஹ்வாசாங்-15 ஏவுகணையை சோதித்த பிறகு வட கொரியா மேற்கொண்டதாக அறிவித்த முதல் ஆயுத சோதனை அது.

இதனிடையே, வடகொரிய அமைச்சர் ஒருவர் உள்ளிட்ட 3 உயரதிகாரிகளுக்கு அமெரிக்கா தடை விதித்தது. புதிய தடைகளும் விதிக்கப்பட்டன. இதனால், வட கொரியா வருத்தப்பட்டதுடன், சிங்கப்பூர் உச்சிமாநாட்டுக்குப் பிறகு நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகள் தொடர்ந்திருக்கவேண்டும் என்று கருத்துத் தெரிவித்தது.

இந்நிலையில், இரண்டாவது முறை டிரம்பும்-கிம்மும் சந்திக்கப்போவதாக வெளியான முன்மொழிவுகள் என்னவாகும், அணு ஆயுத வல்லமை பொருந்திய இரு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை முயற்சிகள் என்னவாகும் என்பது குறித்த எந்த நிச்சயமுமில்லாமல் 2019-க்குள் உலகம் நுழைகிறது. ஆனால், வட-தென் கொரிய சகோதர நாடுகளின் உறவில் பாரதூரமான முன்னேற்றம் ஒவ்வொரு நாளும் ஏற்பட்டபடியே உள்ளது. 2018-ம் ஆண்டு உலக அரசியலுக்கு வழங்கிய மிக அரிதான ஆறுதல் இது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: