நெல், கோதுமை விளைச்சலை அச்சுறுத்தும் பருவநிலை மாற்றம்: இறுதி எச்சரிக்கை விடுத்த 2018

  • அ.தா.பாலசுப்ரமணியன்
  • பிபிசி தமிழ்
பருவநிலை மாற்றம்.

பட மூலாதாரம், Getty Images

2018-ம் ஆண்டில் உலகின் மீது மிகப் பெரிய தாக்கம் செலுத்திய ஐந்து முக்கிய நிகழ்வுகளை புரிந்துகொள்ளும் வகையில் அதன் பின்னணித் தகவல்களோடு வழங்குகிறோம்.

புவியை உயிர்க் கோளாகப் பாதுகாக்க இறுதி எச்சரிக்கை விடுத்த 2018

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான சர்வதேச அமைப்பான 'பருவநிலை மாற்றம் தொடர்பான அரசுகளிடை குழு' ஓர் சிறப்பு அறிக்கையை 2018 அக்டோபரில் வெளியிட்டது.

தொழிற்புரட்சிக்கு முன்பு இருந்ததைவிட புவியின் சராசரி வெப்பநிலை தற்போது 1 டிகிரி செல்ஷியஸ் கூடியுள்ள நிலையில், இது 1.5 டிகிரிக்கு மிகாமல் பாதுகாக்கவேண்டும் என்று இந்த சிறப்பு அறிக்கை இலக்கு நிர்ணயித்தது. ஆனால், 3 டிகிரி உயர்வை நோக்கி புவியின் வெப்பநிலை செல்லும் நிலையில் இந்த இலக்கை அடைவதற்கு, பாரதூரமான, முன்னெப்போதும் இல்லாத வகையிலான மாற்றங்களை சமூகத்தின் எல்லா அம்சங்களிலும் கொண்டுவரவேண்டும்.

இந்த மாற்றங்களை கொண்டுவருவதற்கு 2035க்குள் 2.4 டிரில்லியன் அமெரக்க டாலர் அளவுக்கு செலவாகும் என்கிறது இந்த அறிக்கை.

பட மூலாதாரம், Getty Images

குறுகிய காலத்தில் பார்த்தால் இது பெரிய தொகை. ஆனால், இந்த நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் கரியமில வாயுவை சூழலில் இருந்து நீக்கம் செய்தே ஆகவேண்டிய நிலை ஏற்படும்போது ஆகும் செலவை ஒப்பிட்டால் தற்போதைய செலவு மதிப்பீடு மிகவும் மலிவானது என்கிறார் பிரிட்டனின் முன்னாள் ஐ.பி.சி.சி. பேச்சுவார்த்தையாளர் ஸ்டீஃபன் கார்னீலியஸ்.

அரிசி, கோதுமை விளைச்சலைப் பாதிக்கும்

ஒருவேளை 1.5 டிகிரி செல்சியஸ் உயர்வுக்குள் கட்டுப்படுத்த முடியாமல் வெப்பநிலை உயர்வு 2 டிகிரி அளவுக்கு செல்லுமானால், கடலடி பவழப்பாறைகள் முற்றிலும் அழியும். உலக கடல் மட்டம் 10 செ.மீ. உயரும். 1 கோடி பேர் கூடுதலாக வெள்ளப் பாதிப்பை எதிர்கொள்ளும் நிலை ஏற்படும்.

கடல் வெப்பநிலை, கடல் அமிலத்தன்மை வெகுவாக அதிகரிக்கும், அரிசி, கோதுமை, சோளம் ஆகியவற்றை விளைவிக்கும் திறன் பாதிக்கப்படும். ஏற்கெனவே நாம் வந்தடைந்துள்ள, 1 டிகிரி வெப்பநிலை அதிகரிப்பு என்பதே அபாய கட்டம்தான் என இந்த அறிக்கையைத் தயாரித்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

3 ஆண்டு ஆய்வுக்குப் பிறகு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது. புவி உயிர்க்கோளாக நீடிக்கவேண்டுமானால் என்ன செய்யவேண்டும் என்பது குறித்து விடுக்கப்பட்ட இறுதி எச்சரிக்கையாக இந்த அறிக்கை பார்க்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, பருவநிலை மாற்ற இலக்குகளை அடைவது தொடர்பாக நடைமுறை செயல்திட்டங்களை வகுப்பதற்காக போலந்தில் 2018ல் மிகப்பெரிய உலக நாடுகள் பங்கேற்ற மாநாடு நடைபெற்றது.

தாய்லாந்து குகை மீட்பு

தாய்லாந்தின் சியாங் ராய் மாகாணத்தில், ஒரு சிறுவர் கால்பந்து அணியைச் சேர்ந்த 12 வீரர்களும் அவர்களது பயிற்சியாளரும் மிக நீண்ட, ஆழமான தாம் லுவாங் குகைக்குள் ஜூன் 23-ம் தேதி சாகச பயணம் மேற்கொண்டனர்.

பட மூலாதாரம், Getty Images

அப்போது அந்த குகை இருக்கும் காட்டுப் பகுதியில் மிக பலத்த மழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்தது. வெள்ளம் குகைக்குள் பாய்ந்ததில் கால்பந்து அணியினர் 13 பேரும் அந்த ஆபத்தான குகையில் 1 கி.மீ. ஆழத்தில் சிக்கிக்கொண்டனர்.

கடற்படை வீரர்கள் ஆபத்தான தேடுதல் பணியை மேற்கொண்டு 9 நாள்கள் கழித்து அவர்கள் இருக்கும் இடத்தைக் கண்டறிந்தனர். வெள்ளம் உடனடியாக வடியும் நிலை இல்லாததால், பிரிட்டன் குகை மீட்புப் வீரர்கள், தாய்லாந்து கடற்படை முக்குளிப்பு வீரர்கள் ஆகியோர் குகைக்குள் சாகசப் பயணம் மேற்கொண்டு, தொலைந்துபோன 18-வது நாளில் மீட்புப் பணியை வெற்றிகரமாக முடித்தனர்.

இதைப் பற்றி விரிவாகப் படிக்க:

இதற்கிடையில் குகைக்குள்ளே சிக்கிக்கொண்டவர்களுக்கு உணவு, மருந்து, ஆக்சிஜன் ஆகியவற்றை கொண்டு செல்லும் இன்றியமையாத பணியை முக்குளிப்பு வீரர்கள் மேற்கொண்டனர். இவர்களில் ஆக்சிஜன் சிலிண்டர்களை சுமந்து சென்ற சமன் குணன் என்பவரது சொந்த ஆக்ஸிஜன் குடுவையில் வாயு தீர்ந்து அவர் இறந்து போனார். சாகசம், சிக்கலான மீட்பினை நிகழ்த்தும் மனித வல்லமை, குகைக்குள் சிக்கியோருக்குத் துடித்த மனிதாபிமான உணர்வு ஆகியவை சம்பவத்தின் மறக்கவியலாத நினைவுகளாயின.

அமெரிக்கா -செளதி உறவுக்கு நெருக்குதலை தந்த கஷோக்ஜி மரணம்

சௌதி அரேபிய அரசை விமர்சித்துவந்த அந்நாட்டின் முக்கியப் பத்திரிகையாளரும், அமெரிக்காவில் வசித்துவந்தவருமான ஜமால் கஷோக்ஜி துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் உள்ள சௌதி துணைத் தூதரகத்தில் கொலை செய்யப்பட்டார்.

பட மூலாதாரம், EPA

தமது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு துருக்கி நாட்டுப் பெண் ஒருவரைத் திருமணம் செய்துகொள்ள விரும்பிய கஷோக்ஜி, அதற்கான ஆவணங்களைப் பெறுவதற்காக சௌதி துணைத் தூதரகத்துக்கு அக்டோபர் 2-ம் தேதி சென்றார். அவருடன் சென்று தூதரகத்துக்கு வெளியே காத்திருந்த அவர் திருமணம் செய்துகொள்ளவிருந்த பெண் ஹேட்டிஸ் சென்ஜிஸ், கஷோக்ஜி திரும்பி வரவேயில்லை என்றார்.

முதலில் கஷோக்ஜி தூதரகத்துக்கு வந்து வேலையை முடித்துவிட்டுத் திரும்பிவிட்டதாக கூறி சாதித்தது சௌதி. ஆனால், தூதரகத்துக்குள் கஷோக்ஜி கொலை செய்யப்பட்டுவிட்டதாகவும், அது தொடர்பான ஆடியோ பதிவு தங்களிடம் இருப்பதாகவும் துருக்கி கூறியது. பிறகு தூதரகத்தில் ஏற்பட்ட கைகலப்பில் கஷோக்ஜி இறந்துவிட்டதாக கூறிய சௌதி, இறுதியாக அவர் கொலை செய்யப்பட்டதாக ஒப்புக்கொண்டது. ஆனால், இந்தக் கொலைக்கும் அந்நாட்டு பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கும் தொடர்பு உண்டு என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. இளவரசருக்கு இதில் தொடர்பு இல்லை என்று சௌதி மறுக்கிறது. இந்த விவகாரம் சௌதிக்கு மிகப்பெரிய சர்வதேச அழுத்தத்தை உண்டாக்கியுள்ளது. முக்கியமாக, சௌதியின் மிக முக்கியக் கூட்டாளியான அமெரிக்காவுக்கு சௌதியின் நட்பு குறித்து மிகப்பெரிய அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

"ஏமன் போரில் 85 ஆயிரம் குழந்தைகள் பலி"- ஆதி முதல் நடப்பது என்ன?

ஏமன் நாட்டை நீண்ட காலம் ஆண்ட எதேச்சதிகார அதிபர் அலி அப்துல்லா சாலே, அரபு வசந்த எழுச்சியின்போது, 2011-ம் ஆண்டு, அதிகாரத்தை துணை அதிபர் அப்தரபு மன்சூர் ஹாதியிடம் தரவேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளானார்.

அதிபரான ஹாதி, ஜிகாதிகளின் தாக்குதல், நாட்டின் தெற்குப் பகுதியில் தோன்றிய பிரிவினைவாத இயக்கம், பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து சாலாவுக்கு விஸ்வாசமாக இருந்தது, வேலையில்லாத் திண்டாட்டம், ஊழல், உணவுப் பாதுகாப்பு போன்ற பல பிரச்சனைகளை ஒரே நேரத்தில் சமாளிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.

பட மூலாதாரம், Getty Images

இந்நிலையில், ஏமன் நாட்டின் ஜைதி ஷியா முஸ்லிம்களுக்காக, முந்தைய சாலாவின் ஆட்சியில் பல கிளர்ச்சிகளை செய்துவந்த ஹூதி இயக்கம், புதிய அதிபரின் பலவீனத்தை சாதகமாக்கிக்கொண்டு தங்களுக்கு முக்கியத்துவம்வாய்ந்த நாட்டின் வடக்கிலுள்ள 'சாதா' பகுதியையும், சுற்றியுள்ள பகுதியையும் கைப்பற்றினார்கள். ஆரம்பத்தில் சுன்னி முஸ்லிம்கள் உள்ளிட்ட பல ஏமன் மக்கள் இவர்களை ஆதரித்தனர். 2015ல் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தலைநகர் சானாவை கைப்பற்றினர். இந்நிலையில் ஹூதிகளும், சாலாவுக்கு உண்மையாக இருந்த பாதுகாப்புப் படையினரும் நாட்டை தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர முயன்ற நிலையில் ஹாதி 2015ல் நாட்டை விட்டு தப்பியோடினார்.

இந்த நிலையில் மத்திய கிழக்கில் உள்ள முக்கிய ஷியா முஸ்லிம் நாடான இரானிடம் இருந்து ராணுவ உதவிகளை ஹூதிகள் பெறுகிறார்கள் என்ற ஐயத்தின் அடிப்படையில் சுன்னி முஸ்லிம் நாடான சௌதி அரேபியாவும், வேறு 8 பெரும்பான்மை சுன்னி முஸ்லிம் அரபு நாடுகளும் ஹாதியின் ஆட்சியைத் திரும்பக் கொண்டுவருவதற்காக ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக விமானத் தாக்குதலைத் தொடங்கினர். இவர்களுக்கு அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் உதவியளிக்கின்றன.

நாட்டுக்கு முக்கியமாகத் தேவைப்படும் பொருள்களை இறக்குமதி செய்துகொள்வதற்கு நுழைவாயிலாகப் பயன்படும் ஹுடைடா துறைமுகத்தை ஹூதிகளின் கட்டுப்பாட்டில் இருந்து மீட்பதற்கான சண்டை கடுமையாக நடக்கும் நிலையில், உணவு, மருந்து போன்ற இன்றியமையாத பொருள்களுக்கு நாட்டில் தட்டுப்பாட்டு ஏற்பட்டு 1.3 கோடி மக்கள் பஞ்சத்தை எதிர்கொண்டிருப்பதாக ஐ.நா. கூறியது.

'சேவ் சில்ட்ரன்' என்ற தன்னார்வ அமைப்பு, இந்தப் போரினால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு மூன்றாண்டுகளில் 5 வயதுக்கு குறைவான 85 ஆயிரம் குழந்தைகள் இறந்ததாக 2018ல் கூறியது.

நூறாண்டுகளின் மோசமான பஞ்சம் என்று ஐ.நா. வருணித்த இந்த மனிதாபிமான சிக்கலை எதிர்கொள்ளும் வகையில் போர் நிறுத்தத்தை கொண்டுவர 2018 டிசம்பரில் ஐ.நா. மேற்கொண்ட முயற்சி வெற்றி பெறவில்லை.

வட கொரியா - அமெரிக்கா: குளிர்ந்த உறவு

வட கொரியா நடத்திய அணு ஆயுத, ஏவுகணை சோதனைகள், அதைத் தொடர்ந்து அமெரிக்காவும், ஐ.நா.வும் விதித்த தடைகள், பரஸ்பரம் வசைகள் என்று சூடாகிக் கிடந்த அமெரிக்க - வட கொரிய உறவு 2018-ல் சீரடைந்தது.

பட மூலாதாரம், Getty Images

தென்கொரியா செய்த முன் முயற்சியால் எலியும் - பூனையுமாக சித்திரிப்புக்கு உள்ளான டிரம்பும் - கிம்மும் இந்த ஆண்டு ஜூன் 12-ம் தேதி சிங்கப்பூரில் நேரில் சந்தித்துப் பேசி கைகுலுக்கினர். அவர்களது பேச்சுவார்த்தை பெரிய விளைவுகளை ஏற்படுத்தவில்லை என்றபோதும், இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் தணிந்தது. இது தவிர, பங்காளி நாடுகளான வட-தென் கொரியாக்களிடையே ஒரு நேசம் துளிர்த்து, கொரிய தீபகற்பம் பதற்றத்தில் இருந்து விடுபட்டது. இது பற்றி விரிவாகப் படிக்க...

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: