சிரியா போர்: முக்கிய நகருக்குள் நுழைந்தன அரசு ஆதரவு படைகள்

மன்பிஜ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

மன்பிஜ்

சிரியா அரசின் ஆதரவுப் படைகள், நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள மன்பிஜ் நகரில் நுழைந்துவிட்டன. ஆறு ஆண்டுகளுக்கு முன் சிரியா அரசு தரப்பு முதன்முறையாக இந்த நகருக்குள் நுழைந்திருப்பதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

அந்தப் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் குர்து இனப் படைகள், அங்கு துருக்கிப் படைகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் எழுந்திருப்பதால், அரசிடம் உதவி கோரியிருந்தது.

குர்துக்களின் YPG படைகள் தீவிரவாதக் குழுக்களில் ஒன்று என துருக்கி கருதுகிறது.

சிரியாவில் இருந்து படைகளை விலக்கிக் கொள்வதாக அண்மையில் அமெரிக்கா வெளியிட்ட அறிவுப்பு, அமெரிக்க படைகளின் ஆதரவை பெற்றிருந்த குர்துக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு,

அமெரிக்கப் படைகள் எப்போது திரும்பப் பெறப்படும் என்பது குறித்து தெளிவில்லை.

சிரியாவில் ஐஎஸ் அமைப்பினர் வீழ்த்தப்பட்டுவிட்டனர் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தாம் வெளியிட்ட டிவிட்டர் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு சிரியாவில் இருந்து ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிக்க சுமார் 2,000 அமெரிக்கப்படையினர் உதவி செய்தனர். இன்னும் சில பகுதிகளில் சண்டை நடந்துகொண்டுதான் இருக்கிறது.

வடக்கு சிரியாவில் உள்ள குர்துப் பகுதியில் அமெரிக்கப் படைகள் பெருமளவில் நிலைகொண்டுள்ளன.

சிரியாவில் பெரும் பரப்பளவை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஐ.எஸ். குழுவினர் கைப்பற்றினர். அத்துடன், சிரியா மற்றும் இராக்கின் சுமார் எட்டு மில்லியன் மக்கள் மீது கடுமையான ஆட்சியை கட்டவிழ்த்துவிட்டது இந்த ஐ.எஸ். குழு.

இந்நிலையில் சிரியாவின் குர்துப் போராளிகள் மற்றும் அரபி போராளிகள் (சிரிய ஜனநாயகப் படையினர்) ஆகியோருடன் கூட்டு சேர்ந்து அமெரிக்கப் படையினர் கிட்டத்தட்ட ஐ.எஸ். குழுவினரை ஒழித்து அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை மீட்டனர்.

ஆனால், ஐ.எஸ். தீவிரவாதக் குழு முற்றிலும் அழிந்துவிடவில்லை. சிரியாவில் இன்னமும் 14,000 ஐ.எஸ். போராளிகள் இருப்பதாகவும், இதைவிட அதிக எண்ணிக்கையில் அருகில் உள்ள இராக்கில் அவர்கள் இருப்பதாகவும் சமீபத்திய அமெரிக்க அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

இந்தத் தீவிரவாதக் குழுவினர் கொரில்லா போர்முறைக்கு மாறி தங்கள் அமைப்பை மீண்டும் கட்டமைக்க முயல்வார்கள் என்ற அச்சம் நிலவுகிறது.

அமெரிக்காவுக்கும் குர்துப் போராளிகளுக்கும் இடையில் உள்ள கூட்டணி அண்டை நாடான துருக்கிக்கு எரிச்சலாகவே இருந்துவந்தது. சிரியா ஜனநாயகப் படையின் முக்கிய போராடும் பிரிவான குர்திஷ் ஒய்.ஜி.பி. படைப்பிரிவு, துருக்கியில் குர்து தன்னாட்சி கோரி போராடி வரும் (தடை செய்யப்பட்ட) குர்து குழுவினரோடு தொடர்புடையது என்று துருக்கி நினைக்கிறது.

சிரியாவில் உள்ள ஒய்.ஜி.பி. படையினர் மீது தங்கள் நாடு விரைவில் போர் தொடுக்கும் என துருக்கி அதிபர் ரிசெப் தயிப் எர்துவான் கூறியிருந்தார். தமது திட்டம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்புடன் தொலைபேசியில் விவாதித்தபோது அதற்கு ஆக்கப்பூர்வமான பதில் கிடைத்திருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

சிரியாவின் வடபகுதியில் மட்டுமில்லாமல், ஐ.எஸ். படையினரின் கட்டுப்பாட்டில் இறுதியில் எஞ்சியிருக்கும் தென் கிழக்குப் பகுதியிலும் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக நடைபெறும் சண்டையில் அமெரிக்கப் படை உதவி புரிந்துவருகிறது.

பட மூலாதாரம், Getty Images

யூப்ரடஸ் நதியின் மேற்குப்பகுதியில் அமைந்திருக்கும் மன்பிஜ் நகரம் பிப்ரவரி மாதத்திற்குள் இயல்பு நிலைக்கு கொண்டுவரப்படும் என்று அமெரிக்காவுடன் குர்து போராளிகளுக்கு ஒரு ஒப்பந்தம் இருந்தது.

அண்மை வாரங்களில் பதற்றங்கள் அதிகமாக இருந்த மன்பிஜ் நகரை சுற்றியிருந்த பிராந்தியத்தில், குர்து போராளிகள் மீது புதிய தாக்குதல்களை தொடுக்கவிருப்பதாக துருக்கி அதிபர் ரெசிப் தாயிப் எர்துவான் அறிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது மன்பிஜ் நகரில் சிரியா அரசு ஆதரவுப் படைகள் நுழைந்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: