வங்கதேச தேர்தல் வன்முறை - 17 பேர் பலி; மறுதேர்தல் நடத்த எதிர்க்கட்சிகள் கோரிக்கை

Bangladesh election

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு,

தலைநகர் டாக்காவில் நடந்த வன்முறையில் காயமடைந்த சலாஹுதீன் அஹமது எனும் எதிர்க்கட்சி வேட்பாளர்.

வங்கதேசத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற அந்நாட்டின் பதினோறாவது நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவின்போது நடந்த மோதல்களில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ள அந்நாட்டு எதிர்க்கட்சிகள் மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.

வாக்குப்பதிவுக்குப் பிறகு வெளியிடப்பட்டுள்ள முடிவுகளில் தற்போதைய ஆளும் கட்சியே மீண்டும் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும் என்று தெரிவிக்கின்றன.

16 கோடி மக்கள்தொகை அந்நாட்டில் இஸ்லாமியவாதத் தீவிரவாதம், வறுமை, பருவநிலை மாற்றம், ஊழல் ஆகியன இந்தத் தேர்தலின் முக்கியப் பேசுபொருட்களாக இருந்தன.

அதன் அண்டை நாடான மியான்மரின் வன்முறைக்கு உள்ளான பல லட்சம் ரோஹிஞ்சா இன முஸ்லிம்கள் தஞ்சமடைந்ததைத் தொடர்ந்து, வங்கதேசம் சர்வதேசத் தலைப்புச் செய்திகளில் சமீப ஆண்டுகளில் இடம் பிடித்தது.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு,

தனது வாக்கை செலுத்தும் பிரதமர் ஷேக் ஹசினா

2014இல் நடந்த தேர்தலை முக்கிய எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சி புறக்கணித்த நிலையில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்து முக்கியக் கட்சிகளும் போட்டியிடும் தேர்தலாக இத்தேர்தல் அமைந்துள்ளது.

வன்முறை சம்பவங்களால் பாதிக்கப்பட்டுள்ள இந்த தேர்தலில் ஏறக்குறைய 6 லட்சம் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணிகளுக்காக அமர்த்தப்பட்டனர்.

கடந்த 10 ஆண்டுகளாக பதவியில் இருக்கும் பிரதமர் ஷேக் ஹசினா தலைமையிலான அரசு சர்வாதிகாரத் தன்மையுடன் நடந்துகொள்வதாகவும், தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

வாக்குப்பதிவில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும் என்று அந்நாட்டுத் தேர்தல் ஆணையம் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளது.

துறைமுக நகரான சிட்டகாங்கில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, வாக்குப்பெட்டிகள் ஏற்கனவே நிரம்பி இருப்பதை பிபிசி செய்தியாளர் பார்த்துள்ளார். ஆனால், இது குறித்து எந்த தகவலையும் தெரிவிக்க அங்கிருந்த தேர்தல் அதிகாரி மறுத்துவிட்டார்.

பட மூலாதாரம், Getty Images

இன்றைய நாடாளுமன்ற தேர்தலில் மூன்று முக்கிய கூட்டணிகள் போட்டியிடுகின்றன. அவற்றை குறித்த குறித்த அடிப்படையான தகவல்களை இங்கு காண்போம்.

ஆளுங்கட்சியின் கூட்டணி

ஆளும் அவாமி லீக் கட்சி 14 கட்சிகள் இணைந்து இந்தக் கூட்டணியை அமைத்துள்ளது. இது மகா கூட்டணி என குறிப்பிடப்படுகிறது. 2005ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்தக் கூட்டணி வங்கதேச அரசியல் வரலாற்றில் வெற்றிகரமான கூட்டணியாக கருதப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images

இந்த கூட்டணிக்கு தலைமையேற்று வழிநடத்துபவர் மூன்று முறை பிரதமராக இருந்த ஷேக் ஹசினா.

இந்த கூட்டணியில் ஜதியா கட்சி, உழைப்பாளர் கட்சி, தாராளவாத ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட 14 கட்சிகள் உள்ளன.

எதிர்க்கட்சியின் கூட்டணி

முக்கிய எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சி இருபது கட்சிகள் இணைந்த கூட்டணிக்கு தலைமை வகிக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவர் கலிதா ஜியா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்போதிலிருந்தே அந்தக் கூட்டணியில் குழப்பம் நிலவி வருகிறது. தம்மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறார் முன்னாள் பிரதமரான ஜியா.

பட மூலாதாரம், Getty Images

அவரது வேட்பு மனு இதன் காரணமாக நிராகரிக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்திடம் மூன்று முறை இது தொடர்பாக மேல் முறையீடு செய்தார். அதனை நிராகரித்துவிட்டது தேர்தல் ஆணையம்.

வங்கதேசத்தின் மிகப்பெரிய இஸ்லாமிய கட்சியான ஜமாத் இ இஸ்லாமி இந்த கூட்டணியில் உள்ளது.

இந்த கூட்டணியை அக்டோபர் மாதம் உருவாக்கப்பட்டது. இந்த கூட்டணிக்கு தலைமை வகிப்பவர் கமால் ஹூசைம். தற்போதைய பிரதமரின் தந்தையான முஜூபுர் ரஹுமானின் நெருங்கிய நண்பர் இவர்.

வங்க தேசத்தின் அரசமைப்பு சட்டத்தை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர் அவர். தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழலையும், தீவிரவாதத்தையும் ஒழிப்போம் என்ற வாக்குறுதியை இவர் முன் வைக்கிறார்.

இடது ஜனநாயகக் கூட்டணி

இடது ஜனநாயக் கூட்டணி இவ்வாண்டு ஜூலை மாதம் உருவாக்கப்பட்டது. வங்கதேச இடதுசாரி கட்சி, வங்கதேச சோஷியலிஸ்ட் கட்சி உள்ளிட்ட எட்டு இடதுசாரி கட்சிகள் இந்தக் கூட்டணியில் உள்ளன.

பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கு ஊறு விளைவிக்கும் சட்டங்கள் மாற்றி அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: