வடகொரிய தலைவர் கிம் தென்கொரிய அதிபருக்கு கடிதம்: 'உங்களை அடிக்கடி சந்திக்க விரும்புகிறேன்'

Kim Jong-un

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு,

2018இல் கிம் ஜாங்-உன் (இடது) மற்றும் மூன் ஜே-இன் (வலது) ஆகியோர் மூன்று முறை சந்தித்தனர்.

கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத பயன்பாட்டை நீக்க, வரும் 2019ஆம் ஆண்டில் தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் உடன் அடிக்கடி சந்திப்புகள் மேற்கொள்ள விரும்புவதாக வடகொரியத் தலைவர் கிம் ஜாங்-உன் தெரிவித்துள்ளார்.

தென்கொரிய அதிபருக்கு அவர் எழுதியுள்ள அரிதான கடிதம் ஒன்றில், 'இரு நாடுகளுக்கும் இடையே அமைதி முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள விரும்புவதாகவும், இரு நாடுகளும் இணைந்து கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதப் பயன்பாட்டைத் தவிர்க்கும் முயற்சிகளில் ஈடுபடவேண்டும்' என்று கூறியுள்ளதாகவும், தென்கொரிய அதிபரின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.

2018இல் தென்கொரியத் தலைநகர் சோலுக்கு தாம் பயணம் மேற்கொள்ளாதது குறித்து மிகவும் வருந்துவதாகவும் கிம் அக்கடிதத்தில் கூறியுள்ளார்.

செப்டம்பர் 2018இல் மூன் ஜே-இன் வடகொரியத் தலைநகர் பியாங்யாங்குக்கு பயணம் மேற்கொண்டபின், அதைப்போலவே தாமும் தென்கொரிய வரவுள்ளதாக கிம் அப்போது உறுதியளித்திருந்தார்.

அந்தப் பயணத்தின்போது இரு நாடுகளும் மீண்டும் ஒரே நாடாக வேண்டும் என் மூன் வலியுறுத்தியிருந்தார்.

1953இல் இரு நாடுகளுக்கும் இடையே நடந்த போர் இன்னும் அலுவல்பூர்வமாக முடித்து வைக்கப்படாத நிலையில், 2018இல் கிம் வெளிப்படுத்திய சமரச நடவடிக்கைகள் இரு கொரிய நாடுகளின் உறவுகளையும் மேம்படுத்த உதவின.

அந்தக் கடிதம் மூனுக்கு எவ்வாறு அனுப்பப்பட்டது என்பதை வெளிப்படுத்தாத அவரது செய்தித்தொடர்பாளர், 'வருங்கால நிலவரங்களைக் கருத்தில் கொண்டு, சோல் வர வேண்டும் என்ற உறுதியான விழைவை' கிம் வெளிப்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

2018இல் கிம் ஜாங் உன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உடன் மேற்கொண்ட சிங்கப்பூர் உச்சி மாநாடுதான் பதவியில் இருக்கும் அமெரிக்க அதிபர் ஒருவர் வடகொரிய ஆட்சியாளரை சந்திக்கும் முதல் நிகழ்வாகும்.

எனினும், அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையேயான பதற்றத்தைத் தணிக்கும் முயற்சிகள் சமீப மாதங்களில் தோய்வைச் சந்தித்துள்ளன.

அணு ஆயுதங்களைக் கைவிட வடகொரியா முழுமையாகத் தயாராக இல்லை என்று அமெரிக்காவும், அமெரிக்காவால் புதிதாக விதிக்கப்பட்டுள்ள தடைகள் தங்கள் பொருளாதாரத்தை மேலும் முடக்கும் வகையில் அமைந்துள்ளதாக வடகொரியாவும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டினர்.

இருப்பினும், 2019இல் மேலும் ஒரு டிரம்ப்-கிம் சந்திப்பு நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: