ஹூதி கிளர்ச்சியாளர்கள்: பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் உணவை திருடுவதாக சர்வதேச அமைப்பு குற்றச்சாட்டு

கோப்புப் படம் படத்தின் காப்புரிமை AFP
Image caption கோப்புப் படம்

ஏமனில் தனது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பப்படும் உணவை தடுத்திடும் மற்றும் பாதை மாற்றிடும் செயலை கிளர்ச்சியாளர்கள் அமைப்பான ஹூதி குழு நிறுத்திட வேண்டுமென உலக உணவு திட்ட அமைப்பு கோரியுள்ளது.

ஐக்கிய நாடுகள் (ஐ.நா.) அமைப்பு நடத்திய ஆய்வு ஒன்றில் ஏமன் தலைநகர் சானாவில் பாதிக்கப்பட்ட மக்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட உணவை இன்னமும் பெறவில்லை என்று கண்டறிந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

உணவு விநியோக மையங்களில் இருந்து அதற்கு உரிய வாகனங்கள் அகற்றப்பட்டு, அங்கிருக்கும் உணவு பொருட்கள் வெளிச்சந்தைக்கு அனுப்பப்படுவதாகவும் அது தெரிவித்துள்ளது.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து உடனடியாக எதிர்வினையாற்றாத ஹூதி போராளிகள் , பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பப்படும் உணவினை தாங்கள் எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை AFP

ஏறக்குறைய 2 கோடி பேர் ஏமனில் உணவு பஞ்சத்தால் தவிப்பதாகவும், அதில் ஒரு கோடி பேருக்கு தாங்கள் எப்போது அடுத்த வேளை உணவை உண்ண போகிறோம் என்று தெரியாது என ஐ.நா. அமைப்பு கூறியுள்ளது.

ஏமனில் ஏறக்குறைய 50 லட்சம் குழந்தைகள் வறட்சி மற்றும் பஞ்சத்தால் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளதாக தன்னார்வ தொண்டு நிறுவனமான 'சேவ் த சில்ரன்' முன்பு எச்சரித்தது குறிப்பிட்டத்தக்கது.

கடந்த 2015-ஆம் ஆண்டில், ஹூதி அமைப்பினர் நாட்டின் மேற்கு பகுதிகளில் பெரும்பான்மையான இடங்களை ஹூதி அமைப்பினர் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து கொண்டதால் ஏமனின் அதிபர் நாட்டை விட்டு தப்பி செல்ல நேர்ந்தது.

இச்சமயத்தில் செளதி தலைமையிலான கூட்டணி அந்நாட்டின் விவாகரங்களில் தலையிட, இது இரு தரப்புக்கும் இடையேயான மோதலை அதிகரித்தது.

படத்தின் காப்புரிமை EPA

ஏமனில் நடைபெற்று வரும் மோதல்களால் அதிகரித்து வரும் உணவுப் பொருட்களின் விலை மற்றும் ஏமன் நாட்டு நாணயத்தின் வீழ்ச்சி ஆகியவற்றால் பல குடும்பங்கள் உணவுப் பொருட்கள் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படும் ஆபத்தை ஏற்படுத்தியது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியாக ஒதுக்கப்பட்ட உணவு பொருட்கள் அவர்களை சரியான நேரத்தில் சென்றடைகிறதா என்று உலக உணவு திட்ட அமைப்பு சரிபார்ப்பு ஆய்வு நடத்தியது.

அதில் மேற்கூறிய விஷயங்கள் கண்டறியப்பட்டதாக தெரிவித்த அந்த அமைப்பின் செயல் இயக்குனரான டேவிட் பெஸ்லே, இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், ''பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்படும் உணவை வேறிடத்துக்கு எடுத்து செல்வது, உணவில்லாத ஏழை மக்களின் வாயில் இருந்து அவர்களின் உணவை திருடுவதற்கு சமம்'' என்று தெரிவித்துள்ளார்.

''ஏமனில் குழந்தைகள் பசியால் இறந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், இது போன்ற செயல்கள் மிகவும் கோபத்தை வரவழைக்கிறது. இந்த குற்ற செயல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்'' என்றும் அவர் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: