அமெரிக்காவில் பத்தாண்டுகளுக்கு மேல் நினைவிழந்த நிலையிலுள்ள பெண்ணுக்கு குழந்தை பிறந்த கொடூரம்

படத்தின் காப்புரிமை Getty Images

பத்தாண்டுகளுக்கு மேல் நினைவிழந்து படுக்கையிலேயே இருந்துவரும் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது

அமெரிக்காவில் ஒரு தசாப்த காலத்துக்கு மேலாக தன்னுணர்வற்று மருத்துவமனையில் படுக்கையிலே இருந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது.

சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையில் தலைமை நிர்வாக அதிகாரி தற்போது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

அமெரிக்காவில் ஹஸீண்டா மருத்துவமனையில் ஒரு பெண் நோயாளி நினைவிழந்த நிலையில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறார். மருத்துவமனையில் உரிய கவனிப்பில் அவர் உயிரோடு வாழ்ந்து வருகிறார்.

இந்நிகழ்வு தொடர்பாக பாலியல் தாக்குதல் குறித்த விசாரணையை துவங்கியுள்ளது காவல்துறை. பெயர், முகம் வெளியிடப்படாத அப்பெண் கடந்த டிசம்பர் மாதம் 29-ம் தேதி ஒரு குழந்தையை பெற்றெடுத்தார்.

''எனக்கு சொல்லப்பட்ட தகவலின்படி அப்பெண் முனகிக்கொண்டிருந்தார். அப்போது செவிலியர்கள் அவருக்கு என்ன பிரச்சனை எனத் தெரியாமல் திகைத்தனர்'' என ஒரு அடையாளம் காட்டப்படாத நபர் அமெரிக்க தனியார் தொலைக்காட்சி சேனலில் தெரிவித்திருக்கிறார்.

''அவர் குழந்தையை பெற்றெடுப்பதற்கு முன்புவரை அப்பெண் கர்ப்பமாக இருந்ததே எந்தவொரு மருத்துவமனை ஊழியருக்கும் தெரியாது'' என அந்நபர் தெரிவித்திருக்கிறார்.

இந்த கொடூரமான சூழ்நிலைக்கு முழு பொறுப்பையும் நிறுவனத்தின் நிர்வாக சபை பொறுப்பேற்கிறது என நிறுவனத்தின் துணை செயல் தலைவர் கூறியுள்ளார்.

அந்த மருத்துவமனையில் நோயாளிகள் நிர்வாணமாக இருக்கும்போது அல்லது அவர்களின் உடல்களை துடைக்கும்போதோ போதுமான தனியுரிமை இல்லை என முறைகேடு குறித்து புதிய குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக நியூயார்க் டைம்ஸின் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரம் தற்போது விசாரணையில் இருப்பதால் மேற்கொண்டு எந்தவொரு தகவலையும் தர மறுத்துவிட்டார் ஃ பீனிக்ஸ் காவல்துறை செய்திதொடர்பாளர்.

ஹசீண்டா மருத்துவமனை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் என தெரிவித்திருக்கிறது.


படத்தின் காப்புரிமை Getty Images

முன்னேறிய வகுப்பினருக்கு இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

இந்தியாவில் முன்னேறிய வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா நாடாளுமன்ற மக்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேறியது.

இப்படி ஒரு சட்டத்தைக் கொண்டுவர மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதாக திங்கள்கிழமை செய்தி வெளியானது. அடுத்த நாளே, செவ்வாய்க்கிழமையே, இதற்கான சட்ட முன்வடிவை (மசோதாவை) மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் தாவார் சந்த் கேலாட் நாடாளுமன்றத்தின் மக்களவையில் தாக்கல் செய்தார்.

இரவே இந்த மசோதா மீதான வாக்கெடுப்பு நடந்தது.

காங்கிரஸ் கட்சியும் இந்த மசோதாவை ஆதரித்ததால், மொத்தம் வாக்கெடுப்பில் பங்கேற்ற 326 பேரில் 323 பேர் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். மூவர் எதிர்த்து வாக்களித்தனர்.

மேலும் படிக்க - முன்னேறிய வகுப்பினருக்கு இடஒதுக்கீடு: மக்களவையில் நிறைவேறியது மசோதா


படத்தின் காப்புரிமை Reuters

''ஸ்டெர்லைட் குறித்து தமிழக அரசு சரியான வாதங்களை வைக்கவில்லை''

தமிழக அரசு சரியான வாதங்களை முன்வைக்காததால்தான் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதித்தது என்று ஆலை எதிர்ப்பாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை சுற்றுச்சூழலுக்கும், அப்பகுதியில் வசிக்கும் மக்களின் உடல் நலனுக்கும் பாதிப்பை ஏற்படுத்திவருவதாக குற்றம்சாட்டியும், அந்த ஆலையை மூட வலியுறுத்தியும் மக்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக போராடிவந்தனர்.

இந்நிலையில் கடந்த மே மாதம் நடத்தப்பட்ட ஆலை எதிர்ப்புப் போராட்டம் ஒன்றின்போது போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 14 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து ஆலையை மூட உத்தரவிட்டது தமிழக அரசு. இந்த உத்தரவை எதிர்த்து புது டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்தது ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம்.

இதையடுத்து ஆலையினை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு ஒன்று அமைத்தது பசுமைத் தீர்ப்பாயம். அந்தக் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் ஆலையை மீண்டும் திறக்கலாம் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடந்த மாதம் அறிவித்தது.

இதை எதிர்த்து செயற்பாட்டாளர் பாத்திமா சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் முறையீடு செய்கிறார். இதன் அடிப்படையில், தாம் விசாரித்து உத்தரவிடும் வரையில் இப்போதுள்ள நிலையே தொடரவேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், உச்ச நீதிமன்றத்தை அணுகியது. இதற்கிடையே, தமிழக அரசும் பசுமைத் தீர்ப்பாயத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகியது.

இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாரிமன், நவீன் சின்ஹா அடங்கிய அமர்வு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு செல்லும் என்றும் ஆனால், இந்த வழக்கை விசாரித்து உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பே இறுதியானது என்றும் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. இதன் மூலம் ஆலையைத் திறக்க வழி ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க - ஸ்டெர்லைட் பற்றி தமிழக அரசு சரியான வாதங்களை வைக்கவில்லை: எதிர்ப்பாளர்கள் கருத்து


படத்தின் காப்புரிமை Facebook

"இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல": கி. வீரமணி

முன்னேறிய வகுப்பினரில் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ளவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கே முரணானது; இந்த அரசியலமைப்பை உருவாக்கியவர்களின் கொள்கைக்கு எதிரானது என்கிறார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி.

நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது, உயர் ஜாதியினரில் பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்டோருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தினார். இதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை நீதிபதி இந்திரா சஹானி தலைமையில் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாஸன அமர்வு விசாரித்தது. இடஒதுக்கீடு என்பது 'சமூக ரீதியிலும் கல்வி ரீதியிலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்குத்தான்; பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அல்ல' என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் "இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல; அதற்கு வேறு திட்டங்களைக் கொண்டுவர வேண்டும். இது வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்பளிப்பது" என்பதைச் சுட்டிக்காட்டியது என்கிறார்.


படத்தின் காப்புரிமை Getty Images

அயோத்தி நிலப் பிரச்சனையை விசாரிக்க ஐந்து நீதிபதிகள் அமர்வு

அயோத்தி நிலப் பிரச்சனையை விசாரிக்க தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் ஐந்து நீதிபதிகள் அமர்வை நியமித்து உச்சநீதிமன்றம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த ஐந்து நீதிபதிகள் அமர்வில் நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, என்.வி.ரமணா, யு.யு.லலித், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த அமர்வு இந்த வழக்கை ஜனவரி 10-ம் தேதி (நாளை மறுநாள்) விசாரணைக்கு எடுக்கும்.

மேலும் படிக்க - அயோத்தி நிலப் பிரச்சனையை விசாரிக்க ஐந்து நீதிபதிகள் அமர்வு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்