ரஷ்யாவுக்கு வேலை பார்த்தாரா டிரம்ப்? - விசாரணை நடத்திய எஃப்.பி.ஐ

படத்தின் காப்புரிமை AFP/GETTY

எஃப்.பி.ஐ புலனாய்வு அமைப்பின் தலைவராக இருந்த ஜேம்ஸ் காமி, 2017இல் பதவிநீக்கம் செய்யப்பட்ட பிறகு, ரஷ்யாவுக்காக டிரம்ப் ரகசியமாக எதாவது வேலை செய்தாரா என்பது குறித்த விசாரணையை எஃப்.பி.ஐ தொடங்கியுள்ளதாக இந்த வாரத்தின் தொடக்கத்தில் நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.

ஹெல்ஸின்கியில் புதின் உடனான சந்திப்பில் இரு நாட்டு அதிபர்கள் சந்திக்கும்போது பேசப்படும் பொருளாதாரம் உள்ளிட்டவை குறித்து பேசியதாகவும், "பல நேர்மறையான விவகாரங்கள் பற்றிய சிறப்பான உரையாடலாக அது இருந்தது," என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

தாம் பல உலக நாடுகளின் தலைவர்களை தனியாகச் சந்திப்பதாகவும், புதின் உடனான சந்திப்புகள் மட்டுமே அதிக கவனத்தைப் பெறுகின்றன என்றும் டிரம்ப் கூறுகிறார்.

அந்தத் தகவல்கள் ஆத்திரமூட்டக்கூடிய அளவுக்கு மிகவும் தவறானவை என்பதால் அவை குறித்து கருத்து எதையும் தெரிவிக்க விரும்பவில்லை என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் சாரா சேண்டர்ஸ் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ரகசியமாக ரஷ்யாவுக்காக பணியாற்றினாரா என்ற கோணத்தில் அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ விசாரணை நடத்தியாக செய்தி வெளியிட்ட நியூயார்க் டைம்ஸ் நாளிதழுக்கு வெள்ளைமாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption பின்லாந்து தலைநகர் ஹெல்ஸின்கியில் ஜூலை 2018இல் டிரம்ப் புதினைச் சந்தித்தார்

கடந்த 2017ஆம் ஆண்டு மே மாதம் எஃப்.பி.ஐ-யின் இயக்குநர் பொறுப்பிலிருந்து ஜேம்ஸ் கோமியை நீக்கிய அதிபர் டிரம்ப் செயல்பாட்டின் மீது எஃப்.பி.ஐயின் மற்ற உயரதிகாரிகள் சந்தேகமடைந்ததாக அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து, டிரம்ப் தேசப்பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளாரா என்று விசாரணை நடத்தப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுபோன்ற விசாரணை மேற்கொண்டதற்கான எந்த ஆதாரமும், காரணமும் இல்லை என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

"இது அபத்தமான குற்றச்சாட்டு" என்று வெள்ளை மாளிகையின் செய்திப்பிரிவு செயலாளர் சாரா ஹெக்கபீ கூறியுள்ளார்.

"பாரபட்சமாக செயல்பட்டதற்காக எஃப்.பி.ஐயின் இயக்குனர் ஜேம்ஸ் கோமி பணிநீக்கம் செய்யப்படடார். அவருக்கு அடுத்த நிலை பதவியை வகித்த பொய்யரான ஆண்ட்ரு அந்த அமைப்பினாலேயே நீக்கப்பட்டார்" என்று சாரா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா இருந்தபோது, ரஷ்யா உள்ளிட்ட எதிரி நாடுகள் நமக்கு அழுத்தம் கொடுத்தன. ஆனால், டிரம்ப் ரஷ்யா மீது கடுமையான போக்கை கையாண்டு வருகிறார்."

கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, ரஷ்யா டொனால்டு டிரம்பிற்கு சாதகமான முடிவுகளை ஏற்படுத்தும் வகையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் குறித்து ஏராளமான போலிச் செய்திகளை பரப்பியதோடு, ஹேக்கிங் செயல்பாடுகளில் ஈடுபட்டதாக அமெரிக்கா புலனாய்வு அமைப்புகளின் விசாரணை முடிவுகள் தெரிவிக்கின்றன.

எஃப்.பி.ஐ எதற்காக விசாரணை நடத்தியது?

படத்தின் காப்புரிமை Getty Images

எப்.பி.ஐ விசாரணையை ஒரு ஒருங்கிணைந்த புலனாய்வு மற்றும் குற்ற விசாரணை என்று நியூயார்க் டைம்ஸின் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டிரம்ப் வேண்டுமென்றே அமெரிக்காவின் நலன்களுக்கு எதிராகவும், ரஷ்யாவிற்கு ஆதரவாகவும் செயல்பட்டாரா அல்லது "தன்னை அறியாமலேயே மாஸ்கோவின் செல்வாக்கிற்கு அடிபணிந்துவிட்டாரா" என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டதாக அந்நாளிதழின் செய்தி குறிப்பிடுகிறது.

அதுமட்டுமின்றி, எப்.பி.ஐ இயக்குனர் கோமியை பதவியிலிருந்து நீக்கியதில் சட்டவிதிகள் மீறப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் குற்ற விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்த விசாரணையின்போது பேசிய ஜேம்ஸ் கோமி, 'நான் உங்களிடமிருந்து விசுவாசத்தை எதிர்பார்க்கிறேன்' என்று டிரம்ப் தன்னிடம் கூறியதாகவும், மேலும் அதிபரின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கல் பிலின் மீதான விசாரணையை முடிப்பதற்கு அழுத்தம் கொடுத்ததாகவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 20 மாதங்களாக நடந்துவரும் ராபர்ட் மியூலர் விசாரணை ஏற்கனவே டிரம்ப்க்கு நெருக்கமான சிலர் மீது தவறு இருப்பதாகக் கூறியுள்ளது.

இந்த விசாரணை தன் மீதான பழிவாங்கல் நடவடிக்கை என டிரம்ப் கூறியுள்ளார்.

பிரசரா நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக, டிரம்பின் வழக்கறிஞர் மைக்கேல் கோஹெனுக்கு ஏற்கனேவே மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: