இரானில் வீட்டில் புகுந்த சரக்கு விமானம்: 15 பேர் பலி

விமான நிலையத்தையும், குடியிருப்புப் பகுதியையும் பிரிக்கும் சுவற்றை இடித்துக்கொண்டு சென்றது சரக்கு விமானம். படத்தின் காப்புரிமை EPA
Image caption விமான நிலையத்தையும், குடியிருப்புப் பகுதியையும் பிரிக்கும் சுவற்றை இடித்துக்கொண்டு சென்றது சரக்கு விமானம்.

இரான் தலைநகர் தெஹ்ரான் அருகே தரையிறங்கும்போது ஒடுதளத்தை தாண்டிச் சென்ற ஒரு சரக்கு விமானம் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் கொல்லப்பட்டனர்.

தெஹ்ரானுக்கு மேற்கே 40 கி.மீ. தொலைவில் உள்ள கராஜ் நகரின் ஃபாத் விமான நிலையத்தில் மோசமான வானிலையில் தரையிறங்கிய இந்த போயிங் 707 ரக விமானம் கட்டுப்பாட்டை இழந்து, ஒடுதளத்தை தாண்டி விமான நிலைய சுவற்றை இடித்துக்கொண்டு அருகில் உள்ள குடியிருப்புப் பகுதியில் நுழைந்தது.

விமானத்தில் இருந்த 16 பேரில் விமானப் பொறியாளர் மட்டுமே உயிருடன் கண்டெடுக்கப்பட்டுள்ளார். தரையில் இருந்த எவரும் இந்த விபத்தில் உயிரிழக்கவில்லை. விமானத்தின் குரல் பதிவு இருக்கும் 'கருப்புப் பெட்டி ' விபத்து நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது என்று உள்ளூர் ஊடகம் தெரிவிக்கிறது.

படத்தின் காப்புரிமை EPA
Image caption விமானப் பொறியாளர் மட்டுமே உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

விபத்துக்குள்ளான விமானம் இரானுக்கு சொந்தமானது என்றும், விமானத்தில் இருந்த அனைவரும் இரானிய குடிமக்கள் என்றும் ராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் அரசுத் தொலைக்காட்சியில் உறுதிப்படுத்தினார்.

இரானின் சிறப்புப் பாதுகாப்புப் படைப் பிரிவான புரட்சிகர காவல் படைக்கு சொந்தமானது ஃபாத் விமான நிலையம். மத்திய இரானிய மாகாணமான அல்போர்சில் இது அமைந்துள்ளது.

விபத்துக்குள்ளான இந்த விமானம் கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக்கில் இருந்து இறைச்சியை ஏற்றி வந்துகொண்டிருந்தது.

ஃபாத் விமான நிலையத்துக்கும், பயம் சர்வதேச விமான நிலையத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் இந்த விமானத்தின் சிதறிய பாகங்கள் வீடுகளுக்கு இடையில் புகைந்துகொண்டிருந்தன.

விபத்து நடந்த நேரத்தில் வீடுகள் காலியாக இருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு இரானில் ஒரு பயணிகள் விமானம் மலையில் மோதி விபத்துக்குள்ளானதில் 66 பேர் உயிரிழந்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :