போலந்து மேயர் பாவேவூ அடமோவிட்ச்: மேடையில் கத்திக்குத்து, மருத்துவமனையில் மரணம்

பாவேவூ அடமோவிட்ச் படத்தின் காப்புரிமை Reuters
Image caption பாவேவூ அடமோவிட்ச் சட்டம் பயின்று இளம் வயதில் அரசியலுக்கு வந்தவர்.

அறக்கட்டளை கூட்டம் ஒன்றில் பங்கேற்றபோது மேடையிலேயே கத்தியால் குத்தப்பட்ட போலந்தின் டேன்சிக் நகர மேயர் பாவேவூ அடமோவிட்ச் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

அவருக்கு வயது 53.

ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்தக் கூட்டத்தில் நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் முன்னிலையிலேயே அவர் குத்தப்பட்டார். உடனடியாக உள்ளூர் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவருக்கு ஐந்து மணி நேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், அவரை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை.

இந்தக் கொலையைச் செய்ததாக 27 வயதுள்ள, ஸ்டெஃபான் என்ற பெயருள்ள ஒரு நபரை போலீசார் கைது செய்துள்ளனர். முன்னரே குற்றப் பின்னணி கொண்ட அந்த நபர் ஊடக நுழைவுச் சீட்டை பயன்படுத்தி மேடைக்கு சென்றதாக போலீசார் நினைக்கின்றனர். ஆனால் அவரைப் பற்றிய கூடுதல் தகவல்கள் கிடைக்கவில்லை.

குத்தியவுடன் "அடமோவிட்ச் இறந்தார்" என்றும், சிவிக் பிளாட்ஃபார்ம் என்ற அந்த மேயரின் கட்சியால் தாம் தவறாக தண்டிக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்ட அந்த நபர் மேடையிலேயே கத்தியுள்ளார்.

அடமோவிட்ச் இறந்துவிட்டார் என்பதை போலந்தின் சுகாதாரத் துறை அமைச்சர் லூகாஸ் சுமோவ்ஸ்கி ஊடகங்களிடம் தெரிவித்தார்.

கிறிஸ்துமஸ் அறக்கட்டளை நடத்திய மிகப் பெரிய இசை நிகழ்வு ஒன்றில் அடமோவிட்ச் பங்கேற்றபோது இந்த நிகழ்வு நடந்தது. மருத்துவமனைகளுக்கு கருவிகள் வாங்குவதற்காக தன்னார்வலர்கள் ஆண்டுதோறும் நடத்தும் நிகழ்ச்சி இது.

குத்தப்படுவதற்கு சிறிது நேரம் முன்புகூட மேடையில் இருந்தபடியே நிகழ்ச்சியின் படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார் அடமோவிட்ச்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்